படுத்திருக்கும் சிவன்!
சயன நிலை என்பது பெருமாளுக்குரியது; பாற்கடலில் அவர் பள்ளி கொண்டிருக்கும் கோலத்தை, கோவில் சிற்பங்களில் பார்த்திருப்போம். ஆனால், ஆந்திராவிலுள்ள சுருட்டப்பள்ளி கிராம கோவிலில், புலித்தோல் ஆடையுடன் பள்ளி கொண்டிருக்கிறார், சிவபெருமான். பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் போது, அவரது திருவடியில் இருப்பாள், லட்சுமி. இங்கு சிவனின் தலைமாட்டில் கணவரின் தலையை தன் மடியில் தாங்கியபடி இருக்கிறாள், பார்வதி. பூமியில், மனிதர்களின் பாவச் செயல்கள் அதிகரித்து விட்டால், கோபமடைந்து, ருத்ரதாண்டவம் ஆடுவார், சிவபெருமான். இப்படி ஒருமுறை, அவர் ஆடிய போது, அதன் உக்கிரம் தாங்காமல் அனைத்து உலகங்களும் நடுங்கின. பார்வதி தேவி, தேவர்கள், யோகிகள், ஞானிகள் என்று எல்லாரும் வேண்டியும் கேட்பதாக இல்லை, சிவன்.அதனால், 'உன்னால் தான் அவரிடம் பேச முடியும்; பேசிப் பார்...' என்று சிவனின் வாகனமான நந்தியை அவரிடம் அனுப்பினர், தேவர்கள். நந்தியும், 'இறைவா... உங்கள் கோபம் பாவிகள் மீது தானே... பாவமே செய்யாதவர்கள் வசிக்கும் கைலாயத்தில் ஆடாதீர்கள்; இடத்தை மாற்றுங்கள்...' என்றார்.கோபத்திலிருந்த சிவன், 'அப்படியானால், உன் தலையில் ஏறி தான் ஆட வேண்டும்...' எனச் சொல்ல, 'ஆகா... அது, நான் செய்த பாக்கியம்; என் தலை மீது ஏறியே ஆடுங்கள், நான் உங்களைத் தாங்கிக் கொள்கிறேன்...' என்று பதிலளித்தார்.சிவனும், நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடினார். பின், நந்தியின் நிலை கண்டு, இரக்கப்பட்டு கோபம் தணிந்தார். அவரை இளைப்பாறும் படி சொல்லி, படுக்க வைத்தார், நந்தி. சிவனும் பள்ளிகொண்டார்; இவருக்கு, 'பள்ளி கொண்டேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.இந்த நடனம் நிகழ்ந்த மாலை வேளையையே நாம், பிரதோஷம் என்கிறோம். அன்று திரயோதசி திதி; அதாவது, அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு இரண்டு நாட்கள் முந்தையது. இந்த தலம் தான் பிரதோஷம் பிறப்பதற்கே காரணமாக இருந்துள்ளது.பிரமாண்ட வடிவத்துடன் பார்வதியின் மடியில், ஆனந்த புன்னகையுடன் சயனத்தில் உள்ளார், சிவன். கர்ப்பக்கிரக சுவரில் தேவர்கள், ரிஷிகள் இந்த அரிய காட்சியை தரிசிப்பது போன்று வடிவமைக்கப் பட்டுள்ளது. இங்குள்ள பார்வதி, 'சர்வமங்களா' என்று அழைக்கப்படுகிறாள். இவளை வணங்கும் பெண்களுக்கு, மாங்கல்ய பாக்கியம் அமையும். ஆந்திர மாநிலத்தில் கோவில் அமைந்திருந்தாலும், தமிழிலேயே பூஜை செய்யப்படுகிறது. மேலும், இங்கு தம்பதி சமேதராக காட்சி தருகிறார், தட்சிணாமூர்த்தி. வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய இந்த அரிய கோவில், திருவள்ளூர் - திருப்பதி சாலையில், 60 கி.மீ., தொலைவில் உள்ள ஊத்துக்கோட்டையை அடுத்து உள்ளது.தி.செல்லப்பா