உள்ளூர் செய்திகள்

தென் அமெரிக்க டூர்! (2)

ஓட்டலில் இருந்து, 20 கி.மீ., தூரம் உள்ள, 'பார்ரா' என்ற புறநகர் பகுதிக்கு, பஸ்சில் பயணித்தோம்.நம்மூரை விட மிக பழைய பஸ் தான். பஸ் வடிவமே வித்தியாசமாக இருந்தது. ஒருவர் மட்டுமே நுழையக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட சுழலும் இரும்பு <நுழைவாயில் இருக்கிறது. கண்டக்டர், உயரமான இருக்கையில் அமர்ந்திருக்கிறார். ஒரு வழியாக, சீட்டில் உட்கார்ந்தோம்.இபனமா, லெப்லான் பீச்சுகளை ஒட்டிய சாலை வழியாக பஸ் சென்றது. பிறகு சாலை மலைப் பாதையாக மாறியது. ஆங்காங்கு சிறிய அழுக்கு படிந்த குடியிருப்புகள் இருந்தன. இங்கு வாழும் மக்கள் மிகவும் ஏழைகள். போதை மருந்து கடத்தல், துப்பாக்கி சண்டைகள் மற்றும் கொலை குற்றங்கள் இங்கு சகஜம். ஆகையால், இந்த பகுதிகளில் இறங்கி நடக்க வேண்டாம் என்று டூர் கைடு முன்னமே கூறியதால், 'கம்' என்று பஸ்சிற்குள் அமர்ந்து விட்டோம்.'பார்ரா' புறநகரை அடைந்தோம். அருமையான சாலை வடிவமைப்பு, ஷாப்பிப் வளாகங்கள், பல மாடி கட்டடங்கள் ஆகியவை இந்த புதிய புறநகர் பகுதிக்கு பெருமை சேர்க்கும் அங்கங்களாக திகழ்ந்தன. ஷாப்பிங் வளாகத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு, மீண்டும் பஸ்சில் ஏறி, எங்கள் ஓட்டல் அருகே உள்ள ஒரு பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டோம். அங்கு பிரபலமான ஓட்டல் ஒன்றில் நுழைந்தோம்.இங்கு இன்னொரு வித்தியாச நடை முறையை காண முடிந்தது. ஓட்டல் களில் பொதுவாக நாம் சாப்பிடும் பண்டங் களுக்குத் தானே விலை விதிக் கின்றனர். இங்கு அப்படியல்ல; நாம் விரும்பும் அயிட்டங்களை ஒரு தட்டில் போட்டு, கவுண்டரில் எடை போட வேண்டும். எடைக்கு தக்க விலை. இதனால், 'வேஸ்டேஜ்' மிகவும் கம்மி என்று அந்த ஓட்டல் மேனேஜர் கூறினார். நல்ல யோசனை தானே? எங்கள் அடுத்த சுற்றுலா இடம், 'சுகர்லோப்' என்ற மலைப்பகுதி. மலையின் உச்சிக்குப் போக, இரண்டு கேபிள் காரில் செல்ல வேண்டும். கியூவில் நின்று டிக்கெட் வாங்கி, கேபிள் காரில் போகும் போதே அந்த இடத்தின் அற்புதம் தெரிந்தது.மலை <உச்சி வரை, கேபிள் காரில் தான் செல்ல வேண்டும் என்றால், கற்பனை செய்து கொள்ளுங்கள். இயற்கை எழில்களை, மலையின் வனப்புகளை பார்த்து பரவசப்பட்டதை இப்போதும் கூட உணர முடிகிறது. மலை உச்சிக்குச் சென்று பார்த்தால், அப்பப்பா... ரியோ நகரம் பரந்து விரிந்த நிலையில் பிரமாண்டமாய் தெரிகிறது. பலவித படகுகள் நிறைந்த மெரீனா, பெரிய குதிரை ரேஸ் மைதானம் மற்றும் பழைய அரச குடும்பத்து மாளிகைகள் எல்லாம் மிக துல்லியமாகத் தெரிந்தன.இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் தோன்றியது, 'மெர்கானா' என்ற கால்பந்து மைதானம். பிரேசில் நாட்டவர், கால்பந்து ஆட்டத்தில் அதிக ஈடுபாடு <உள்ளவர்கள் என்பதால், எங்கும் கால்பந்து மைதானங்கள் தான். நீங்கள் கால்பந்தாட்ட ரசிகராக இருந்தால், கண்டிப்பாக இந்த மைதானத்திற்கு ஒரு விசிட் அடியுங்கள்.இதோடு, எங்கள் ரியோ நகர சுற்றுலா முடிந்தது. எங்களின் அழகான டூர் கைடு லூசியானாவுக்கு, 'பை... பை...' சொல்லி, உள்ளூர் விமானத்தில் ஏறினோம்.இரண்டு மணி நேரத்தில், 'போஸ் டி இகுவாசு' என்ற நகரை அடைந்தோம். சாதாரண ஊர்தான் இது; சுற்றுலாவால் அதிவேகமாக வளர்ந்து விட்டது. இங்கு முக்கியமான சுற்றுலா இடங்கள்... தேசிய பூங்கா, இகுவாசு நீர்வீழ்ச்சி என்று எங்களின் புதிய டூர் கைடு, 'டோனி' சொன்னார். உருவமோ பெருசு; வினோத தொனியில் ஆங்கிலம் உச்சரித்தாலும், வித்தியாசமாக பேசும் அவரது பாணி, எங்களை கவர்ந்தது.இங்குள்ள டூர் கைடுகள் பலருக்கு ஆங்கிலம் சரியாகவே பேச வரவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் பேசும் சுற்றுலா பயணிகள் வருகை தான் அதிகம் என்பதால், ஆங்கிலம் பேசத் தெரிந்த டூர் கைடுகளுக்கு செம கிராக்கி. 'பட்லர் இங்கிலீஷ்' பேசினாலும், இங்கு டூர் கைடாக குப்பை கொட்டலாம்.பேசிக் கொண்டே, விமான நிலையத்தில் இருந்து, தேசிய வனவிலங்கு பூங்காவுக்கு வந்து விட்டோம். யுனெஸ்கோவின் பாரம்பரிய பெருமை பெற்ற பூங்கா இது. அரிய வகை ஜாகுவார் என்ற சிறுத்தை புலிகள், பல வகை குரங்குகள், எறும்பு தின்னிகள் உட்பட பல விலங்குகள் இந்த பகுதியில் சகஜமாக உலாவுமாம்; ஆனால், எங்கள் கண்களுக்கு எதுவும் தென்படவில்லை. இதுபோல, பிரபலமான அமெரிக்க வெப்ப மண்டல பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் இந்த பூங்காவில் சகஜமாக காணப்படுகின்றன.பூங்காவில் வலம் வந்தபின், நீர் வீழ்ச்சிக்கு சென்றோம். தென் அமெரிக்காவில் மிகவும் புகழ் வாய்ந்த இந்த நீழ்வீழ்ச்சிகளின் பெயர், 'இகுவாசு!' நீர்வீழ்ச்சியின் மிக அருகில் தான் எங்கள் ஓட்டல் இருந்தது. பகல் உணவை முடித்து, நீர்வீழ்ச்சியை சுற்றி, 'மெகா டூர்' அடித்தோம்.இந்த பிரமாண்டமான நீர்வீழ்ச்சி, பிரேசில், அர்ஜென்டினா நாடுகளுக்கு இடையே ஒரு இயற்கையான எல்லையாக அமைந்திருக்கிறது. அர்ஜென்டினா பக்கமிருந்து, நீர்வீழ்ச்சியை ரசிப்பதை விட, பிரேசில் பக்கம் இருந்து ரசிப்பது மிகவும் அற்புதமாக இருக்கும் என்று கைடு கூறினார். பிரேசிலில் ஓடும், 16 ஆறுகள் சேர்ந்து, இந்த நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. 275 துணை நீர்வீழ்ச்சிகளும் காணப்படுகின்றன.ஒரு பக்கம் வெள்ளி தோரணங்கள் போல நீர்வீழ்ச்சி வீழ்வதும், ஆங்காங்கே பழத் தோட்டங்கள், பண்ணைகள் என்று பச்சை பசேல் அழகு. இதனூடே வண்ணத்துப் பூச்சிகளின் கண் சிமிட்ட வைக்கும் தவழும் பாங்கு மட்டுமன்றி, வானத்துக்கே திரை அமைத்தது போன்று பரவி இருக்கும் பனிப் பொழிவு எல்லாமே பார்க்க ரம்மியமாக இருந்தது. அந்த இடத்தை விட்டு நகரவே மனசு வரவில்லை. நாங்கள் அப்போது, இரண்டு மணி நேரத்திற்கு மேல் சுற்றி பார்த்தாலும், சில நிமிடங்களே இருந்தது போன்ற உணர்வு தான் ஏற்பட்டது.இந்த அழகுகள் தான் அணிவகுத்தன என்றால், நீர்வீழ்ச்சிக்கு அலங்கார வளைவு போட்டது போல, வர்ணஜாலம் காட்டும் வானவில் முதுகை காட்டியதும், பார்க்க, பார்க்க அழகுதான். மலை உச்சியில் இருந்து நீர்வீழ்ச்சி விழுவதை பார்த்து ரசிக்கலாம்; ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்... நீர்வீழ்ச்சியின் அருகே சென்றால், தெறிக்கும் தண்ணீர் துவாலைக்கு தலை தானாகவே திருப்பிக் கொள்ள வைத்து விடும். வயிற்றிலோ மத்தளம் அடிக்கும். அந்த அளவுக்கு உடலை மசாஜ் செய்தது போல இருக்கும்.நீர் வீழ்ச்சியின் அழகை ரசித்த பின், ஓட்டலுக்கு திரும்பினோம். இரவு முழுக்க அதன் பரிமாணங்களை ரசித்து பார்த்து வியப்படைந்ததற்கு எல்லையே இல்லை.அடுத்த நாள், 'போஸ்டி இகுவாசு' நகருக்கு அருகில் உள்ள சூப்பர் ஷாப்பிங் மால் முன் கார் நின்றது. கடை முழுவதும் கை வண்ணப் பொருட்கள் நிரம்பி இருந்தன; ஆனால், எல்லாமே கொம்பு விலைதான். சில வண்ண பீங்கான் பொம்மைகளையும், டி-ஷர்ட்டுகள் மற்றும் 'சீப்' அயிட்டங்களை வாங்கி, காருக்குள் நுழைந்தோம். வண்டி விரைந்து, 'இத்தைப்பு' என்ற சிறிய ஊரை அடைந்தது. சிறிய ஊர்; ஆனால் கீர்த்தியோ பெரிசு. இதற்கு காரணம், இதன் அருகே உள்ள பிரமாண்டமான, 'இத்தைப்பு' அணைகட்டுதான். சுற்றுலா பயணிகளுக்கு என்று ஒரு அழகான மையம் அமைத்துள்ளனர். சிறிய கடைகள், காபி ஷாப்ஸ் மற்றும் மிகவும் சுத்தமான டாய்லெட் வசதிகளுடன் உள்ள இந்த மையத்தில் இருந்து, பஸ் மூலம் அணைகட்டை நோக்கி சென்றோம்.இது வரலாற்று புகழ் வாய்ந்த அணைகட்டு. பிரேசில் - பராகுவே நாட்டின் எல்லையில், 'பார்னா' என்ற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஸ் நேர்த்தியான சாலையில் சீராக ஓடியது. சுற்றிலு<ம் பச்சை பசேல் என்று பலவித மரங்கள், பூச்செடிகள் கண்களுக்கு இதமளித்தன. பஸ், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றது; கீழே இறங்கினோம். அடடா... என்ன காட்சி... 18 டர்பைன்கள் ராட்சச வடிவில் வரிசையாக கட்டப்பட்டு இருந்தன. இவை மூலம் தண்ணீர் நீர்வீழ்ச்சிகள் போல, 'சோ' என்று பாய்ந்து வந்தது. இந்த டர்பைன்கள் பகல், இரவாக இயங்கி, மிகப்பெரிய அளவில் மின்சாரத்தை தடை ஏதும் இன்றி உற்பத்தி செய்கின்றன.— தொடரும்.கே. வெங்கட்ராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !