உள்ளூர் செய்திகள்

நான் சுவாசிக்கும் சிவாஜி (6) - ஒய்.ஜி. மகேந்திரா

இசை அமைப்பாளர் எம்.எஸ்.வி.,யும், கண்ணதாசனும் பெரிய ஜீனியஸ்கள். சிவாஜி படங்களுக்கு பணிபுரியும் போது, இருவரும் சேர்ந்து தங்கள் திறமைகளை கொட்டி, பாட்டு அமைத்து, இதில், சிவாஜி எப்படி நடிக்கிறார், பிரத்யேகமாக என்னவெல்லாம் செய்கிறார் என்று பார்க்க, சவால் மாதிரி, சில பாட்டுக்களைக் கொடுப்பர்.'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகிறேன்...' என்ற பாடலில், ஒரே பிரேமில், சிரிப்பது, அழுவது, அழுது கொண்டே சிரிப்பது, பாடிக் கொண்டே நடந்து வருவது என, நான்கு வித உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி. இந்தக் காட்சியின் சிறப்பு குறித்து, இயக்குனர் பீம்சிங்கை பாராட்டுவதா, எம்.எஸ்.வி.,யை பாராட்டுவதா, டி.எம். சவுந்திரராஜனை பாராட்டுவதா, பொருள் நிறைந்த வார்த்தைகளை கொடுத்த கண்ணதாசனை பாராட்டுவதா என்று யோசிக்கும் போது, எனக்கு தோன்றுவது ஒரே பதில் தான். இந்த நால்வருக்கும், சிவாஜியின் நடிப்பின் மீது உள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இக்காட்சி.நீதி அரசர் இஸ்மாயில், கம்பராமாயணம் குறித்து, ஆற்றிய சொற்பொழிவுகள் அனைவருக்கும் தெரியும்.பாவ மன்னிப்பு படத்தில், முஸ்லிம் இளைஞராக நடித்த போது, சிவாஜிக்கு ஒரு சந்தேகம் வந்தது. அது, சுத்தமான தமிழில் பேச வேண்டுமா அல்லது முஸ்லிம் என்பதால், 'ஸ்லாங்' பேச வேண்டுமா என்பது. (எதற்கு என்பதை, என்னாத்துக்கு என்பது போல) இது குறித்து, நீதி அரசர் இஸ்மாயிலிடம் கேட்டார்.அதற்கு அவர்,'முஸ்லிம் பாத்திரங்களில் நடிக்கும் போது, நல்ல தமிழிலேயே பேசலாம். 'ஸ்லாங்'க்கு மாற வேண்டாம். நீங்கள், நல்ல தமிழில் பேசுவது தான், எங்கள் சமுதாயத்திற்கு, நீங்கள் செய்கிற பெருமை...' என்று பதில் கூறியிருக்கிறார்.சத்தியமாக சொல்கிறேன், பாவ மன்னிப்பு படத்தை பார்த்து விட்டு, தியேட்டரை விட்டு வெளியே வரும் போது, நம் முஸ்லிம் சகோதரர்கள் ஒவ்வொருவர் மீதும், நமக்கு மதிப்பும், பாசமும் கண்டிப்பாக வரும். மூன்று பெரிய சமயங்களை சேர்ந்தவர்களிடையே, நல்ல ஒரு பிணைப்பு வரும்.நான் படங்களில் நடித்துக் கொண்டு மிகவும் பிசியாக இருந்த காலத்திலும் சரி, இன்றும் சரி, எனக்கு அதிகமான கடிதங்கள், இ-மெயில்கள் மின்னஞ்சல்கள் வருவது இஸ்லாமிய நண்பர்களிடமிருந்து தான். என் மனைவி சுதா, கீழக்கரையில், ஒரு திருமணத்திற்கு சென்றிருந்த போது, முஸ்லிம் அன்பர்கள், 'எங்க வீட்டு மாப்பிள்ளை வரவில்லையா?' என்று உரிமையாக கேட்டுள்ளனர். எங்கள் நாடக குழு, யு.ஏ.ஏ.,விற்கு, முதல் தலைவர், சங்கு மார்க் லுங்கி அதிபர் அப்துல் காதர் தான்.தேசிய ஒருமைப்பாட்டின் மேல், மிகுந்த அக்கறை கொண்டவர் சிவாஜி. தேசப்பற்றை வெளிப்படுத்தும் பாத்திரம் என்றால், 'மாட்டேன்...' என்று சொல்ல மாட்டார். என் நெருங்கிய நண்பரும், பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான சேரனின் அனுபவத்தை, இங்கே நான் குறிப்பிட வேண்டும்.சேரனின், தேசிய கீதம் படத்தில், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ள பெரியவர் பாத்திரத்தில், சிவாஜியை நடிக்க வைக்க, அவர் விரும்பினார்.கதை கேட்பதற்கு, காலை, 7:00 மணிக்கு வீட்டிற்கு வர சொல்லியிருந்தார் சிவாஜி. சேரன் 6:45க்கு அங்கு சென்ற போது, சிவாஜி, 6:30 மணிக்கே தயாராகி, சேரனுக்காக காத்துக் கொண்டிருந்தார். கதை கேட்கும் போதும், அவருடைய பாத்திரத்தை விவரிக்கும் போதும், முகத்திலே அதற்கு தேவையான உணர்ச்சிகளை கொண்டு வந்ததைப் பார்த்த சேரன், வியந்து போனார். சேரனும், சிவாஜியும் பேசிக் கொண்டிருந்த போது, சிவாஜியின் மகளும், அவரது கணவரும் உள்ளே வந்தனர். 'நான் கதை கேட்டுக் கொண்டு இருக்கும் போது ஏன் தொந்தரவு செய்றீங்க...' என்று, அவர்களை அனுப்பி விட்டார் சிவாஜி. தன் தொழில் மீது, எவ்வளவு பக்தி இருந்தால், தன் மகள், மாப்பிள்ளையிடம் இப்படி சொல்ல முடியும்!கிளைமாக்ஸ் பற்றி, சேரன் சொல்லிக் கொண்டிருந்த போது, 'இப்படி செய்தால் எப்படி இருக்கும்...' என்று கேட்டு, சிவாஜி நடித்தே காண்பித்தாராம். படத்தின் கதையும், அவர் பாத்திரமும் மிகவும் பிடித்துப் போய், சிவாஜி, 'ஓ.கே.,' சொல்லி விட்டார். ஆனால், 'படப்பிடிப்பு எல்லாம் அவுட்டோரில் தான்...' என்று சேரன் கூறினார். உடல்நிலை காரணமாக, டாக்டர்கள் ஆலோசனைப்படி, அவரால், இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. சிவாஜியை இயக்கும் வாய்ப்பு, தனக்கு அமையவில்லையே என்று, இன்றும் வருந்துகிறார் சேரன்.எத்தனையோ தேசிய தலைவர்கள், சரித்திர நாயகர்களை தன் நடிப்பின் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தி யிருக்கிறார் சிவாஜி. பாட்டி மடியில் உட்கார்ந்து கேட்ட புராண, இதிகாச பாத்திரங்களை, என் போன்றோர், கண்கூடாக பார்த்தது, சிவாஜி மூலமாக தான்.எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம், வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை பார்த்திருப்பதுடன், மேடை நாடகத்தையும் மிக அருகே இருந்து ரசித்திருப்பது தான். சிவாஜி, மேடையில் பேசிய, தீக்கனல் தெறிக்கும் வசனத்தின் சூட்டை, நான் உணர்ந்திருக்கிறேன். நாடகத்தோடு அவர் நிறுத்தியிருக்கலாம். ஆனால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் எனும் வீரனை பற்றி, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற, உயர்ந்த எண்ணத்தோடு படத்திலும் நடித்தார். நாடகத்திலும், திரைப்படத்திலும் வரும் ஒரு அற்புதமான காட்சியை பற்றி சொல்ல விரும்புகிறேன். கட்டபொம்மனிடம், ஒற்றன் வந்து, கும்பினிக்காரர்கள் சொன்ன விஷயங்களை சொல்வான். இவர், ஒரே வார்த்தையில், 'அதாவது' என்று மட்டும் சொல்வார். அந்த ஒரே சொல்லை, அடுத்தடுத்து, ஏழு முறை பயன்படுத்தும்போது, ஒவ்வொரு முறையும், மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவார். தியேட்டரில் கை தட்டல், விண்ணை முட்டும்.தர்ம காரியத்திற்காக நிதி திரட்ட, என் தந்தை ஓய்.ஜி.பி., ஒரு நட்சத்திர கலை விழா நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் கடைசி நிகழ்ச்சியாக, கட்டபொம்மன் நாடகத்தின், கிளைமாக்ஸ் காட்சியை, நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார் சிவாஜி.இசை, நடன நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்திலிருந்த சிவாஜி, என் தந்தை, ஒய்.ஜி.பி.,யின், தோள் மீது கை போட்டு, ரிலாக்சாக சிகரெட் பிடித்தபடி இருந்தார். வீர பாண்டிய கட்டபொம்மன் சிகரெட் பிடித்துக் கொண்டு, காஷுவலாக இருப்பதை பார்க்க, சுவாரசியமாக இருந்தது. மணி 9:15 இருக்கும். அப்பாவை ஒதுக்கி விட்டு, மேக்-அப் அறைக்கு வெளியே, சுவர் அருகே, தயாராக நின்று கொண்டார். நான்கு சேவகர்கள், அவரை சங்கிலியால் பிணைத்து இழுத்துக் கொண்டிருந்தனர். மணி 9:30. கட்ட பொம்மனாகவே மாறிய சிவாஜி. உடல் முழுவதையும் முறுக்கி, நான்கு சேவகர்களையும் தடுமாறச் செய்து, அண்ணாமலை மன்றத்தின் மேடைக்குள், சுவற்றை காலால் உதைத்து, புயலென நுழைந்தார். அவர் மேடைக்கு வந்ததும், பயங்கர கைத்தட்டல், ஆரவாரம். கடைசி கோர்ட் சீனில், தூள் கிளப்பினார். அந்தக் காட்சி முடிந்ததும், 'ரொம்ப சிரமப்பட்டு நடிச்சிருக்கீங் களே... இவ்வளவு, 'ஸ்ட்ரெயின்' செய்து நடிக்க வேண்டுமா...' என்று, சிவாஜியிடம் கேட்டார் என் தந்தை.'உனக்கு தெரியாதது இல்ல ஒய்.ஜி.பி., முழு நாடகத்தை, இரண்டரை மணி நேரம் போடும் போது, ஆடியன்ஸ், ஆரம்பத்திலிருந்து, நம்ம கூட இருப்பாங்க. அவங்களுக்கும் மெதுவாக, அந்த உணர்வு வந்து விடும். இங்கே அப்படி இல்லை. பாட்டு, டான்ஸ் என்று பல நிகழ்ச்சிகள் பார்க்கிறாங்க. வேற, 'மூட்ல' இருப்பாங்க. கட்டபொம்மன் துாக்கில் இடப்படும் சூழ்நிலைக்கு, அவங்களை கொண்டு வர வேண்டும். அதற்காக, அதிகமாக வீராவேசம் காட்டணும், சத்தமா வசனம் பேசணும். அப்போ தான், ஓரிரு நிமிடங்களில், இந்த காட்சியோடு ஒன்றிப் போவாங்க; அதனால் தான் இந்த, 'எக்ஸ்ட்ரா ஸ்ட்ரெயின்'. முப்பது நிமிடத்துக்குள் மொத்த டிராமாவின், 'எபெக்ட்'டையும் தரணும்...' என்று விளக்கினார். நடிப்புக்காக தன்னை அர்ப்பணித்தவர்களால் மட்டுமே, இப்படி எல்லாம் சிந்திக்க முடியும்.* மும்பை நகரில் உள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை, சிவாஜியின் முக சாயலில் தான் அமைக்கப்பட்டது என்பது, நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய விஷயம். பிரபல பாடகி, லதா மங்கேஷ்கர் சிவாஜியின் நெருங்கிய தோழி; உடன்பிறவா சகோதரி. சிவாஜியிடமிருந்து அவரது புகைப் படத்தை பெற்று, அதை மும்பை நகர நிர்வாகிகளிடம் தந்தார் லதா. அந்த புகைப்படத்தின் அடிப்படையில், சிவாஜியின் முகத்தையும், உருவத்தையும் கொண்டதாக, அந்த சிலை உருவாக்கப்பட்டது. - தொடரும்.எஸ்.ரஜத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !