இது உங்கள் இடம்!
'அதற்கு' முன் அனுபவம் தேவையா?சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றின், சில காட்சிகளைப் பார்த்து அதிர்ந்து போனேன். அதில் காமெடியன், 'கத்திச் சண்டையில் தோற்கலாம், கட்டில் சண்டையில் தோற்கக்கூடாது...' என, ஒரு ஆண்மகனுக்கு அதுவும், தன் தங்கையை விரும்பும் காதலனுக்கு அறிவுரை கூறி, அவனை, 'பலான' இடத்திற்கு, முன் அனுபவம் பெற அழைத்துச் செல்வதாக நீளுகிறது காட்சி.அது நகைச்சுவை காட்சிதான் என்றாலும், எதற்கும் ஒரு எல்லை இல்லையா? இப்படி எல்லா ஆண்மகனும், முன் அனுபவம் தேடி புறப்பட்டால், எய்ட்சில் தான், முடியும். இதையே பெண்கள் செய்தால், இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா?அன்றைக்கு நகைச்சுவை என்றால், அறிவு சார்ந்து இருக்கும். என்.எஸ்.கே., போன்றோர் மகுடம் சூட்டிய அந்த கலையில், இப்போது இரட்டை அர்த்த வசனங்களும், மலிவான யோசனைகளுமே முன்வைக்கப்படுகின்றன. நாட்டுப்பற்றோடு, தேசிய உணர்வையும் ஊட்டிய சினிமா, இன்றைக்கு வெறும், 'டைம் பாசாகி' விட்டது, கவலையளிக்கிறது.இறுதியாக... நீங்கள் சந்தனமா மணக்க வேண்டாம் காமெடியன்களே... தீயா வேலை செய்றோம்கிற பேரில், நாயா வேலை செய்து, சமூகத்தை நாறடிக்க வேணாமே... என, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.- யாழினி கவுதம், காரைக்குடி.நோ தீபாவளி, நோ பொங்கல்!தீபாவளி பண்டிகையன்று, வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வதற்காக, கையில் ஸ்வீட் பாக்சோடு, நண்பர் ஒருவர் வீட்டுக்கு நேரில் சென்றிருந்தேன். குடியிருப்பில், நண்பரின் வீடு மட்டுமே கலகலப்பின்றி இருந்தது. வீட்டுக்குள், நான் கண்ட காட்சி, என்னை வியப்பில் ஆழ்த்தியது!அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள, சமவயது பிள்ளைகளெல்லாம் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, ஆனந்தமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், நண்பரின் பிள்ளைகளோ புத்தகமும், கையுமாக இருந்தனர். என் பார்வையை புரிந்து கொண்ட நண்பர், 'இந்த ஆண்டு எங்களுக்கு நோ தீபாவளி, நோ பொங்கல்...' என்றார்.'ஏன்?' என்று கேட்டேன்.'மகள், பிளஸ் 2 படிக்கிறாள்; மகன் பத்தாவது படிக்கிறான். இருவருமே, இந்த ஆண்டு, போர்டு எக்சாம் எழுத இருக்கிறார்கள். பரிட்சையில் நல்ல மார்க் எடுத்தால்தான், டிரஸ், ட்ரீட், என்டர்டெயின்மென்ட் எல்லாமே...' என நண்பர் கூற, அவரது பிள்ளைகளின் கண்களில், எதையோ, 'மிஸ்'செய்றோம் என்ற ஏக்கம் தெரிந்தது!பெற்றோரே... பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த உங்களின் கனவு நியாயமானதாக இருக்கலாம். ஆனால், அதை செயல்படுத்துவதில், இத்தனை கண்டிப்பும், கறார்த்தனமும் தேவைதானா? கல்வியை ஊட்டுவது, இனிப்பாக இருக்க வேண்டுமேயல்லாமல், திணிப்பாக இருக்கக் கூடாது!- பாலா சரவணன், சென்னை.பெண் பார்க்க செல்கிறீர்களா?அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, என் நண்பரிடம் இருந்து போன் வந்தது. எங்கள் ஊரில் உள்ள கோவிலுக்கு, உடனடியாக வருமாறு அழைத்தார். என்ன விஷயம் என்று புரியாமல், நானும் அங்கு சென்றேன். அங்கு என் நண்பரும், மற்றும் அவரின் குடும்பத்தாரும், ஒரு இடத்தில் ஒன்று கூடியிருந்தனர். அப்போது, ஏற்கனவே அங்கு வந்திருந்த, மற்றொரு குடும்பத்தார், சற்று தொலைவில் அமர்ந்திருந்தனர்.என் நண்பரின் அம்மா, அங்கிருந்த பெண், ஒருவரைக் காட்டி, 'பிடித்திருக்கிறதா?' என, அவரிடம் கேட்டார். அவரும் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன், அவர் அங்கு சென்று, ஒரு பெண்ணிடம் பூவும், ஸ்வீட் பாக்சும் கொடுத்து, பேசிவிட்டு வந்தார். நடப்பது எதுவும் புரியாத நான், என்னவென்று விசாரித்தேன்.அதற்கு அவர், சற்று தொலைவில் இருக்கும் பெண் தான், எங்க வீட்ல எனக்கு திருமணத்திற்கு பார்த்து வச்சிருக்கிற பொண்ணு என்றும், போட்டோவை பார்த்து, எங்கள் வீட்டில் சம்மதித்து விட்டனர். ஆனால், வரனை நேரில் பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால் தான், நேற்றே அப்பெண் வீட்டாரிடம், குடும்பத்துடன் கோவிலுக்கு வருமாறும், அங்கு பெண்ணை பார்த்துக் கொள்கிறோம் என்றும், கூறி விட்டோம்.பெண் பார்க்க போகிறோம் என, ஒரு கூட்டத்தையே கிளப்பி கொண்டு போய், பெண்ணை பார்த்து, ஏதேனும் காரணத்தால் நின்று போனால், அந்த பெண்ணுக்கும், அவர் குடும்பத்திற்கும் ஏற்படும் மனகஷ்டத்திற்கும், கேலிப் பேச்சுக்கும் யார் பதில் சோல்வது!மேலும், அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக பேசுவர். அதனால் தான், இம்மாதிரி பொது இடங்களில் சென்று பார்த்து விட்டு, பின், திருமணம் செய்ய சம்மதம் இருந்தால் மட்டும், அவர்கள் வீட்டிற்கு, உற்றார் உறவினரை அழைத்துக் கொண்டு போக முடிவெடுத்தோம்' என்று கூறினார்.நண்பரின் இந்த யோசனை சரியென தோன்றியது.- கா.கந்தசாமி, விருதுநகர்.பிளாஸ்டிக் பையை ஒழிக்க...சமீபத்தில், மும்பையில், ஒரு பிரபல டிபார்ட்மென்ட் கடையில், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க, ஒரு நூதன முறையைப் பின்பற்றுவதைக் கண்டேன்.வாடிக்கையாளர்கள், தங்கள் தேவைக்கேற்ப துணிப் பைகளை, சைஸ் வாரியாக, 50ரூபாய், 100ரூபாய் என, டெபாசிட் செய்து பெற்றுக் கொண்டு, பொருட்களை பெற்றுச் செல்லலாம். பின்னர், தாங்கள் எடுத்துச் சென்ற பையை திருப்பி தந்து, டிபாசிட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இங்கு, பிளாஸ்டிக் பை உபயோகம் இல்லை. கடைக்காரர்களும், பையை திருப்பித் தர, வாடிக்கையாளர்களை வற்புறுத்துவதில்லை. வாடிக்கையாளர்களும், மகிழ்ச்சியாக பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.எல்லாக் கடைகளிலும், இதைப் போலவே பின்பற்றலாமே? பிளாஸ்டிக் பைகளின் உபயோகம், மிகவும், குறைய வாய்ப்புள்ளது.- கே.ஸ்ரீனிவாசன், சென்னை.