உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

படித்தால் மட்டும் போதாது...சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு...'பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, 'இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா துடைச்சுடு...' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். தன்னிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது.அதோடு, 'இதே பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ...' என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். 'குழந்தைகளை வளர்க்கும் முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில் பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது. மீண்டும், அதே தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும். அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்...' என்று, அவர் விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது. புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது... படிக்கும் நல்ல விஷயங்களை, தக்க தருணத்தில் நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற உண்மை புரிந்தது. — -எஸ்.ராமன், சென்னை.கலாசாரத்தைக் கெடுக்கும், 'சீரியல்கள்!'பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில், திங்கள் முதல் வெள்ளி வரை, பகல் 1.30 மணி முதல் 2.00 மணி வரை ஒளிபரப்பாகும் மெகா தொடரில், தன் மனைவியின் முதல் கணவருக்கு, மூன்றாவது கணவர் பெண் பார்க்கும் படலம் அரங்கேறிக் கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், அப் பெண்ணின் முதல் கணவன், இரண்டாவது கணவரின் தந்தை மற்றும் மூன்றாவது கணவர் ஆகிய அனைவரும் ஒரே வீட்டில் வாழ்வது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதுவா இன்றைய கூட்டுக் குடும்பம்?அதே தொடரில், திருமணமாகாத பெண், தன் அக்காவின், திருமணமான கொழுந்தனாரை மணம் முடிக்க விரும்பி, அவனின் மனைவியை கொலை செய்ய, பாயசத்தில் விஷம் வைக்கிறாள். அது, அவனின் தாயார் மரணத்திற்கே காரணமாகி விடுகிறது. குடும்பப் பெண்கள் கோவிலுக்குச் சென்று வருவது போல், வாரம் இருமுறை போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் கைதிகளாக செல்கின்றனர்.என்ன கொடுமை சார் இது?என் கல்லூரியின் நாற்பது நாள் விடுமுறையில், என் அம்மா பார்த்துக் கொண்டிருந்த இந்த தொடரை, நான் பார்த்த போது அதிர்ந்து விட்டேன். தமிழ் கலாசாரத்தை இப்படி இழிவாக சித்தரிப்பதை தவிர்ப்பது நன்று. அப்படியே இது போன்ற மெகா தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப் பானாலும், என் அம்மா போன்று வீட்டில் இருக்கும் பெண்கள், இத்தகைய தொடர்களை பார்க்காமல் புறக்கணிப்பது நன்று.— பெயர் வெளியிட விரும்பாத பொறியியல் கல்லூரி மாணவி.வேண்டாமே கண்ணாடி!என் தோழியின் திருமணத்திற்காக பரிசுப் பொருள் வாங்கச் சென்றிருந்தேன். கோப்பைகள், தம்ளர்கள், தட்டுகள் என, பல வண்ண வேலைப்பாடுகளுடன் கண்ணாடியில் தயாரிக்கப்பட்ட, 'டின்னர்செட்' என் கண்ணைக் கவர்ந்தது. 650 ரூபாய் விலை கொடுத்து, அந்த எழில்மிக்க, 'டின்னர் செட்டை' வாங்கி, தோழியின் திருமணத்தில் பரிசளித்தேன்.ஒரு மாதம் சென்ற பின், தோழியை சந்தித்தபோது, அந்த, 'டின்னர் செட்டின்' கோப்பைகளும், தம்ளர்களும் உடைந்து விட்ட விபரத்தைச் சொன்னாள்.'பிரிக்கும் போதே அதில் இரண்டு கோப்பை கீறல் விட்டிருந்தது, விருந்தினர் வந்தபோது தம்ளர்களை புழங்கியதில் மூன்று உடைந்து விட்டது, டிபன் சாப்பிட்டுவிட்டு கழுவியபோது இரண்டு தட்டுகள் நழுவி நொறுங்கின, சமையலறை அலமாரியில் வைக்கும் போது இடித்ததில் ஒரு தட்டு உடைந்தது...' என்றெல்லாம் கணக்கு சொல்லிய அவள், 'நீ நெருங்கிய தோழி என்பதால்தான் உன்னிடம் சொல்கிறேன்; வேறு ஆளாக இருந்தால் சொல்ல முடியுமா?' என்று கூறினாள்.இனி, கல்யாணமோ, காது குத்தோ பரிசுப் பொருளாக கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்களை கொடுப்பதில்லை என, அப்போதே முடிவு செய்தேன்.— என்.மகாலட்சுமி தனசேகர், செய்யாறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !