இது உங்கள் இடம்!
'பிளான்' பண்ணி திருடறாங்கய்யா...நான், சிறிய அளவில் கேட்டரிங் தொழில் செய்து வருகிறேன். ஒருவர், தன் வீட்டு விசேஷத்துக்கு, 175 பேருக்கு மதிய உணவு வேண்டும் என்று வந்தார். நான், மெனு லிஸ்ட்டை கூறிக் கொண்டிருந்தேன்; நான் கூறுவதை கேட்காமல், என் மொபைல் போனிலேயே அவரது கவனம் இருந்தது. அந்த புது மாடல் போன் பற்றி ரொம்பவே விசாரித்தார். இடையில் ஒருமுறை, யாருக்கோ, அவர் மொபைல் போனிலிருந்து தொடர்பு கொண்டார்; பலமுறை முயன்றும், தொடர்பு கிடைக்கவில்லை.'என் மொபைல் போனில் ஏதோ பிரச்னை. உங்களது போனை கொடுங்கள். நண்பரிடம் பேசி, அட்வான்ஸ் பணம் கொண்டு வர சொல்கிறேன்...' என்று கூறி, என் மொபைல் போனை வாங்கிக் கொண்டார். இரண்டு, மூன்று முறை முயற்சி செய்து, 'நண்பர் ஏதோ பிசியாக இருப்பார் போலிருக்கு... மிஸ்டு கால் கொடுத்துள்ளேன். சற்று நேரத்தில் அவரே இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்வார். அதுவரை, இந்த போன் என்னிடமே இருக்கட்டும்...' என்று கூறி, அவரது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.அரை மணி நேரத்துக்கும் மேலாக, ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், 'நண்பர் போன் செய்யவில்லை. யாராவது ஒருவரை என்னுடன் அனுப்புங்கள். வீட்டிற்குச் சென்று, அட்வான்ஸ் பணத்தை கொடுத்து அனுப்புகிறேன்...' என்றார்; நானும், என் உதவியாளரை அனுப்பினேன். எங்கெங்கோ, பைக்கில் சுற்றி வளைத்து, 12 கி.மீ., தூரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்று, ஒரு அபார்ட்மென்ட் முன் இறங்கி, 'இதற்குள்தான் என் பிளாட் உள்ளது. ஒரு நிமிடம் இருங்க... உள்ளே சென்று பணம் கொண்டு வருகிறேன்...' என்று கூறி, என் உதவியாளரை தெரு ஓரம் நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும், அந்த நபர் வெளியே வராததைக் தொடர்ந்து, என் உதவியாளர் பிளாட், பிளாட்டாக தேடியுள்ளார்; ஆள் அகப்படவே இல்லை. திரும்பி வந்து, என்னிடம் தகவல் கூறினார். அப்போதுதான், எங்கள் மூளையில், 'பளிச்' என்று பல்ப் எரிந்தது. 15 ஆயிரம் ரூபாய் விலையுள்ள மொபைல் போன், போயே போயிந்தி... கேமரா, ப்ளூ டூத், இன்டர்நெட், 3ஜி வசதி என்று, ஏகப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் மொபைல் போன்கள் ஒருபுறம் அணிவகுக்க, மற்றொரு புறம், அதை, 'ஆட்டையை' போடுவதற்கென்றே ஒரு கூட்டம் புது, புது டெக்னிக்குகளுடன் உலா வருகிறது. நீங்களும் உஷாராக இருந்துக்கங்க...— எஸ்.ரகுராமன், சென்னை.விபரீதமாகும் விளம்பரம்!'தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் ஆபாசமாக உள்ளன; அதை, தணிக்கை செய்ய வேண்டும்...' என்ற கோரிக்கை, ரொம்ப நாளாக உள்ளது. ஆனால், அரசு அதை கண்டு கொள்வதே இல்லை. இப்போது வரும் விளம்பரங்கள், மாணவர்களை குறி வைப்பதாகவே உள்ளன. சமீபத்தில், என் மகள், கணக்குப் பரீட்சையில், '3 து 3 என்ன?' என்ற கேள்விக்கு, 'மூன்று' என்று பதில் எழுதியதில், ஐந்து மார்க் குறைவாகி விட்டது. வினாத்தாளை வாங்கிப் பார்த்த நான், '3 து 3 = 9 எனத் தெரியாதா?' என்று கண்டிக்க, அவள் கூறிய காரணம், எனக்கு தூக்கி வாரிப் போட்டது. 'டாடி... நீங்க, 'டிவி' விளம்பரமே பார்ப்பதில்லையா... விளம்பரத்தில் ஒரு ஆன்ட்டி, 3 து 3 = 3ன்னுதான் சொல்வாங்க...' எனக் கூறினாள்.மற்றொரு நாள், 'மம்மி... கணக்கு புக்கை மிக்சியில் போட்டு அரைத்து குடித்தா, கணக்கு நல்லா வருமா? 'டிவி'யில காட்டுறாங்களே...' என, என் மனைவியிடம் கேட்டிருக்கிறாள். என் மகனோ, அடிக்கடி சேற்றில் புரண்டு, கிருமிகளால் நோய்வாய்படுகிறான். கேட்டால், 'கறை படிவது நல்ல விஷயம் தானே...' எனக் கூறுகிறான். விளம்பரம் தயாரிக்கும் நிறுவனங்கள், வியாபாரம் ஒன்றையே குறிக்கோளாய் கொள்ளாமல், அது மக்களை சென்றடையும் போது, தவறான பாதைக்கு வழி வகுக்காத வகையில் தயாரிக்க வேண்டும். ஏற்கனவே, சக்திமான், ஸ்பைடர்மேன் போன்ற தொடரில் வரும் கதாநாயகன் போல், கட்டடங்களில் இருந்து குதித்து, பல மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. அதுபோல், இனியும் நடக்கக் கூடாது. ஆகையால், விளம்பரங்களையும் அரசு தணிக்கை செய்ய வேண்டும்.— பெ.பொன்ராஜபாண்டி, மதுரை.இனியாவது பின்பற்றலாமே!கல்லூரி மாணவனான நான், என் தம்பி படிக்கும் பள்ளிக்கு சென்றிருந்தேன். அப்போது, அங்கு உள்ள கேன்டின் மற்றும் அருகில் உள்ள கடைகளில், 'சூயிங்கம், பூமர், சென்டர் பிரெஷ்' போன்ற, பபுள்கம் வகைகள் விற்க தடை விதித்தது பற்றி தெரிய வந்தது; எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இப்போதெல்லாம் சில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றாலே, நம் கால்களில் முதலில் மிதி படுவது, பபுள்கம் வகைகள் தான். இதை தடுக்க, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது குறித்து, மனதுக்குள், சபாஷ் போட்டுக் கொண்டேன். இனியாவது அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இதை பின்பற்றலாமே! 'சூயிங்கம், பூமர், சென்டர் பிரெஷ்' போன்றவற்றை சாப்பிடுவதால், புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என்று, பல மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இக்காலத்தில் அனைத்து மாணவர்களும், 'பபுள்கம்' சாப்பிடுவதை, பேஷனாக கருதுகின்றனர், அதனால் வரும் பின் விளைவுகளை பற்றி, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வது அவசியம். — ந.வெங்கடேஷ், திருமங்கலம்.