அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரி —என் வயது: 56, இரு தங்கைகள், ஒரு தம்பி.தம்பி, வயது: 50. திருமணமாகி, 25 ஆண்டுகள் ஆகின்றன. அவனுக்கு, ஒரு மகள், ஒரு மகன். திருச்சியில் வசிக்கிறான். கேவலமான பெர்சனாலிட்டி. தனக்குரிய செங்கல் சூளையையும், ஒரு வீட்டையும், அவனுக்கு உயில் எழுதி வைத்து, படித்த பெண்ணை, திருமணமும் செய்து வைத்தார், அப்பா.திருமணமான முதல் நாளிலிருந்தே, தம்பி மனைவிக்கு, அவனை பிடிக்கவில்லை. செங்கல் சூளையில் வேலை பார்த்து, முகம், உடல் முழுக்க செம்மண் புழுதியுடன் வீட்டுக்கு வருவான். நாளாக நாளாக, தம்பி மனைவியின் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தது.தம்பி, வீட்டில் இல்லாதபோது, நிறைய ஆண் நண்பர்கள், அவன் வீட்டுக்கு வந்து போக ஆரம்பித்தனர். விஷயம், அரசல் புரசலாக, எங்களுக்கு தெரிந்து, தம்பி மனைவியை கண்டித்தோம்.'அரை கிறுக்கை ஏமாத்தி, எனக்கு தாலி கட்ட வச்சுட்டு, இப்ப என்ன நாட்டாமை பண்ண வர்றீங்க... அவங்கவங்க வேலைய பாத்துக்கிட்டு போங்க...' என, திட்டினாள். தம்பியோ, மனைவியின் தவறுகளுக்கு, காவலனாக மாறி போனான்.மருமகளின் தவறான நடத்தையை கண்டு, பொறுக்காத அப்பா, மாரடைப்பால் இறந்து போனார்.அவனிடம் அறிவுரை கூறி, மனைவியை கண்டித்து வைக்க கூறினோம். தம்பியோ, அவளிடம் நேரடியாக கேட்க பயந்தான். அவளின் திருவிளையாடல்கள் அதிகரித்தன. முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை, தம்பியின் சாயலில் இல்லை.பெயருக்கு, புருஷனாய், 25 ஆண்டுகள் ஓட்டி விட்டான். குழந்தைகள் இருவரும், தம்பியை, பெரியப்பா என்றே அழைப்பர்.'மகளுக்கு திருமணம் செய்யப் போகிறேன். 5 லட்சம் ரூபாய் கடனாய் கொடுங்கள். செங்கல் சூளையை அடமானமாய் எழுதி தருகிறேன்...' என, எங்களிடம் உதவி கேட்டு வந்தான், தம்பி. 'நடத்தை சரியில்லாத பெண்ணை, வெட்டி விடாமல், அவளுடன் வாழ்ந்து, வேறு யாருக்கோ பெற்ற மகளுக்கு, கடன் வாங்கி, திருமணம் செய்ய வருகிறாயே, உனக்கு வெக்கமாயில்லை போடா...' என, விரட்டினோம். தொடர்ந்து, அழைப்பிதழுடன் வந்து, கடன் கேட்டு, கெஞ்சுகிறான், தம்பி. என்ன செய்யலாம்?— இப்படிக்கு,அன்பு சகோதரி.அன்பு சகோதரிக்கு ——அழகிலும், அறிவிலும் பொருத்தமில்லாத பெண்ணை, அப்பா பார்க்கும்போதே, தடுத்திருக்கலாம், உன் தம்பி. திருமணமான முதல் நாளிலிருந்தே, அதிருப்தியாய் வாழும் மனைவிக்கு, விவாகரத்து கொடுக்காமல், தம்பி, மவுனம் சாதித்தது ஏன்...தன் பலவீனம், வெளி உலகத்துக்கு தெரியாமலிருக்க, தவறு செய்யும் மனைவிக்கு உடந்தையாய் இருந்திருக்கிறார். தம்பியின் இரு குழந்தைகள், அவனுக்கு பிறந்தவர்கள் இல்லை என, எப்படி உறுதியாக கூற முடியும். அரைகுறை தாம்பத்தியம் செய்பவர்களுக்கும், குழந்தைகள் பிறக்கதான் செய்கின்றன.தவறு செய்யும் மனைவியை, விவாகரத்து செய்வதும், மன்னித்து அவளுடன் சேர்ந்து வாழ்வதும், தம்பியின் உரிமை சார்ந்த விஷயம். அதில் தலையிட, அந்த ஒரு விஷயத்தை வைத்து, உங்கள் தம்பியை வெறுத்து ஒதுக்க, நீங்கள் யார்...தத்தெடுக்கும் குழந்தைகள் மீது, உயிரையே வைத்திருக்கும் அப்பாக்களை அறிவேன். ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்... இரு குழந்தைகளும், திருமண பந்தம் மீறிய உறவில் பிறந்தவர்களாகவே இருக்கட்டும். அவர்கள் மீது பாசத்தை கொட்டி, கடன்பட்டு, திருமணத்தை, தம்பி நடத்த துடிப்பது, இதயத்துக்கு நெருக்கமான விஷயம்.திருமணமான முதல் ஐந்தாறு ஆண்டுகள், தம்பியின் மனைவி அப்படி இப்படி இருந்திருக்கலாம். அதன்பின் இருவருக்கும் இடையே, தாம்பத்திய திருப்தியை மீறிய அன்னியோன்யம் பூத்திருக்கக்கூடும்.இரு குழந்தைகளுக்கும், வெற்றிகரமாக திருமணம் நடத்தி முடித்தபின், தம்பியும், அவர் மனைவியும் இரண்டாவது, 'இன்னிங்ஸ்' திருமண வாழ்க்கையை, ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பர்.இளமையின் வேகத்தில் தப்பிதமாக ஆடியவர்கள், முதுமையின் அரவணைப்பில் ஒழுக்க விதிகளுக்கு திரும்பி விடுகின்றனர்.உதவி என்று, தம்பி கேட்டு வந்தபோது, நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்... அவனை வரவேற்று, விருந்தோம்பல் முடித்து, மகளின் திருமணத்துக்கு ஆகும் மொத்த செலவு எவ்வளவு, கையில் எவ்வளவு உள்ளது, பற்றாக்குறை எவ்வளவு என, கேட்டு தெரிந்திருக்க வேண்டும்.மீதி, ஆறு லட்சம் ரூபாய் எனில், மூன்று சகோதரிகளும், ஆளுக்கு இரண்டு லட்ச ரூபாயை, திருப்பி தர வேண்டியிராத கடனாக கொடுத்திருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்னதாக சென்று, திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி, மூன்று அக்காக்களும் மனநிறைவாக, அவரவர் ஊர் திரும்புங்கள்.யாருடைய தவறுகளையும் முழுமையான விசாரணை இன்றி, ஒரு பார்வையில் விசாரித்து, தண்டனை தரும் நீதிபதி ஆகாதீர். தவறுகளை முழு மனதாக மன்னித்து, இறைவனிடம் அனுப்பி விடுங்கள்.அக்காக்கள், தம்பிகளுக்கு இரண்டாம் அம்மா போல. தம்பியின் உருவ தோற்றத்தை பழிப்பது, அம்மாக்களின் குணமல்ல. அவனின் சில அம்சங்கள் உங்களிடமும் ஒட்டியிருக்கக்கூடும். பிறர் அறியாமல் செய்த ஒரு தவறை, நீங்கள் மன்னித்தால், உங்களின் பத்து தவறுகளை இறைவன் மன்னிப்பான் சகோதரிகளே!— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.