உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

வித்தியாசமான முயற்சிஎன் உறவினரின் மகன் திருமணத்திற்கு சென்றிருந்தேன்; மணமக்கள் இருவரும் சாப்ட்வேர் பணியில் உள்ளவர்கள்.திருமணத்தில் விருந்து முடிந்ததும், வந்திருந்தோர் மொய் எழுத, மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர், ஒரு நோட்டில், மொய் எழுதுவோரின் பெயரையும், அவர்கள் அளிக்கும் மொய் தொகையையும் எழுதிக் கொண்டிருந்தார். அதேநேரம், அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த அவ்வூர் கோவிலை சேர்ந்த சிப்பந்தி ஒருவர், மொய் எழுதுவோரின் பெயரை எழுதி, அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்ப, கோவில் சார்பாக, நன்கொடை ரசீதை வழங்கிக் கொண்டிருந்தார். இது, எனக்கு வியப்பாக இருந்தது. மணமகனின் தந்தையை அணுகி, விவரம் கேட்டேன். விருந்தினர்கள் செலுத்தும் மொய் பணம் முழுவதும் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அளித்து விடும்படியும், அதே நேரத்தில், இதனால் கிடைக்கும் புண்ணியம், எல்லா சுற்றத்தாருக்கும், நண்பர்களுக்கும், விருந்தினர்களுக்கும் போய் சேரட்டும் என்று மணமகன் யோசனை சொன்னதாக கூறினார்.நான் இதுவரை பார்த்த மண விழாக்களிலேயே, இந்த மண விழா, புதுமையானதும், போற்றத்தக்கதாகவும் இருந்தது. இன்றைய படித்த இளைஞர்களிடையே ஆன்மிகம் இன்னும் மடிந்து விடவில்லை என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.நூலகரின் அர்ப்பணிப்பும், வாசகரின் அன்பளிப்பும்!எங்கள் ஊர், ஒரு தேர்வு நிலை பேரூராட்சி தான்; ஆனால், இங்குள்ள கிளை நுாலகம், பெரு நகர நுாலகத்துக்கு இணையாக அனைத்து வசதிகளோடு, தினமும், 12 மணி நேரம் செயல்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு, 10 ரூபாய் கட்டணத்தில் இணையதள சேவை மற்றும் நகல் எடுக்கும் வசதி செய்து தந்திருப்பதுடன், வாசகர்களுக்கு துாய்மையான குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் போட்டி தேர்வர்களுக்கென புத்தகங்களுடன், வாசிக்க தனி ஹால் உள்ளது. இந்த வளர்ச்சிக்கு காரணம், அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரியும் நுாலகரின் அயராத உழைப்பும், தொடர் முயற்சியும் தான்.அரசு பணி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்த இளைஞர்களும், பெண்களும், தினமும் நுாலகத்துக்கு வந்து குறிப்பெடுத்து செல்வர். ஆறு மாதத்துக்கு முன், இந்த நுாலகத்திற்கு வந்த இளைஞர் ஒருவர், நுாலகத்தின் வசதிகளை பார்த்து, வியந்து பாராட்டி, 'போட்டி தேர்வுக்கு என்னை தயார்படுத்திக்க ஒரு பயிற்சி மையத்தில், சில ஆயிரம் ரூபாய்களை கட்டணமாக செலுத்தி சேர இருந்தேன்; ஆனால், இப்போது, தினமும் இங்கு வந்து குறிப்பெடுத்து தேர்வில் வெற்றியடையலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. நுாலகத்துக்கு காணிக்கையாக, ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொள்ளுங்கள்...' என, தந்தார். அந்த இளைஞர், நாள் தவறாமல் நுாலகம் வந்து, கவனமாக படித்து, போட்டி தேர்வில் வென்று, அரசு பணியையும் பெற்றார். இந்நிலையில், ஒருநாள், நுாலகத்தில், மகாகவி பாரதியின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த அந்த இளைஞர், 'என்னை வெற்றியாளனாக்கிய இந்த நுாலகத்தின் வளர்ச்சிக்கு, 10 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்குகிறேன்...' என்று, பணத்தை நுாலகரிடம் கொடுத்தார். அங்கிருந்த பலரும், அவரை பாராட்டினர்.எங்கள் ஊர் நுாலகரைப் போன்று, எல்லா நுாலகர்களும் தங்கள் பணியில் முனைப்பு காட்டினால், எண்ணற்ற இளைஞர்களை வெற்றியாளர்களாக உருவாக்க முடியும்! — ம.ராஜா, திருக்கோவிலுார்.பரிசோதனைக்கு போகிறீர்களா பர்ஸ் பத்திரம்!கடந்த மாதம் வரை ஆரோக்கியமாக வலம் வந்த என் நண்பன், சில நாட்களாக சோர்வுடன், பித்துப் பிடித்தாற் போன்று காணப்பட்டான்.'என்னடா ஆச்சு... நல்லாத்தானே இருந்தே...' என, வினவினேன். 'ஒண்ணுமில்ல மச்சான்... 'நாலாயிரம் ரூபாய்க்கான முழு உடல் பரிசோதனையை, தள்ளுபடியில ஆயிரம் ரூபாய்க்கு செய்து கொள்ளலாம்!' என்ற விளம்பரத்தைப் பார்த்து, பரிசோதனை செய்தேன். ரிசல்ட்ல எனக்கு, கொலஸ்ட்ரால், பிளட் பிரஷர் மற்றும் சுகர் ஆரம்ப நிலையில இருக்குன்னு சொல்லி, ஒரு மாசத்துக்கு ஆறாயிரம் ரூபாய்க்கு மருந்து, மாத்திரை கொடுத்திருக்காங்க. அதுலேர்ந்து ஒரே பீலிங்கா இருக்கு...' என்றான்.கார்ப்பரேட் கம்பெனிகளின் பிடியில் மருத்துவத்துறை சென்றது முதல், நாட்டில் உள்ள அனைவரையும் நோயாளிகளாக மாற்றும் ஒரு சூழ்ச்சி, சத்தமில்லாமல் நடந்து வருகிறது. 'தலைக்கு வந்தது தலைப் பாகையோட போச்சுங்கற மாதிரி, ஏழாயிரம் ரூபாய் நஷ்டம், நஷ்டமாகவே போகட்டும்; உன் மன திருப்திக்கு, தனித் தனியா ஒரு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட, சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால் மூணையும், 'செக்' பண்ணி, அந்த ரிசல்ட்டை ஒப்பிட்டுப் பார்த்து, உனக்கு கோளாறு இருக்கா, இல்லயாங்கறதை முடிவு செய்துக்க...' என்று அறிவுறுத்தினேன்.தள்ளுபடி விலையில் விற்கப் படும் உடைகள் மாத்திரமல்ல, மெடிகல் டெஸ்டுகளும் பிரச்னைக்குரியவை தான்.— ஜி.கோபால கிருஷ்ணன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !