உள்ளூர் செய்திகள்

உழைப்புக்கு கிடைத்த வெகுமதி!

'வரலாறு முக்கியம் அமைச்சரே...' என்று, ஒரு படத்தில், வடிவேலு சொல்லும் வசனத்தை நம்மில் பலர் நித்தம், பயன்படுத்துவதைக் கேட்கலாம். இன்றைய, 'டிக் டாக், வாட்ஸ் - ஆப்' செயலிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நம் வரலாற்றை அறிய முனைப்பு காட்டுவதில்லை. ஓட்டப்பந்தயம் போல், ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு மத்தியில், 'அட... இப்படியும் ஒரு நபரா...' என்று புருவம் உயர்த்த வைக்கிறார், நீலகிரி மாவட்டம், ஊட்டி, காந்தள் பகுதியை சேர்ந்த, மதிமாறன்.புகைப்படக் கலைஞரான இவர், 12 ஆண்டுகளாக, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும், பண்டைய பழங்குடி மக்களான, தோடர், இருளர், குரும்பர், கோத்தர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர்களின் வாழ்க்கை முறைகளை புகைப்படமாக எடுத்துள்ளார். மேலும், அவர்களது, கலை, பண்பாடு, விழாக்களை, புகைப்படம் மற்றும் பதிவுகளாக சேகரித்து வைத்துள்ளார். அரிய வகை புகைப்படங்களை, பழங்குடி ஆராய்ச்சி மையம், இவரிடம் கேட்டு பெற்றிருப்பது, கூடுதல் சிறப்பு.தான் மட்டும் அறிந்து கொண்டால் போதாது... மற்றவர்களுக்கும், இவர்களின் வாழ்க்கை முறை தெரிய வேண்டும் என்பதற்காக, பள்ளி, கல்லுாரி மற்றும் முக்கிய விழாக்களில் காட்சிப்படுத்தி வருகிறார். இதுவரை, தன் சொந்த செலவில், நீலகிரியில் இருந்து சென்னை வரை, 6,001 கண்காட்சிகளை நடத்தியுள்ளார். 'இவர்களிடம் எது கவர்ந்தது...' என்று, மதியிடம் கேட்டபோது, 'பண்டைய பழங்குடி மக்களின் இயற்கை சார்ந்த வாழ்வு தான்...' என்றார்.மேலும், மதிமாறன் கூறுகையில், 'பழங்குடி மக்கள், இயற்கையை காயப்படுத்து வதில்லை. நதி, மரம், பூ மற்றும் பறவை ஆகியவற்றின் பெயரை, தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகின்றனர். இவர்கள் வைத்திருக்கும், ஒவ்வொரு எருமைக்கும், ஒரு பெயர் இருக்கும். 'பழங்குடி மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதில், பலர் ஆர்வம் காட்டுவதில்லை. இதை வெளிக்கொணர முயற்சி எடுத்து, தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறேன். 'புகைப்பட கலைஞராக சம்பாதிக்கும் ஊதியத்தில், ஒரு பங்கை, கண்காட்சிக்கு செலவிடுகிறேன். 'இதெல்லாம் வேண்டாத வேலை...' என்று, என் காதுபடவே பலர் பேசி, அவமானப்படுத்தி இருக்கின்றனர். 'இந்த பேச்சுகள் தான், இன்னமும், என்னை ஊக்கப்படுத்துகிறது. மிகப்பெரிய வரலாற்றை, ஒரு புகைப்படம் சொல்லி விடும். கடந்த கால, பல நினைவுகள் இதை உணர்த்தி இருக்கின்றன. அதனால் தான், புகைப்படமாக பதிவு செய்து, கண்காட்சி நடத்துகிறேன். வேலைக்கு செல்லும், மனைவியும், என் பணிக்காக, ஒரு சிறு தொகையை கொடுத்து உதவுகிறார்...' என்றார். ரா. வினோத்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !