உள்ளூர் செய்திகள்

தற்கொலை!

சமீபத்தில் வெளியான ஒரு செய்தியில், பழங்கால கிரேக்கர்கள், தற்கொலை செய்து கொள்வதை, மதிப்பிற்குரிய செயலாகக் கருதினர் எனப் படித்த போது, சற்றே அதிர வைத்தது. அதேசமயம், நம்மூரில் தற்கொலை எவ்வளவு மலிவாகி விட்டது என்பதை, எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.மன உளைச்சல், மன அழுத்தம் மற்றும் ஏமாற்றங்களே தற்கொலைக்கான பின்புலன்கள். குடும்ப சண்டை, தேர்வில் தோல்வி மற்றும் காதல் தோல்வி போன்றவை தற்கொலைக்கு முதல் காரணமாக முன் நிற்கின்றன.பெரும்பாலும் ஒருவருக்கொருவர் புரிதல் இல்லாத காரணத்தாலேயே குடும்ப சண்டைகள் அரங்கேறுகிறது. அதைத் தவிர்ப்பதற்கு, எதிரில் இருப்போர் பேச்சையும், காது கொடுத்து கேளுங்கள். அவர்களின் கருத்துகளை ஆதரிக்க வேண்டும் என்று இல்லை; நாகரிகமாக மறுக்க கற்றுக் கொண்டாலே போதும்!அடுத்து, மதிப்பெண் குறைவு, தேர்வில் தோல்வி! ஒரு தேர்வு முடிவு, உங்களின் திறமையை சரியாய் பிரதிபலித்திட முடியுமா? அவர்கள் யார் உங்களின் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்க! அடுத்த தேர்வில் தேறி விடலாம் அல்லது உங்களது திறமை என்ன, எதில் ஆர்வம் அதிகம் என்று அனுமானித்து, கவனத்தை அதில் செலுத்துங்கள்.மாணவர்கள் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கு சாதித்தவர்கள், சாதித்துக் கொண்டு இருப்போரில் பெரும்பான்மையினர், தேர்வில் தோல்வி கண்டவர்களே!காதல் தோல்வி - இவ்வார்த்தையின் பொருளை தவறாக புரிந்து கொள்கிறோம். காதலுக்கு ஏது தோல்வி? நீங்கள், உங்கள் அன்புக்குரியவரை நேசிப்பது, நேசித்துக் கொண்டிருப்பது அல்லது நேசிக்கப் போவது உண்மை தானே! அதேபோன்று, சம்பந்தபட்டவரும் உங்களை நேசிப்பதோ அல்லது மறுப்பதோ அவருடைய தனியுரிமை. இதில், தோல்வி எங்கிருந்து வந்தது? சற்றே யோசித்துப்பாருங்கள்!சமீப காலமாய், கடனோ, வேறு ஏதாவது காரணத்தாலோ மிரட்டப்படுவோர், அதிலிருந்து மீள, தற்கொலை செய்து கொள்கின்றனர். இது, தற்காலிக பிரச்னை; இதற்கு தற்கொலை தான் தீர்வா? அச்சமயம், மனம் கனமாக தோன்றும் தான். அதுபோன்ற நேரங்களில், நண்பர்களிடமோ, குடும்ப உறுப்பினர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ மனம் விட்டு பேசுங்கள்.தற்கொலை எண்ணங்கள் தலை தூக்கினால், உங்களுக்கு பிடித்த இசையையோ, 'டிவி'யில் நகைச்சுவை காட்சிகளை பார்ப்பதிலோ அல்லது பிடித்த விஷயத்திலோ கவனம் செலுத்துங்கள். மனம், ஒரு மந்திர சாவி; புரியாத புதிர். முதலில், மனக் குளத்தை குழப்பி விடுங்கள். அப்போது தானே தெளிய வைக்க முடியும்!விபத்துகள் போலவே தான், தற்கொலைகளும்! யாரேனும் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்தால், முதலுதவியாய், லாவகமாய் பேசி, தற்கொலையின் விளைவுகளை புரிய வையுங்கள். சில நாட்களுக்கு பின் தற்கொலைக்கு முயன்றவர்களே, தங்கள் செயலை எண்ணி நகைப்பர். ஏனெனில், பிரச்னைகளை அச்சமயம், அவர்கள் கடந்திருப்பர்.வாழ்வின் சூட்சுமங்கள், நாம் வாழ்வை எதிர்கொள்ளும் விதத்தில் இருக்கிறது. உங்களை கண்டு சிரித்திடவும், ஏளனப்படுத்திடவும், உங்களுக்கு நிகர் இங்கு எவர் உள்ளார்? அதனால், நம் மனதிற்குள், 'என்னை விட உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. என்னால் முடியாதென்றால், இங்கு எவராலும் முடியாது...' என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லி, நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ளுங்கள். நாளை மட்டுமல்ல, இந்நொடியும் உங்களுடையது தான்!பின்லாந்து நாட்டிலுள்ள தற்கொலை தடுப்பு மையங்களால், அந்நாட்டில் தற்கொலைகள் குறைந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம், ஆண்டுக்கு, 20 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இதைத் தவிர்க்க, தற்கொலை தடுப்பு மையங்களை அரசு அதிகமாக ஏற்படுத்தினால், பெரும்பான்மையான தற்கொலைகளை தடுக்க முடியும்.ஆனந்தி ராமகிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !