அன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்
வணக்கம் அம்மா —நான் தற்சமயம் திருநெல்வேலியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். என் தந்தைக்கு 83 வயதாகிறது. எங்கள் பிரச்னையே, என் தந்தை, 24 மணி நேரமும் கடிகாரத்தையே பார்ப்பது தான். உதாரணமாக, சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் கூட, அவருக்கு நேரத்திற்கு தான் செய்ய வேண்டும். அதனால், சமயத்தில் கழிப்பறைக்கு செல்வதற்குள்ளாகவே, உடையிலேயே சிறுநீர், மலம் போன்றவற்றை கழித்து விடுகிறார்.மேலும், என் தாய் மேல் கொதிக்கும் தண்ணீரைக் கொட்டி, உடம்பெல்லாம் கொப்பளித்து, மருந்துவமனையில் சேர்த்து, இரண்டரை மாதத்திற்குப் பிறகு, தேறி வருவதால், பணிபுரியும் என் மனைவி, வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு, அலுவலகத்திற்கும் போய் வருகிறார்.என் தந்தைக்கு, தன்னுடைய வேலைகள் உடனுக்குடன் நடந்து விட வேண்டும். உதாரணமாக, காலை சிற்றுண்டி 8.20க்கு, மதியம் உணவு 12.20க்கு, இரவு 6.20 மணிக்கே சாப்பிட்டு விட வேண்டும். இதற்காக, அந்த நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விடுவார்.மேலும், காலை சிற்றுண்டி சாப்பிட்ட உடன், மதிய உணவு பற்றி கவலைப்பட ஆரம்பிப்பார்; மதிய உணவு சாப்பிட்டவுடன், மாலையில் சாப்பிடும் சுண்டல், டீ, காபி பற்றியும் விசாரிப்பார். தினமும் வாக்கிங் செல்ல வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியிருப்பதால், என் தாயும் முன்பு வாக்கிங் செல்வார். அவ்வாறு வாக்கிங் செல்லும் போதும், வரும் போதும் நேரம் பார்ப்பார்.லிப்ட்டில் ஏறும்போதும், இறங்கும்போதும் நேரம் பார்ப்பார்; வாக்கிங் செல்லும் போதும், நேரம் பார்த்துக் கொண்டே ஒரு பதட்டத்துடன் இருப்பார். வழியில் யாராவது பார்த்து பேசி விடக் கூடாது. அவசரம் அவசரமாக நடந்து விட்டு வீட்டிற்குள் நுழைவார்.தற்சமயம் வாக்கிங் செல்லும் போது, பூட்டிக் கிடக்கும் வீட்டின் அழைப்பு மணியை அடிக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதால், பொது இடங்களை சுத்தம் செய்ய வரும் போது, அங்கு நடக்க போகிறேன் என்பார்.மேலும், வீட்டில் வேலை செய்ய வரும் பெண், சுத்தம் செய்ய மின் விசிறியை நிறுத்தினால் கூட திட்டுவது என்று நாளுக்கு நாள் அவரது சேஷ்டைகள் நரக வேதனையைத் தருகிறது. நல்ல அறிவுரையை எதிர்பார்க்கிறேன்.இப்படிக்கு, - அன்பு மகன்.அன்புள்ள சகோதரருக்கு —உன் கடிதம் கிடைத்தது. வழக்கமான ஆவலாதிகளுக்கு மத்தியில், உன் கடிதம் வித்தியாசமானது. உன் 83 வயது தந்தையின் நடத்தைகளை கூர்ந்து கவனித்தால் அவருக்கு,'அப்சசிவ் கம்பல்சிவ் டிசாடர்' எனும் மனவியாதி வந்திருப்பதாக தெரிகிறது. இவ்வியாதியை சுருக்கமாக ஒ.சி.டி., எனவும் கூறுவர்.வீட்டின் பூட்டை சரியாக பூட்டியிருக்கிறோமா என பத்து தடவை இழுத்து பார்ப்பது, ரேகைகள் தேயும் வரை கைகளை கழுவிக்கொண்டே இருப்பது, போட்டிருக்கும் மூக்குக் கண்ணாடியை இருபது தடவை கழற்றி கழற்றி துடைப்பது, ரூபாய் நோட்டை எச்சில் தொட்டு எண்ணிக் கொண்டே இருப்பது போன்றவையும் இவ்வியாதியில் அடக்கம்.மனித வாழ்க்கையே, ஒழுங்கின்மையிலிருந்து, வயதாக வயதாக ஒழுங்கு நோக்கி பயணிக்கிறது. எங்கு ஒழுங்கின்மை அதிகம் இருக்கிறதோ, அங்கு இளமை பொங்கி வழிகிறது என அர்த்தம். எங்கு ஒழுங்கு கடுமையாக இருக்கிறதோ, அங்கு வயோதிகம் வளர்கிறது என அர்த்தம். உங்களின் தந்தையின் நடத்தை, பல வயோதிகர்களுக்கு ஏற்படுவதே!பொதுவாக, வயோதிகர்களுக்கு கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படும்:1. மரண பயம். 2. மனைவி இறந்ததால், நோய் வாய்ப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் தனிமையும், வெறுமையும். 3. முதுமை, உடல் உறுப்புகளில் ஏற்படுத்தும் பின்னடைவுகள். 4. வாலிப வயது ஆண், பெண்களிடம் பொறாமை.5. வீடும், உலகமும் தன்னை புறக்கணிக்கிறதோ என்ற பிரமை.மருத்துவத்தில், 'ஜெரனடாலஜி' எனப்படும் முதுமை நீக்கியல் பிரிவு உண்டு. அப்பிரிவு, மருத்துவர்களிடம் அழைத்துப் போனால், முதுமையால் ஏற்பட்ட உடல் நோய்களுக்கும், ஒ.சி.டி., எனப்படும் மனநோய்க்கும் தகுந்த சிகிச்சை அளிப்பர்.மருத்துவர் கொடுக்கும் மருந்துகளைத் தவிர்த்து, நீங்களும் உங்கள் தந்தைக்கு மருந்து கொடுக்கலாம். வாரத்தில் ஒரு நாள் அவருடன் சேர்ந்து படுத்து தூங்கலாம்; தூக்கம் வரும்வரை பேசலாம். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை, முதலில் அவருக்கு அறிமுகப்படுத்தலாம்.அவரது கை, கால்களை அமுக்கி விடலாம். அவரின் பால்ய சினேகிதர்களை கூட்டிவந்து, அவருடன் பேசச் சொல்லலாம். தினம் ஒரு மணி நேரம் உபயோகமான, 'டிவி' நிகழ்ச்சி பார்க்க வைக்கலாம். ஆறு மாதத்துக்கு ஒருமுறை, அவரது பல்செட், மூக்குக் கண்ணாடி, கால் செருப்பை மாற்றலாம்.அவரை, அவரின் நடத்தையை எப்போதும் குற்றம் சாட்டிக் கொண்டே இருக்காதீர்கள்; பரிவாய் அணுகுங்கள்.உங்களுக்கு வயது 53 - 55 இருக்கக்கூடும். நாளை உங்களுக்கும் உங்களின் தந்தையின் பிரச்னை வரக்கூடும். வயோதிகத்தை சபிக்காதீர்கள்.திருநெல்வேலிக்காரர்கள், குடும்ப உறவுகளை புனிதமாய் மதிப்பர்; நீங்களும் அப்படித்தான் இருப்பீர்கள். உங்கள் கடித நடையை பார்க்கும் போது, நீங்கள் உயரிய அரசு பணியில் இருப்பதாக தெரிகிறது. தந்தையின் அலைவரிசைக்கு இறங்கி வந்து, அவரைப் பராமரியுங்கள். வயோதிக தந்தைக்கு செய்யும் சேவை மகத்தானது; உன்னதமானது. சேவை செய்து, இறைவனுக்கு பிரியமானவன் ஆகுங்கள் சகோதரரே!- என்றென்றும் அன்புடன், சகுந்தலா கோபிநாத்.