விதை!
பாத்ரூம் ஓடி, குளித்து, ஜீன்ஸ், டீ - ஷர்ட் அணிந்தவாறே, இட்லியை விழுங்கி, நிறுவன பஸ் பிடித்து, ஆபீஸ் வந்ததும், 'அப்பாடா...' என, மூச்சு விட்டாள், ஸ்வேதா. 'ஸ்வைப் கார்டை' தேய்க்க, நுழைவாயில் திறக்காமல், அடம் பிடித்தது. வரவேற்பறையில் இருந்த சுதாவிடம், ''இதுக்கு என்னாச்சு சுதா?'' என்றாள்.''மேம், நேத்து நடந்த, 'ரெஸிஷன் மீட்'டில் உங்க பெயர் இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு, 'டெர்மினேஷன் மெயில்' மற்றும் 'செட்டில்மென்ட்' வந்துடும்,'' என்றாள்.காதில் விழுந்ததை நம்ப முடியாமல் விழித்தாள், ஸ்வேதா.''என்ன செய்வது, இந்த மடம் இல்லாட்டி இன்னொரு சந்தை மடம்,'' வெறுப்பாக வார்த்தையை உமிழ்ந்தாள், ராதிகா.கணினி பணியில் ஒரு உயர் இடம் பெற வேண்டும் என, பள்ளியிலேயே திட்டமிட்டு, முதுகலை வரை பயின்று, தனிப்பட்ட முறையில் தன்னை சிறப்பாக தயார்படுத்திக் கொண்டவள். முன் அறிவிப்பின்றி தான் பணியிலிருந்து நீக்கப்படுவோம் என்பதை ஏற்க முடியவில்லை.தனியார் நிறுவனமொன்றில் பொறுப்பான பணியில், அப்பா; பள்ளி ஆசிரியை, அம்மா. அம்மாவிற்கு போன் செய்தாள்.''ஐ.டி., செக்டார் சமாசாரம் தெரிந்தது தானே... காலை, 7:00 மணிக்கு போயி, ராத்திரி, 12:00 - 1:00 மணிக்கு வீட்டுக்கு கார்ல அனுப்பிடுவாங்க. எத்தனை உழைச்சாலும் இதுதான் கதி. விட்டுத்தள்ளு, இப்ப வகுப்புல இருக்கேன்; ராத்திரி பேசலாம்.''யாரிடமாவது கொட்டிக் குமுற வேண்டும் போலிருந்தது.போன் சிணுங்கியது.''ஸ்வேதா, 'பிசி'யா இருக்கியா, தொந்தரவு செய்யறேனாம்மா?'' என்றாள், அத்தை.''எப்படி இருக்கீங்க அத்தை.''''உன் ஐடியா, வெற்றி அடைஞ்சுது. மூலிகை அப்பளம், சுவையும், ஆரோக்கியமும் இருந்தா வரவேற்பு இருக்கும்ன்னு சொன்னேல்ல... நான் முயற்சி பண்ணினேன்; அதுக்கு செம கிராக்கி.''அமெரிக்காவிலிருந்து, 20 ஆயிரம் அப்பளம் கேட்டு, 'ஆர்டர்' வந்திருக்கு. இங்கே எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்; அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்.''வருத்தமான நேரத்திலும், தன், 'ஐடியா' வெற்றி பெற்றது, ஸ்வேதாவிற்கு பெருமையாக தான் இருந்தது.'சரியாகத்தானே யோசிக்கிறேன். ஏன், இங்கு மட்டும் என் திறமைக்கு அங்கீகாரம் இல்லாமல் போனது?' என, நினைத்துக் கொண்டாள்.''கிரேட் அத்தை... இன்னிக்கு சாப்பாடு உங்களோட தான்!''''வா சாப்பிடலாம்.''பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், சிறு வயதிலிருந்தே ஸ்வேதாவிற்கு நெருக்கமாகி இருந்தாள், அத்தை.அருகே புதிதாக கட்டிய அபார்ட்மென்ட்டில், அத்தையின் பிள்ளைகள் குடியேற, அத்தைக்கும், மாமாவிற்கும் பழங்கால வீட்டை பிரிய மனமில்லை. அதற்கு, அத்தையின் மூலிகை தோட்டமும் ஒரு காரணம்.காய்கறி, பழம் மற்றும் மூலிகைக்கு என, தோட்டத்தை பகிர்ந்திருந்தாள். வீட்டு சமையலுக்கு பெரும்பாலும் தோட்டத்து காய்கறி தான். தவிர, அப்பள பிசினசுக்கு வீட்டின் பெரிய ஹால், முற்றம் உதவுவதால், அத்தைக்கு, வீட்டை பிரிய மனமில்லை.பணி நேரம் முடியும் வரை, அத்தையும், பிற மாமிகளும் வேலை செய்யும் நேர்த்தியை, சிந்தாமல், சிதறாமல் சீராக செயலாற்றிக் கொண்டிருந்ததை, வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள், ஸ்வேதா.பள்ளியிறுதியை தாண்டாத அத்தை, மேனேஜ்மென்ட் திறன்களை எங்கே கற்றாள். வேலை முடித்து, அத்தை வந்தமர்ந்தபோது, இரவு, 7:00 மணி.சூடான சாதத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்புடன், நெய் சேர்த்து உருட்டி, கையில் போட, சாப்பிட்டாள், ஸ்வேதா. ''இப்ப சொல்லு.''''என்னங்க அத்தை?'' என்றாள்.''மனசுல எதையோ போட்டு உருட்டிண்டிருக்கியே.''''உங்களுக்கு யார் சொன்னா?''''உன் முகம்.''காலையில் நடந்ததை விவரித்தாள், ஸ்வேதா. ''காசுக்காக வேலை பார்க்கறவங்களையும், ஆசைக்காக வேலை பார்க்கறவங்களையும் இனம் காண தெரியாம, இன்னிக்கு என்னை, 'டெர்மினேட்' பண்ணிட்டாங்க.''கணினி தான் இனி உலகை ஆளப் போகிறது, என் வாழ்க்கையும் அதுவே என முடிவு செய்து, 10 ஆண்டுகளாக உழைத்து, கிடைத்த தகுதிகளை ஒதுக்கிட முடியாது. என் திறமைகளை அங்கீகரிக்கும், கற்பனைகளுக்கு சுதந்திரம் தரக்கூடிய நிறுவனத்திற்கு நான் எங்கே போறது அத்தை?'' என்றாள், ஸ்வேதா.வேப்பங்காற்று சிலுசிலுவென முகத்தில் அடிக்க, மடி மீது தலை சாய்த்த ஸ்வேதாவின் கூந்தலை ஆதுரத்துடன் வருடியபடி, அசை போட்டாள், அத்தை. ''கண்ணு, உங்கிட்ட, மங்களம் பாட்டியை பத்தி சொல்லி இருக்கேன்ல்ல?''''அடிக்கடி, 'ரெபெர்' பண்ணுவியே, நம் ராஜம் பாட்டியோட ப்ரெண்டுன்னு, அவங்க தானே?''''அவங்களே தான். 60 வருஷம் முன் நடந்த கதை இது. உங்க பாட்டி தான், மங்களம் பாட்டியின் முதல், 'அசிஸ்டென்ட்!'''அது ஒரு தனி உலகம். எல்லாருமே நடுத்தர வர்க்கம். அந்த காலத்துல சம்பளம் குறைவு. பிள்ளைகள் வளர்ந்தபின், முன்னேறுவோம்கற ஒரே நம்பிக்கை-. அக்ரஹாரத்துல முதல் வீடு, மங்களம் பாட்டியோடது.''தாத்தா, பாட்டியோட பெண், மாப்பிள்ளை எல்லாரும், அப்ப வந்த ஏதோ ஒரு வியாதியில போய் சேர்ந்துட்டா. பாட்டி, ஐந்து வயது பேத்தி தான் மிச்சம். வருமானத்துக்கு எந்த வழியுமில்ல. ஆனாலும் வயிறு நிறையணும்.''மாறாத கைமணம் தான் பாட்டியோட ஒரே சொத்து. அதை வெச்சு முன்னுக்கு வரணும்ன்னு முடிவு செஞ்சு, அதன்படி நடத்தியும் காண்பிச்சாங்க.''ஊரில் இருந்த சில வசதியான குடும்பங்களில் நடந்த, திவசம், நாள், கிழமைன்னு மெதுவா போய் சமைச்சு கொடுக்க ஆரம்பிச்சாங்க. கை ரொம்ப சுத்தம். வாயும் கல்கண்டு தான்.''நாளுக்கு நாள் இவரது தொழிலுக்கு கிராக்கி ஏற்பட, அக்கம் பக்கம் பெண்களை உதவிக்கு அழைத்துக் கொண்டார், மங்களம் பாட்டி. அதில் எங்கம்மா, அதான், உன் பாட்டி ராஜமும் ஒருவர். ''வேலை இருக்கும்போது அரை வயிறு சாப்பாடு தான். 15 நாள் வேலைன்னா, பாட்டிக்கு கணிசமான தொகை கிடைக்கும். உடன் உழைச்சவாளுக்கு வஞ்சகம் பண்ணமாட்டாங்க. ''அக்ரஹார மாமிகளுக்கு, பாட்டியிடம் விசேஷ பிரியம். பல சந்தர்ப்பங்களில் பாட்டி தரும் பணம், குடும்ப செலவுகளுக்கு உதவுவதோடு, தானும் சம்பாதிக்கிறோம் என்ற நம்பிக்கையை பெண்களுக்கு தந்தது.''மதியம் சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வெடுப்பாங்க. நாலு மணி காபிக்கு பின், அப்பளக் கச்சேரிக்கு உட்கார்ந்துடுவாங்க.''அயர்ந்து கேட்டுக் கொண்டிருந்தவள், ''படிக்காத மூதாட்டிக்கு, அத்தனை திறமையா... மாசம் முழுவதும் திவசம், திங்கள்னு வந்துகிட்டே இருக்குமா?'' என்றாள், ஸ்வேதா.''நல்ல கேள்வி. அதுல தான் பாட்டியோட புத்திசாலித்தனம் இருக்கு. சந்தர்ப்பம் இல்லாத இடத்திலும் வாய்ப்பை உண்டாக்கிறது தானே கெட்டிக்காரத்தனம்.''வசதியான பல குடும்பங்கள் இருந்ததால, வெளிநாட்டுக்கு போறவங்க, வெளி நாட்டுலயிருந்து வந்தவங்க, லீவு நாள்ல பசங்கள் கொறிக்க, கர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்கு ருசியா தர, தின்பண்டங்களுக்கு தனி மார்க்கெட்டையே உருவாக்கிட்டாங்க. ''ரெண்டு சுத்து முறுக்கு, தட்டை, லாடு, பொரிவிளங்கா உருண்டை, பருப்பு பொடி, தொக்கு வகைகள், பிள்ளை பெத்தா மருந்துன்னு விதம் விதமா பண்ணி, சாதா நாட்கள்ளேயும் சம்பாதிச்சாங்க, பாட்டி.''பத்து வருஷம் கழிச்சு, பேத்திக்கு, இரட்டை வடம் சங்கிலி வாங்கி கொடுத்து, பாட்டி அசத்தினப்ப, அக்ரஹாரமே வியந்து பார்த்தது.''''சமையல் வேலையில நிறைய சம்பாத்தியம் வருமா?''''அப்பல்லாம் குறைவாத்தான் கிடைக்கும். மாசம் முழுவதும் தன்னை, 'பிசி'யா வெச்சுட்டு, எல்லார் தேவைகளுக்கும் ஈடு கொடுத்தாங்க இல்லையா, அங்க நின்னாங்க பாட்டி!''''கிரேட்... சரி அத்தை, இதுல நீ எங்கே வர்றீங்க?''''அதை இன்னும் சொல்லலையே... விளக்கெண்ணை தொட்டு அப்பள மாவை குட்டி, குட்டி உருண்டையாக உருட்டி போடுவது, என் வேலை. உருண்டை எண்ணிக்கையை கணக்கு வெச்சுக்கணும்; அப்பளத்தை மடியாம, கசங்காம உலர்த்தணும்; காய்ந்தவற்றை ஒன்று போல அடுக்கி, ஒரு கட்டுக்கு, 100 வைக்கணும்.''சட்டென அத்தையின் மேனேஜ்மென்ட் திறன் பற்றி, சிறிது நேரத்திற்கு முன், தான் வியந்தது, ஸ்வேதாவுக்கு நினைவுக்கு வந்தது. ''அதைத்தவிர இன்னொரு நல்ல வேலை. ஹாலில் நடுவே பேப்பர் போட்டு அதில் மாவை வெச்சு சுத்தி உட்கார்ந்து, கிடுகிடுன்னு மாமிகள் அப்பளம் இடுவாங்க. வேலை வேகமா நடக்கும்.''மவுனமா வேலை பார்த்தா போரடிச்சுடாதா? ஆனந்தவிகடன், கல்கி இதழில், தொடர் கதைகள் வரும். எல்லாத்தையும், நான் தான் வசன உச்சரிப்போடு படிச்சு காட்டுவேன். அதுக்கு பரிசா, பொரிவிளங்கா உருண்டை அல்லது சுட்ட அப்பளம் கிடைக்கும்.''''அப்படியே நாடகம் மாதிரி, 50 வருஷத்துக்கு முந்தைய கதையை சொல்றீங்க!''''அக்ரஹாரத்துல இருந்த எல்லாருக்கும் மங்களம் பாட்டி தான் உழைக்க சொல்லிக் கொடுத்தாங்க. தன்னம்பிக்கையை ஊட்டினாங்க. கூடி வேலை செய்யற இணக்கத்தை சொல்லிக் கொடுத்தாங்க.''நீங்கள்ளாம், 'டீம் ஒர்க்'ன்னு சொல்வீங்களே... அதை கத்துக் கொடுத்தாங்க. அப்பள வேலையும், 'டீம் ஒர்க்'தான். உங்க பாஷையில் சொல்லணும்னா, அப்பளக் கம்பெனிக்கு, மார்க்கெட்டிங் மேனேஜர். 'ஆர்டர்' பிடிக்கிறது, மற்ற பட்சணங்கள், கல்யாண சீர் என, சகலத்தையும் பண்ணினாங்க, பாட்டி.''நாங்கள்ளாம் ஊழியர்கள். எங்க எல்லாரையும் சேர்த்துட்டு நேர்த்தியா, 'எக்சிகியூட்' பண்ணினாங்க. சொன்ன தேதியில, 'டெலிவரி' பண்றதுல, ரொம்ப கரெக்ட்டா இருப்பாங்க. அவங்களால எங்களுக்கும், எங்களால அவங்களுக்கும் லாபம். எல்லாருக்கும் உபயோகமா பொழுதும் போனது, பணமும் கிடைச்சது; அதையெல்லாம் விட தொழிலையும் கத்துக்க முடிஞ்சது.''உனக்கு சொல்லும் போது தான், எனக்கே சில விஷயங்கள் புரியறது. சுவையான தின்பண்டங்கள், சமையலுக்கு மார்க்கெட் இருந்ததை கண்டுபிடிச்சு, அதை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கிட்டாங்க.''இன்னிக்கு சமையலை மையமா வெச்சு, 'கேட்டரிங்'குன்னு ஒரு படிப்பே இருக்கு. அந்த, 'பீல்டை' பத்தி அப்பவே யோசிச்சிருக்காங்க, பாட்டி. எந்த, 'பீல்டு'லயும் முன்னோடியா வர்றவங்க ஜெயிப்பாங்க. அது மக்களுக்கு பயன்படக் கூடிய, 'கன்ஸ்யூமர் ஐட்டமா' இருந்தா, நிச்சயம் வெற்றி பெற முடியும்கறதை அந்த காலத்துலேயே, பாட்டி, நிரூபிச்சிருக்காங்க. ''அடுத்தது, வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வது, பாட்டி, சமைக்கப் போன இடங்களிலெல்லாம் அன்பா, நட்பா, உண்மையா நடந்துக்கிட்டாங்க. சுவை குன்றாத சமையலால தனக்குன்னு சில நிரந்தர வாடிக்கையாளர்களை பெற்றிருந்தாங்க. ஒரு இடத்துக்கு வேலைக்கு போனா, கடைசி வரை அவங்க வீட்டுல எந்த விழான்னாலும், 'கேரண்டி' பாட்டிக்கு தான்.''நீங்க, நேர்மைன்னு சொல்வீங்களே, அதுதான் இது. அக்ரஹார ஜனங்களை பாட்டி மதிச்சாங்க. குழுவினருக்கு அன்பையும், நம்பிக்கையையும் பெற்றிருந்தாங்க.''நம் அரசாங்கத்துல, சில வருஷங்களா, மகளிர் சுய உதவிக்குழுன்னு ஒண்ணு ஏற்படுத்தி, ஏழை கிராமப் பெண்களுக்கு தொழில் பயிற்சி தர்றாங்க. அதைப் பத்தி யாரும் யோசனை பண்ணாதப்பவே, தீர்க்கதரிசியா தனக்குன்னு ஒரு குழுவை வெச்சுக்கிட்டு அவங்களை ஆதரிச்சாங்க, பாட்டி. வணிகப்படிப்பு சொல்லித்தர அத்தனை பாடத்தையும், யோசிச்சு புரிஞ்சுக்கிட்டாங்க!''''ரியலி கிரேட்!''''அவங்கக்கிட்ட ஜெயித்தாக வேண்டிய தேவையும், அர்ப்பணிப்பும், உழைப்பும், உண்மையும் தான் இருந்தது. சொல்லப் போனா இதெல்லாம் இருக்கறவங்களுக்கு வெற்றிங்கறது ரொம்ப துாரத்தில் இருக்க முடியாது. நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியறதா?''தலையாட்டியவாறே, ''அதையும் உன் வாயாலயே சொல்லுங்க அத்தை,'' என்றாள், ஸ்வேதா.''மத்தவங்க கம்பெனி உனக்கெதுக்கு... உன் கனவுகளுக்கெல்லாம் வடிகாலாய் ஒரு நிறுவனத்தை நீயே ஆரம்பி. படிக்காத பாட்டி, 60 வருஷத்துக்கு முன் செஞ்சதை, 'கோல்ட் மெடலிஸ்ட்' இப்ப செய்யலாம். நீயே நுாறு பேருக்கு வேலை தரலாம்,'' என்றாள், அத்தை.நிலவின் குளிர் வெளிச்சம் இதமாக இருந்தது. பேசவும், கேட்கவும் இனி ஏதுமில்லை என்பது போல இருவரிடமும் அமைதி. வேப்பங்காற்றின் குளுமையோ, அத்தையின் மடி சந்தோஷமோ, மங்களம் பாட்டியின் கதையோ, இல்லை எல்லாமுமோ மனதை நிறைத்தது. அத்தையின் கழுத்தை வளைத்துக் கட்டி, முத்தமிட்டவாரே, ''செஞ்சுடுவோம்,'' என்றாள், ஸ்வேதா. —ஜி. வித்யாலட்சுமிபுனைப்பெயர்: வித்யா வாசன்வயது: 39படிப்பு: பி.டெக்., பணி: சொந்த நிறுவனம்இதுவரை வெளியான படைப்புகள்: துணுக்குகள் பல தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன. மங்கையர் மலர் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளேன். கதைக்கரு பிறந்த விதம்: நான், ஐ.டி., ப்ரபஷனல். நேரில் பார்த்த அனுபவமே, இக்கதைக்கான கரு.