வேப்பெண்ணெய் தந்த பதவி!
குருவருள் இருந்தால் போதும்; தானே தெளிவு பிறக்கும். இதை விவரிக்கும் வரலாறு:சீர்காழியில் அவதரித்த அடியார் ஒருவர், திருச்செந்துார் சென்று, முருகப்பெருமான் குறித்து அருந்தவம் செய்தார். அடியாருக்கு காட்சியளித்த கந்தக் கடவுள், மெய்ஞானம் அளித்தார். அதன்பிறகு, சிற்றம்பல நாடிகள் என, அழைக்கப்பட்டார், அடியார்.மாயூரம் சென்று, அங்கேயே தங்கி, அண்டியவர்களுக்கு அருளுபதேசம் செய்யத் துவங்கினார், சிற்றம்பல நாடிகள். மாணவர்கள் பலர் வரத் துவங்கினர்.நாளாக நாளாக அதிகரித்த மாணவர்களின் எண்ணிக்கை, 63 ஆக உயர்ந்தது. மடாலயம் ஒன்று அமைத்து, மாணவர்களோடு இருக்கத் துவங்கினார், சிற்றம்பல நாடிகள்.ஒருநாள், சாப்பாட்டு நேரம், அன்னமும், பருப்பும் படைத்தபின், நெய்யை ஊற்றுவதற்குப் பதிலாக வேப்பெண்ணெயை ஊற்றி விட்டார், சமையற்காரர். சிற்றம்பல நாடிகளும், மாணவர்களில், 62 பேரும், எந்த விதமான மாறுபாடும் காட்டாமல், அமைதியாக உண்டனர். ஆனால், கண்ணப்பர் என்ற மாணவர் மட்டும், வேப்பெண்ணெய் கலந்த உணவை வாயில் வைத்ததும், 'உவ்வே' என்று வாந்தி எடுத்தார். அதைப்பார்த்த, குருநாதர், 'நம் திருக்கூட்டத்தில் பக்குவம் இல்லாதவர்கள் இருப்பது முறையா...' என்றார். குருநாதரின் உள்ளத்தையும், தன்னுடைய பக்குவம் இன்மையையும் உணர்ந்த கண்ணப்பர், அங்கிருந்து வெளியேறினார்.சில நாட்களுக்கு பின். சிற்றம்பலநாடிகள் சமாதியடைய திருவுளம் கொண்டார். அக்காலத்தில் சோழ மன்னராக இருந்தவரை அழைத்து, 'மன்னா... வரும் சித்திரைத் திங்களில் திருவோணத்தன்று, யாம் எம் மாணவர்களோடு சமாதியில் இறங்கப் போகிறோம். அதற்கு தகுந்த இடத்தை ஏற்பாடு செய்...' என்றார். மாயூரத்திற்கு அருகிலிருந்த பெரும் தோட்டத்தில், குருநாதர் உத்தரவுப்படி, 63 சமாதிக் குழிகளை ஏற்பாடு செய்தார், மன்னர்; கூடவே, நாடெங்கும் பறையறிவித்து தெரியப்படுத்தினார். மகான் சமாதி அடையும் திருநாளன்று, அனைவரும் கூடி விட்டனர். சிற்றம்பல நாடிகள், தம் மாணவர்களோடு வந்து, அனைவருக்கும் ஆசி கூறி, தத்தமது சமாதிக் குழியில் அமர்ந்தனர். சமாதிகள் மூடப்பட்டன.அந்நேரத்தில், அங்கு ஓடி வந்த கண்ணப்பர், தனக்கென ஒரு சமாதி அமைக்கப்படாததைக் கண்டார்.குருதேவரின் சமாதி முன் நின்று, 'குருவே... தெய்வமே... திருந்தி வந்திருக்கிறேன். திருவருள் புரியுங்கள் சுவாமி...' எனக் கதறினார்.குருதேவரின் சமாதி பிளந்தது. இரு கரங்கள் நீட்டி, கண்ணப்பரைத் தழுவி, அப்படியே தம் மடி மீது ஐக்கியப்படுத்திக் கொண்டார், குருதேவர். சமாதி மறுபடியும் மூடிக்கொண்டது.உத்தமர்கள் ஜீவ சமாதி அடைந்த அத்திருத்தலம் மாயூரத்திற்கு அருகில், 'சித்தர் காடு' என்ற பெயரில் உள்ளது. அலைபாயும் மனதை அமைதிப்படுத்தும் இடம் அது. நினைப்போம், நீங்காத துயரம் நீங்கும்; மன மகிழ்ச்சி ஓங்கும்!பி. என். பரசுராமன் ஆன்மீக தகவல்கள்!தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர, திரி அல்ல. திரி, எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.