உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மா -நர்சிங்கில் பி.எஸ்சி., - எம்.எஸ்சி., - பி.ஹெச்.டி., முடித்து, நர்சிங் கல்லுாரியில் டியூட்டராக பணிபுரிந்தேன். 'கொரோனா' காரணமாக வேலை இழந்து வீட்டில் உட்கார்ந்தேன். அப்போதுதான், தினசரியில் ஒரு விளம்பரம் பார்த்தேன்.'பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட, 60 வயது முதியவரை பராமரிக்க, நர்ஸ் தேவை. வீட்டோடு இருந்து முதியவரை, 24 மணி நேரமும் கவனித்து கொள்ள வேண்டும். சம்பளம் தகுதிக்கேற்ப. முதியவரை பூரணமாக குணப்படுத்தி கொடுத்தால், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும்...' என்றிருந்தது.எனக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. ஆபரேஷன் தியேட்டர் அனஸ்தீஸியா உதவியாளராக பணிபுரிகிறார், கணவர். அந்த முதியவரை பராமரிக்கும் பணியை ஏற்றுக்கொள்ள சொன்னார், கணவர்.முதியவரின் வீட்டுக்குப் போனேன். கோடீஸ்வர தொழிலதிபரான அவருக்கு இரண்டு மகன்கள். சர்க்கரை நோயாளி, மனைவி.முதியவரின் வலது காலும், வலது கையும் செயலிழந்து போயிருந்தது. சுத்தமாக பேச்சு வரவில்லை.மாத சம்பளம், 5,000 பேசினர். அவர்களது அவுட்ஹவுசிலேயே தங்க வசதி செய்து கொடுத்தனர்.தினமும் முதியவரை சுத்தம் செய்து, புத்தாடை உடுத்தி விட்டேன். வேளா வேளைக்கு மருந்து கொடுத்தேன்.'ஸ்பீச் தெரபிஸ்ட், பிஸியோ தெரபிஸ்ட்' உதவியுடன் முதியவரை முழுமையாக நடமாட வைக்க முயன்றேன்.காதல் மன்னரான முதியவர், என் உடல் அங்கங்களை வர்ணிக்க ஆரம்பித்தார். அவரை சுத்தம் செய்யும்போது என் கைகளை பிடித்துக் கொள்வார்.'உனக்கு கல்யாணமாயிருச்சா?' என்றார்.'ஆமா...''உன் புருஷனை விவாகரத்து பண்ணிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?''என் புருஷன் ஒத்துக்க மாட்டார்...''ஒத்துக்கலன்னா ஆளை போட்டு தள்ளிரலாம்...'ஒரு செவிலியராக எனக்கு நோயாளியின் உடல்நலம் தான் முக்கியம். முதியவரை குணப்படுத்துவதற்காக அவரின் காதல் வசனங்களை பொறுத்துக் கொண்டேன்.'என்னை கல்யாணம் பண்ணிக்க விரும்புறீங்களே... உங்க மனைவியும், மகன்களும் ஒத்துக் கொள்வாங்களா?' என்றேன்.'கிழவியும், என் பையன்களும் ஒரு பிரச்னையும் பண்ணமாட்டாங்க. நீ சரின்னு ஒரு வார்த்தை சொல்லு...''நீங்க மொதல்ல குணமாகுங்க. அப்புறம் பார்ப்போம்...'ஆறே மாதங்களில் பூரண குணமடைந்து விட்டார், முதியவர். பேச்சு பிசிறு இல்லாத கணீர் குரலாகியது; நடை கம்பீரமாய் மாறியது.இடையிடையே கணவரை ஒரு சில தடவை சந்தித்தேன். தினம் போனில் பேசுவேன். ஆனால், கணவரிடம் முதியவரின் காதல் வசனங்களை பற்றி மூச்சுவிடவில்லை.'உன் கணவரை விவாகரத்து செய்ய சில பல மாதங்கள் ஆகலாம். அதுவரை நாம் பொறுத்திருக்க தேவையில்லை. வா சேர்ந்து வாழலாம்...' என்கிறார், முதியவர். 'புருஷனை உனக்கு விட்டுத்தர நான் தயார்...' என்கிறார் முதியவரின் மனைவி. -'எங்கப்பா விருப்பமே எங்க விருப்பம்; நீ, தாராளமா எங்கப்பாவோட சேர்ந்து வாழலாம். இந்தா எங்கள் தந்தையை குணப்படுத்தியதற்கான பணம் ஐந்து லட்சம்...' என நீட்டினர், அவரது மகன்கள்.பெரும் மனக்குழப்பத்தில் இருக்கிறேன். 'முதியவரோடு சேர்ந்து வாழ்ந்தால், கோடீஸ்வரி ஆகி விடலாம். இன்னும் ஐந்தாறு ஆண்டு தான் முதியவர் உயிரோடு இருப்பார்... அதன்பின் கணவரோடு மீண்டும் சேர்ந்து வாழலாம்...' என்ற யோசனை வருகிறது.முதியவரின் மகன்களிடம் மூன்று மாதம் அவகாசம் கேட்டிருக்கிறேன். நான் என்ன முடிவு எடுப்பது சொல்லுங்கள் அம்மா.— இப்படிக்கு,அன்பு மகள்.அன்பு மகளுக்கு -செவிலியர் நங்கையருக்கு சுயநலமோ, பணத்தாசையோ அறவே கூடாது.கணவரை முறைப்படி விவாகரத்து செய்யாது, முதியவருடன் சேர்ந்து வாழ்வது பாதுகாப்பானதல்ல. என்ன நோக்கத்தோடு உன்னை முதியவருடன் சேர்ந்து வாழ அவரின் மனைவியும், மகன்களும் அனுமதிக்கின்றனரோ, அது இறைவனுக்கே வெளிச்சம்.முதியவருடன் நீ சேர்ந்து வாழும் காலம் முழுக்க, செக்ஸ் தொழிலாளியாகவே கருதப்படுவாய். எப்போது வேண்டுமானாலும் நீ விரட்டப்படலாம்.செவிலியர் நங்கை பணியின் புனிததன்மையை கெடுத்தும், உன்னையே நம்பி வாழும் கணவனுக்கு துரோகம் செய்தும், வாழ்க்கையில் என்ன கண்டுவிடப் போகிறாய்?முதியவருக்கு பணிவிடை செய்யும்போது, அவரின் துர்நடத்தைகளை சகித்து கொண்டாய். ஆனால், அவர் குணமானவுடன் நீ என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா? 'அப்பா, நான் ஒரு செவிலியர் நங்கை. என் பணி காலத்தில் உங்களை போல ஆயிரக்கணக்கானோருக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டி வரும்.'சிகிச்சையின் போது நீங்கள் செய்யும் சேட்டைகளை, நான் உள்நோக்கத்தோடு ரசித்தல் தொழில் தர்மம் அல்ல. நீங்கள் நுாறாண்டு காலம் ஆரோக்கியமாக வாழுங்கள். நான் மற்ற நோயாளிகளுக்கு சேவை செய்ய கிளம்புகிறேன்...' என கூறியிருக்கலாம்.கணவரிடம் நடந்ததை சொல். அவரிடம் நீ மனம் விட்டு பேசுவதால் தெளிவு பெறலாம். நீயும், கணவரும் முதியவரிடம் சென்று ஆசிர்வாதம் பெறுங்கள்.நிறைய படித்திருக்கிறாய். வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் உனக்கு சிறப்பான பணி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆசிரியர் பணியில் சேர்ந்தால், மிக சீக்கிரம் உயரிய பதவிக்கு போவாய். பணத்தை விட பணி திருப்தி நிரந்தரமானது.சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள். திருமண பந்தத்தின் மீதான இறுக்கம், நெருக்கம் அதிகமாகும்.செவிலியம் தொடர்பாக மென்மேலும் படித்து மருத்துவ அறிவை வளர்த்துக்கொள். ஒரு திறமையான செவிலியர் நங்கை, 10 மருத்துவருக்கு சமம். நோயாளிகளை உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வு ரீதியாக, ஆன்மரீதியாக நெருங்கி குணமளிப்பது, செவிலியர் நங்கைகள் தான்.நோயாளிகளுக்கான சேவை இறைவனுக்கான சேவை மகளே!— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !