உள்ளூர் செய்திகள்

ஊழியர்களுக்கு கழிவறை நேரக் கட்டுப்பாடு!

சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்தில், கழிவறையைப் பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கழிவறையை ஒருமுறை பயன்படுத்த, 2 நிமிடம் மட்டுமே ஊழியர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என, எச்சரிக்கப்பட்டுள்ளனர். தெற்கு சீனாவில் உள்ள, குவாங்டாங் மாகாணத்தில், போஷான் நகரில் அமைந்துள்ள, 'த்ரீ பிரதர்ஸ் மெஷின் மேனுபேக்சுரின் கம்பெனி' என்ற, தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தான், ஊழியர்களுக்கு, கழிவறை நேரக் கட்டுப்பாட்டை விதித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், ஒழுக்கத்தை கடைபிடிக்க செய்யவும், இந்த புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது, இந்நிறுவனம். இந்த விதியின் படி, அங்கு பணிபுரியும் ஊழியர்கள், காலை 8:00 மணிக்கு முன்பும், காலை 10:30 மணி முதல் 10:40 மணி வரையிலும், நண்பகல் 12:00 மணி முதல் 1:30 மணி வரையிலும், பிற்பகல் 3:30 மணி முதல் 3:40 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் 6 மணி வரையிலும், கூடுதல் நேரம் வேலை செய்பவர்கள், இரவு 9:00 மணிக்குப் பிறகும், கழிப்பறைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். மற்ற நேரங்களில் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டுமானால், 2 நிமிடம் மட்டுமே பயன்படுத்த வேண்டுமாம். உடல்நலப் பிரச்னை உள்ளவர்கள், நிறுவன எச்.ஆர்., அதிகாரியிடம், முன் அனுமதி பெற வேண்டுமாம். இதை முறையாக செயல்படுத்த, அந்நிறுவனத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, ஊழியர்களை கண்காணிப்பதாகவும், நிறுவனத்தின் இவ்விதியை மீறுபவர்களுக்கு, 100 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக, 1,200 ரூபாய்) அபராதம் விதிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. 'பணியிடத்தில் செயல்திறன் முக்கியமானது என்றாலும், ஏற்கெனவே உடல்நலப் பிரச்னைகளை கொண்டவர்களுக்கு, இது கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்...' என, அந்நிறுவன ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த புதிய விதிக்கு எதிராக, கண்டனக் குரல்களையும் எழுப்பி வருகின்றனர். -- ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !