இது உங்கள் இடம்!
இளம் பெண்களே எங்கே செல்கிறீர்கள்சமீபத்தில், சிதம்பரம் மேல வீதியில், நடந்து சென்றபோது, நான் கண்ட காட்சி, அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும், பெண்களே வெட்கப்படும்படியாகவும் இருந்தது. இரண்டு இளம் பெண்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். எதிர் திசையிலிருந்து, ஒரு இளம் பெண் வந்தார். மூவரும், தோழிகள் போலும். திடீரென, இருவரில், ஒருவரின் வலது பக்க மார்பை, செல்லமாக திருகினாள் எதிர் திசையில் இருந்து வந்தவள். கோபப்பட வேண்டியவளோ, சற்றும் கூச்சமில்லாமல், தன்னை திருகியவளின் மார்பை, பதிலுக்கு திருகினாள். மூவரும் சிரித்தபடி, பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். ஒரு வினாடியே நடந்து விட்ட, இந்த நிகழ்ச்சியைப் பார்த்த, எனக்கு, மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. என்னைப் போல் எத்தனை பேர், இந்த கண்றாவி காட்சியை பார்த்தனரோ! இது, என்ன பேஷனோ தெரியவில்லை. பட்டப்பகலில், கூட்டம் நிறைந்த கடைவீதியில், இது மாதிரியா நடந்து கொள்வது? அந்த மூன்று தோழிகளும், இதை படிக்க நேர்ந்தால், தங்களை திருத்திக் கொள்வரா? இளம் பெண்களே... உங்களது, 'பிரண்ட்ஷிப்'பை யும், நெருக்கத்தையும், நாகரிகமாக காட்ட முயற்சியுங்களேன்!- ஆர்.வளர்மதி, நெய்வேலி.கண்ணியத்துடன் பழகுங்களேன் ஆண்களேஎன் அலுவலக சிநேகிதியின், மொபைல் போனை பார்க்கும், சந்தர்ப்பம் கிடைத்தது. அதில், சில எண்களுக்குரிய பெயர்கள், சற்று வித்தியாசமாக இருக்கவே, அவளிடமே, இதைப் பற்றி, விளக்கம் கேட்டேன்.எப்பவும், கழுத்துக்கு கீழேயே, பெண்களை, திருட்டுதனமாய் ரசிக்கும், தன் எம்.டி.,யை, 'கழுகு' என்றும், இடுப்பு சேலை விலகாதா என, அலையும் மேனேஜரை, 'சபலிஸ்ட்' என்றும், பைலை பெற்றுக் கொள்ளும் சாக்கில், பல்லைக் காட்டி, 'ஜொள்' விடும் ஆபிஸ் பியூனை, 'டென்டிஸ்ட்' என்றும், சதா, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அன்புத் தொல்லைக் கொடுக்கும் என்னை, 'இம்சை' என்றும், பதிவு செய்து வைத்திருப்பதாக கூறினாள்.'ஆண்கள் அனைவரும், உன் பார்வையில் மோசமானவர்கள் என்று அர்த்தமா?' என்று, கோபத்துடன் அவளிடம் கேட்டேன். அதற்கு அவள், 'இளமையிலேயே மனைவியை இழந்தும், மறுமணம் செய்து கொள்ளாமல், என் நலனுக்காக பாடுபடும் என் தந்தையை, 'லிவிங் காட்' என்றும், ஊனத்தை, ஒரு குறையாக கருதாமல், வாழ்க்கையில் போராடி வெற்றி கண்ட மாற்றுத் திறனாளியான, என் அலுவலக அக்கவுன்டன்டை, 'நம்பிக்கை' என்றும் பதிவு செய்திருக்கிறேனே... இவர்களும், என் பார்வையில் ஆண்கள்தானே!' என, அவள் பதில் கூறியதும், சம்மட்டியால் அடித்தது போலிருந்தது.ஆண்களே... பெண்களிடம் கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் பழகுங்கள். இல்லை என்றால், ஆண்களைப் பற்றிய பெண்களின் மதிப்பீடு, இப்படித்தான், மலிவாக இருக்கும்.- எஸ்.சரவணன், சென்னை.பேச்சில் வரைமுறை இருக்கட்டும்!வாய் துடுக்கு நிறைந்த நண்பனோடு, கடை வீதியில், பொருட்கள் வாங்க சென்றிருந்தேன். வீட்டுக்குத் தேவையானவைகளை வாங்கிக் கொண்டு, தின்பண்டம் வாங்க, ஒரு, 'ஸ்வீட் ஸ்டாலு'க்கு போனோம். நாங்கள் சென்றதும் கடைக்காரர், 'என்ன வேண்டும்?' என்று கேட்க, என் நண்பனோ, 'இந்தக் கடை வேணும்...' என்றான். கடைக்காரர் சற்றும் யோசிக்காமல், 'அதுக்கு, நீ, எங்கப்பனுக்கு பொறந்திருக்கணும்...' என்றவுடன், நண்பனின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே. பதில் ஏதும் சொல்ல முடியாமல், சற்றே நகர்ந்து கொண்டான்.நான் கடைக்காரரிடம், 'என்னண்ணே... இப்படி சொல்லிட்டீங்க...' என்றேன். 'தம்பி, எது எதை, எப்படி பேசணும்ன்னு ஒரு வரைமுறை இருக்கு. இன்று என்னிடம், இப்படி பேசுறவன், நாளை, என் கடையில, வேலை பார்க்குற பொண்ணு, 'என்ன வேணும்ன்'னு கேட்டா, 'நீ தான் வேணும்ன்'னு சொல்ல மாட்டான்'னு என்ன நிச்சயம்... இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் இப்படித்தான் பதில் சொல்லணும்...' என்றார். அதுவும் சரி தான் என்று, நினைத்துக் கொண்டேன். 'யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்; சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு ' என்ற குறளும் ஞாபகத்துக்கு வந்தது.- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.