மரகத தீவில் ஆறு நாட்கள்!
ஆறு நாட்கள் சுற்றுலாவுக்கு வருமாறு, இந்தியாவின், ஆறேழு பத்திரிகையாளர்களுக்கு, இலங்கை சுற்றுலா துறை, கடந்த ஆண்டு அழைப்பு விடுத்திருந்தது. அவர்களில், தமிழகத்திலிருந்து நானும் தேர்வானேன். 'தவிர்க்க முடியாத காரணம்...' எனக் கூறி, அந்த பயணத்தை இலங்கை அரசு ரத்து செய்தது; நானும் மறந்து விட்டேன்.இந்த ஆண்டு மே மாதத்தின் மத்தியில், வீட்டில் இருந்த போது, சென்னையில் உள்ள, இலங்கை துணை துாதரக அதிகாரி, யசந்தா டி சில்வா, எனக்கு போன் செய்து, 'இலங்கை சுற்றுலா வர முடியுமா...' என, கேட்டார். கடந்த முறை, ரத்தானதற்காக வருத்தம் தெரிவித்தார்.'எங்கள் அலுவலக நடைமுறைபடி, இதை ஊழியர்களான நாங்கள், முடிவு செய்ய முடியாது. பாஸ் அவர்களிடம், அனுமதி கேட்க வேண்டும்...' என்றேன். உடனே அவர், 'நீங்கள், கடந்த முறை விண்ணப்பித்து வர முடியாமல் போனதால் தான், உங்களை தனிப்பட்ட முறையில் அழைக்கிறோம்; முயற்சி செய்யுங்கள்...' என்றார். 'சரி... எங்கள் முதன்மை செய்தி ஆசிரியரிடம் கேட்டு, பதில் சொல்கிறேன்...' எனக் கூறி, போனை வைத்தேன்.அந்த தகவலை, முதன்மை செய்தி ஆசிரியர் பானுமதியிடம் கூறியதும், 'அதனால் என்ன, பாஸிடம் கேட்டு விடுவோம்...' என்றவர், பாஸ் வசம் சொல்லியுள்ளார்.'கடந்த முறை, மீனாட்சிசுந்தரத்திற்கு தவறிய வாய்ப்பு, இந்த முறை, அவருக்கே கிடைக்கட்டும்...' என்று, பாஸ், 'ஓகே' சொல்லியுள்ளார்.இந்த தகவலை என்னிடம், முதன்மை செய்தி ஆசிரியர் கூறியதும், நன்றி சொல்ல, பாஸின் அறை கதவை தட்டி, அனுமதி அளித்ததும், உள்ளே சென்றேன்.'என்ன... இந்த முறையும் உங்கள் மனைவி, என்னை கோபிப்பார் போலிருக்கிறதே...' என்றார், சிரித்தபடி, பாஸ். 'இல்லை பாஸ்... எப்படியாவது பேசி சமாளித்து விடுகிறேன்...' என்றேன். 'உங்கள் பாடு... உங்கள் மனைவி பாடு... எப்படியோ, சந்தோஷமாக, ஆறு நாட்கள், இலங்கைக்கு தனியாக சென்று வாருங்கள். செலவுக்கு பணம் மற்றும் பிற விபரங்களை, பி.ஏ.,விடம் கேட்டுக் கொள்ளுங்கள்...' என்றவர், 'போய் வாருங்கள்...' என்றார், அன்புடன்.ஆறு மாதங்களுக்கு முன், 13 நாட்கள், தென் ஆப்ரிக்கா சுற்றுப் பயணம் செல்ல, என்னை அனுமதித்திருந்தார், பாஸ். 'பயண அனுபவம் எப்படி இருந்தது... வீட்டில் என்ன கூறினர்...' என, சென்று வந்த பின், பாஸ் கேட்டார். 'வீட்டில, மனைவிக்கு தான் கொஞ்சம் வருத்தம், பாஸ்... அவங்களை கூட்டிட்டு போகலைன்னு சற்று கோபம்...' என்றேன்.'ஓ... அப்படியா, அடுத்த முறை அவங்களையும் கூட்டிட்டு போய் வாருங்கள்...' என்றார்.இலங்கை சுற்றுலாவுக்கு, என் மனைவியை அழைத்து செல்லும் வாய்ப்பு, இப்போதும் கிடைக்காமல் போனது குறித்து, நான் அதிகம் கவலைப்படவில்லை. ஆனால், முன் நான் கூறியதை, பாஸ் நினைவில் வைத்து, அதை என்னிடம் கேட்டது, அவரின் ஞாபகசக்தி, ஊழியர் குடும்பம் மீது, அவருக்கு இருக்கும் அக்கறையை காட்டியது.ஆறு நாட்களுக்கு, இலங்கை சுற்றுலா பயணத் திட்டம். இதற்காக, இலங்கை தலைநகர் கொழும்பு செல்ல, அதிகாலை, 3:25க்கு சென்னையிலிருந்து விமானம். 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனத்தில், டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கே, சென்னை, சர்வதேச விமான நிலையம் சென்று விட்டேன்.உள்ளே நுழைந்ததும், எதிரே இருந்த, அறிவிப்பு பலகையில், 'இலங்கை செல்லும் விமானம், அதிகாலை, 5:00 மணிக்கு தான் புறப்படும்...' என, தகவல் இருந்தது. 'அட... இன்னும் ஐந்து மணி நேரம் காத்திருக்க வேண்டுமா...' என்ற எரிச்சலுடன், உள்ளே நுழைந்து, 'போர்டிங் பாஸ், பேக்கேஜ்' சமர்ப்பிப்பு போன்ற பணிகளை முடித்து, காத்திருந்தேன்.அதிகாலை, 2:00 மணிக்கு, அடுத்த அறிவிப்பு வந்தது. 'கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டது. பகல், 12:00 மணிக்கு தான், அடுத்த விமானம்...' என்றது. என்னை போல காத்திருந்த, நுாற்றுக்கும் மேற்பட்டோர், 'குய்யோ... முறையோ' என, விமான நிலைய அதிகாரிகளிடமும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பொறுப்பாளர்களிடமும் கத்தினர்.எனினும், 'இதை விட்டால், வேறு வழியில்லை...' என, அவர்கள் கறாராக கூறவும், காத்திருப்பதை தவிர, வேறு வழியில்லை என உணர்ந்து, அமைதி காத்தோம். ஒரு வழியாக, பகல், 12:00 மணிக்கு, விமானம் கிளம்பியது; 12:50க்கே, இலங்கை தலைநகர், கொழும்பில் தரையிறங்கியது. 50 நிமிட பயணத்திற்கு, அரை நாள் காத்திருந்தோமே என, என்னை நானே நொந்து கொண்டேன்.எனினும், வராது வந்த மாமணி போல, கிடைத்த சுற்றுலா வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள எண்ணி, இலங்கையின் அழகை ரசிக்க தயாரானேன்.'தமிழகத்திற்கு அருகில், இப்படியொரு அழகான நாடா; அதுவும், 50 நிமிட விமான பயணத்தில்...' என, இலங்கையில் நான் இருந்த, ஆறு நாட்களும் வியந்தேன். பொருளாதார ரீதியில் பின் தங்கிய நாடான இலங்கை, உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணியரை ஈர்க்கும் விந்தையை எப்படியோ அறிந்து, அதை கடைபிடிப்பதை பார்த்து மகிழ்ந்தேன்.'இத்தனை காலம், இந்த நாட்டுக்கு வராமல் போய் விட்டோமே...' என, லேசாக வருத்தமும் அடைந்தேன்.இலங்கை என்றதுமே, என்னை போல பலரின் நினைவில், விடுதலைப் புலிகள், உள்நாட்டு சண்டை, குண்டு வெடிப்புகள், கவலை தோய்ந்த முகத்துடன் தமிழர்கள் தான் நிழலாடுவர். அதற்கு காரணமும், அப்போது இருந்தது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, உள்நாட்டு சண்டையில் சிக்கித் தவித்த அந்த நாடு, கடந்த சில ஆண்டுகளாகத் தான், நிம்மதியாக இருக்கிறது. அதன் பின், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, என்னவெல்லாம் முடியுமோ, அத்தனையையும் செய்யத் துவங்கியுள்ளது, இலங்கை அரசு.இதை அறிந்த சீனா, இலங்கையின் பல உள்கட்டமைப்பு திட்டங்களில் ஏராளமான பணத்தை முதலீடு செய்து வருகிறது. இதனால், அந்த குட்டி நாட்டில், அதிகமாக உலா வரும், மஞ்சள் நிற தோல் சீனர்களை பார்க்க முடிகிறது. இலங்கையின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்களிலும், சீனர்களையும், சீன நிறுவனங்களையும் காண முடிகிறது.— தொடரும்.தேயிலை சுற்றுலா!இலங்கை விமான நிலையம் மற்றும் முக்கிய நகரங்களின் தெருக்களில், தேயிலை தான் அதிகமாக விற்கிறது. இங்கு சுற்றுலா வரும் சீனர்களும், பிற நாட்டினரும், மூட்டை மூட்டையாக, இலங்கை தேயிலையையும், நறுமண பொருட்களையும் வாங்கிச் செல்கின்றனர். அவற்றின் விலை பற்றியும் அவர்கள் யோசிப்பதில்லை. உலகப் புகழ்பெற்ற பல தேயிலை தயாரிப்புகள், இலங்கையையே பூர்வீகமாக கொண்டுள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணியரை, தேயிலை தயாரிப்பு தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்று, செயல் விளக்கம் காண்பிப்பதும், விற்பதும் முக்கிய தொழிலாக உள்ளது.ஏ.மீனாட்சிசுந்தரம்