உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள சகோதரிக்கு —நான் சுயதொழில் செய்யும், சிறு தொழிலதிபர். 46 வயதான எனக்கு, மனைவி, ஆண், பெண் என, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இருபது வருடத்திற்கு முன், என் 26 வயதில், ஒரு பெண்ணை சந்தித்தேன். அவளுக்கு, அப்போது 19 வயது. அவளை, மனதளவில் எனக்கு பிடித்திருந்தது. நான், அவளிடம் பேசியதில்லை. ஆனால், திடீரென ஒருநாள், அவள் தோழி, 'அவள் உங்களை உயிருக்குயிராக விரும்புகிறாள். நீங்கள் இல்லாமல் அவளால் வாழவே முடியாது...' என்று கூறினாள்.எனக்கு, அவளை பிடித்திருந்தாலும், உடனே பதில் சொல்லாமல், சில மாதங்களுக்குப் பின் தான், அவள் காதலை ஏற்றுக் கொண்டேன். அவள் பக்கமிருந்து தானே முதல் அழைப்பு வந்தது என்ற மிதப்போ என்னவோ! அவளை சந்தித்த பின், அவள் மிக நல்லவள், ஒழுக்கமானவள் என்பதை புரிந்து கொண்டேன்.என் மேல், உண்மையில் உயிரையே வைத்திருந்தாள். ஆனால், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். அதனாலேயே, அவளுக்குள் நிறைய கட்டுபாட்டு வட்டம் போட்டிருந்தாள். அதனால், விளையாட்டாக தொட்டு பேச முயன்றால் கூட, முகத்தில் எந்தவித உணர்வும் காட்டாமல், உடனே இரண்டு அடி தள்ளி நிப்பாள். எங்கு கூப்பிட்டாலும், வர மாட்டாள். 'ஊர் சுற்றுவதற்காக உங்களை காதலிக்கவில்லை...' என்பாள்.ஆனால், அவளின் ஆழமான காதல், எனக்கு பிடித்திருந்தது. அவள், என்னை வெறித்தனமாக காதலிக்க வேண்டும் என, நான் விரும்பினேன். சில சமயம், 'நீ தானே என் பின்னால் வந்தாய்...' என்று கூறி, அவளை சீண்டுவேன். அதை, அவளால் தாங்கவே முடியாது. இரண்டு நாள் ஊடல். பின், அவளை சந்திக்கும் போது, அன்பாக பேசுவேன். அதில், நான் கூறிய குத்தல்களை அவள் மறந்து விடுவாள். இப்படியே மூன்று மாதங்கள் ஓடின.ஒரு நாள், விளையாட்டாக தொலைபேசியில் நான் பேசியதில் துவண்டு விட்டாள். அதன்பின், அவள் என்னை தொடர்பு கொள்வாள் என, ஆவலுடன் காத்திருந்தேன். வாரங்கள், மாதங்கள், வருடங்கள் ஓடின. அவள் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி, போய் விட்டாள் என, தெரிந்து கொண்டேன். இழந்து விட்டோமே என, மனதளவில் துடித்தேன்.அடுத்து, எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின், நான்கு வருடங்களுக்கு முன், அவளைச் சந்தித்தேன். கண்டவுடன், அவளுக்கு கண்களில் நீர் முட்டியது. ஒரு மணி நேரம் இருவரும் பேசினோம். கணவனுடன், நலமாகத் தான் இருக்கிறாள் அவள்.'நீ ஏன் என்னை தொடர்பு கொள்ள வில்லை...' என்றதற்கு, 'கொஞ்சம் கொஞ்சமாக சாவதற்கு, முழுசாய் சாவது மேல் இல்லையா?' என்றாள். அதன் பின், மொபைல் போனில் எப்போ தாவது நாங்கள் தொடர்பு கொள்வோம். அவள் மனதில், இம்மியளவு கூட களங்கம் இல்லை.அவள் தோழியின் மூலம், அவள் என்னை மறக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். அவள் திருமண நாளன்று கூட, 'என்னுடன் வந்துவிடு என்று, என்னை அழைத்தால், இந்த நிமிடமே, அவருடன் சென்று, அவர் காலில் உயிரை விட்டு விடுவேன்...' என்று கூறியிருக்கிறாள். நான் தான் பாவி. எனக்குதான் நிம்மதியே போய் விட்டது. கை நழுவி போனபின் தவிக்கிறேன்.இப்போது, நாங்கள் பேசும் போது கூட, எங்கள் குடும்பம் மற்றும் தொழிலைப் பற்றி மட்டுமே பேசுவோம். பழைய விஷயங்களைப் பற்றி கிளறுவதே இல்லை.மன உளைச்சலில், நான்கு வருடமாக நிம்மதி இல்லாமல், வேலையில் கவனம் இல்லை; சாப்பாடு சரியில்லை; தூக்கமும் இல்லை. இப்படியே, ஒருமுறை இருசக்கர வண்டியில் செல்லும் போது, மயங்கி விழுந்து விட்டேன். எனக்கு, உயர் ரத்த அழுத்தம் என்றனர். உடலில் ஏற்பட்ட காயங்களுக்காக, 10 நாள் மருத்துவமனையில் இருந்தேன்.என் நண்பன் மூலம், அவளுக்கு தகவல் கொடுக்கச் சொன்னேன். அடுத்த நாளே, அவள் தோழியுடன் மருத்துவமனைக்கு வந்து என்னை சந்தித்தாள். அங்கு, ஒதுக்குபுறமாக நின்று, அழுததாக, என் மனைவி கூறினாள். 'இருவரும் என் நெருங்கிய தோழிகள்...' என்றேன். அதன்பின், மருத்துவமனையை விட்டு, வீட்டுக்கு கிளம்பும் நாள் வரை, தினமும் 10 நிமிடம் போனில் என்னுடன் பேசுவாள். உண்மையை கூற வேண்டுமென்றால், அவளும் கூட நான் குணமானதற்கு காரணம்.இப்போது எனக்கு ஈகோ கிடையாது. 'வாரம் ஒருமுறையாவது என்னுடன் பேசு...' என, கேட்க தோன்றும். ஆனால், அவள் வேறு ஒருவரின் மனைவி. இப்போது உள்ள பேச்சும் நின்று விடுமோ என்ற பயம் உள்ளது.என் மன உளைச்சலை, உங்களிடம் கொட்டி விட்டேன் சகோதரி. என் இப்போதைய பிரார்த்தனை, காதலனாக, கணவனாக அவளுக்கு கொடுக்க முடியாத பாசத்தை, ஒரு நண்பனாக கொடுக்க நினைக்கிறேன். மனதிற்குள் புழுங்குகிறேன். உங்கள் மொழியில் எனக்கு ஆறுதல் கூற முடியுமா அல்லது குற்றமாவது கூறுங்கள். உங்கள் அருமருந்தான பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.—உங்கள் அன்பு சகோதரன்.அன்புள்ள சகோதரருக்கு —உங்களது உணர்ச்சிப்பூர்வமான கடிதம் கிடைத்தது. 46 வயதான உங்களுக்கு, அன்பான மனைவியும், இரு அழகான குழந்தைகளும் இருக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன், நீங்கள் ஒருத்தியை காதலித்தீர்கள். காதலை முதலில் அவள் சொல்லியதால், காதலி மீது ஒருவித அலட்சியம் உங்களுக்கு.அதனால், காதலியை அமில வார்த்தைகளால் தொடர்ந்து சீண்டியுள்ளீர். சீண்டல்களின் முத்தாய்ப்பாய் தொலைபேசியில் வீண் வம்புகள் பேசி, அவளை காயப்படுத்தியுள்ளீர். காயப்படுத்திய பின்னும், முதலில், அவளே பேசட்டும் என நீங்கள் இருந்திருக்கிறீர்; நீங்கள் பேசட்டும் என, அவள் இருந்திருக்கிறாள். பின், இருவர் சார்பாக ஈகோ பேசிவிட்டது. அவள், வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி போய் விட்டாள். நீங்கள் ஒருத்தியை மணக்க, அவள் வேறு ஒருவரை மணந்து, அவரவர் காதலை அவரவர் நெஞ்சுக்குள் புதுப்பித்து கொண்டீர்கள். காதலனாக, கணவனாக கொடுக்க முடியாத பாசத்தை, காதலிக்கு ஒரு நண்பனாக கொடுக்க விரும்புகிறீர்கள்.உங்களுக்கு அன்பான, அழகான மனைவி இருக்கிறாள். மகன் மூத்தவன் என்றால், அவனுக்கு வயது பதினெட்டும், மகளுக்கு பதினைந்தும் இருக்கும். மகன் காலேஜ் புகுந்திருப்பான். மகள் பத்தாம் வகுப்பு படிப்பாள்; நீங்கள் சிறுதொழில் செய்யும் தொழிலதிபர். உங்கள் குடும்பத்தையும், தொழிலையும் நிர்வகிப்பதற்கு உங்களுக்கு ஒரு நாளைய 24 மணி நேரமும் தேவை.உங்கள் காதலியின் கணவனும் அன்பானவன், அழகானவன். நீங்கள் எழுதி இருப்பதைப் பார்த்தால், உங்கள் காதலிக்கு, 15 வயதில் பத்தாவது படிக்கும் மகளும், 12 வயதில் ஏழாவது படிக்கும் மகனும் இருப்பர். உங்கள் காதலி அரசுப் பணியில் இருப்பவள். அவளது குடும்பத்தையும், அரசுப் பணியையும் நிர்வகிப்பதற்கு ஒரு நாளைய 24 மணி நேரம் அவளுக்கு தேவை.முன்னாள் காதலர்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் சந்தித்தால், முதலில், '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி பேசுவர்... விக்கி லீக் ஜுலியன் அசாஞ்ச் பற்றி பேசுவர்... வெங்காய விலை ஏற்றம் பற்றி பேசுவர். கடைசியாக, திருமண பந்தம் மீறிய காமத்தைப் பற்றி பேசுவர். நீங்களும், உங்களது முன்னாள் காதலியும் கூட இப்படித்தான். வீர சைவம் பேசும் இரு பூனைகள், பேச்சு முடிந்ததும், பாய்வது கருவாட்டுக் கூடைக்குள்தான்.அடையாத காதலின் மிச்சம் என்ன மாதிரி ருசிக்கும் என்ற மனோபாவத்தில் உங்கள் காதலியும் இருப்பார். நீங்கள் இல்லாவிட்டாலும், சாத்தான் உங்களை அந்த மனோபாவத்துக்குள் ஆழ்த்தும். காதலியின் உடலை நீங்கள் தொடர்ந்து நான்கு வருடங்களாய் அடைய முயற்சிக்கிறீர்; அது நடக்கவில்லை. அதனால், மன உளைச்சல், மன பதட்டம். விளைவு, உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வந்திருக்கிறது.உங்கள் காதலியின் தோழிதான், உங்களுக்கும், காதலிக்கும் இடையே புதிய இணைப்புப் பாலம் போட உதவுகிறாள். உங்களின் சுகவீனத்துக்கு அவள் எதற்கு அழ வேண்டும்? அவள் திருமணமானவளா? 'ஆம்' என்றால், அவளது கணவன் என்ன செய்கிறான்? அவளுக்கு எத்தனை குழந்தைகள்? ரயில் இன்ஜினுடன் பழைய பெட்டியுடன் சேர்ந்து, ஒரு புதிய பெட்டியையும் இணைக்க விரும்புகிறாளோ? தூது வரும் தோழி அபாயகரமானவள் என யூகிக்கிறேன்.காதலனாக, கணவனாக, அவளுக்கு கொடுக்க முடியாத பாசத்தை, ஒரு நண்பனாக கொடுக்க நினைக்கிறேன் என்கிறீர்கள். அவள் கேட்டாளா? இந்த பாசம் அவளுக்கும், அவள் குடும்பத்துக்கும் தேவையா, நன்மையா? இந்த பாசம், உங்கள் குடும்பத்துக்கு என்ன வகையான தீய விளைவுகளை ஏற்படுத்தும்? பாசக்கார ஒப்பனையில் ஒளிந்திருக்கும் காமத்தை நீங்களும், உங்கள் காதலியும் அறிய மாட்டீர்களா என்ன?'ஒன்ஸ் பார் ஆல் குட் பை...' கூறி, நீங்களும், உங்கள் முன்னாள் காதலியும் பிரிந்து, அவரவர் குடும்பத்தை பராமரியுங்கள்.— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !