இது உங்கள் இடம்!
சபாஷ், பட்டதாரி இளைஞர்களே...அண்மையில் நடந்த அரசு பொதுத் தேர்வில், எங்கள் ஊர் அரசு பள்ளி, 10ம் வகுப்பில், 87 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 13 பேர் தேர்ச்சி பெறாததால், பள்ளியின், 100 சதவீத தேர்ச்சி பறிபோனது. இதை அறிந்த எங்க ஊர் பட்டதாரி இளைஞர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டறிந்து, எந்த பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையோ, உடனடியாக, அவர்களுக்கு அரசு தேர்வுக்கு விண்ணப்பித்து, அந்தந்த பாடங்களில் முறையான பயிற்சி அளித்து, வெற்றி பெற செய்ததோடு, 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற வைத்தனர்.அதோடு நில்லாமல், தற்போது, 10ம் வகுப்பு படிக்கும் அதே பள்ளி மாணவர்களில், பின்தங்கிய மாணவர்களை அழைத்து, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயிற்சியளிக்க துவங்கியுள்ளனர்.மாணவர்களின் பெற்றோரும், இதற்கு பக்க பலமாக உள்ளதால், '100 சதவீத தேர்ச்சி இலக்கு மட்டும் அல்லாமல், 400க்கு மேல் மதிப்பெண் பெற வைப்பதே எங்கள் நோக்கம்...' என்கின்றனர் அந்த இளைஞர்கள்.பட்டதாரி இளைஞர்களை போல், ஊருக்கு சிலர் இருந்தால், தமிழ்நாடு, கல்வியில், 100 சதம் அடைந்து விடும்.— உமா புருஷோத்தமன், ஆதிச்சபுரம்.மறந்தவைகளை சொல்லிக் கொடுங்க!வீட்டுக்கு அருகே வசிக்கும் சிறுவர்கள், என் வீட்டுக்கு அவ்வப்போது வருவதுண்டு. ஒரு நாள் எனக்கு வந்த அஞ்சல் அட்டை ஒன்றை எடுத்து, 'இது என்ன அங்கிள்?' என்றதும், அதிர்ந்து போனேன். 'இது தான் அஞ்சல் அட்டை... நாட்டிலேயே மிகவும் குறைந்த விலை தகவல் சாதனம். இதை, எளியோரும் பயன்படுத்தலாம்...' என்றேன்.அஞ்சல் அட்டை, அஞ்சல் கவர் மற்றும் இன்லாண்டு லெட்டர் ஆகியவற்றை எடுத்து காட்டியதோடல்லாமல், மறுநாளே தபால் அலுவலகம் சென்று, சில அஞ்சல் அட்டைகளை வாங்கி, சிறுவர்களிடம் கொடுத்து, இதில், ஒருவருக்கொருவர் நல்ல செய்திகளை எழுதி, அவர்களின் முகவரிக்கு தபால் பெட்டியில் போட சொல்லிக் கொடுத்தேன். அத்துடன் பின் கோட்டின் முக்கியத்துவம் பற்றியும் கூறினேன். ஓரிரு நாட்களில், தங்கள் பெயருக்கு வீடு தேடி கடிதம் வந்ததை காட்டி, மகிழ்ந்தனர். இந்த பழக்கம், அவர்களின் பள்ளி நண்பர்களுக்கும் பரவி, தங்கள் உறவினர், நண்பர்களுக்கு அவ்வப்போது கடிதம் எழுதி வருகின்றனர். தொழில்நுட்பம் வளர்ந்த இணைய உலகில், இ - மெயில் மற்றும் வாட்ஸ்- - ஆப்பில் மூழ்கியுள்ள இளைய தலைமுறையினருக்கு, இது போன்ற மறக்கப்பட்ட தகவல் பரிமாற்ற முறைகளையும் சொல்லித்தந்து, தபால் துறைக்கு உயிரூட்டலாமே!— எம்.விக்னேஷ், மதுரை.அரசு பள்ளிகளுக்கு சிறுவர் இதழ்கள் வழங்கலாமே!என்னுடன் பணிபுரியும் சக ஆசிரியையின் அரசு பள்ளிக்கு சென்றிருந்தேன். குழந்தைகளுக்கான இதழ்கள் அனைத்தும் இருந்தன. மதிய உணவு இடைவேளையில், குழந்தைகள் அதை படித்துக் கொண்டிருந்தனர்.விசாரித்த போது, வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர், 50 அரசு பள்ளிகளுக்கு, சிறுவர் இதழ்களை சந்தா செலுத்தி, வாங்கித் தருவதாக கூறினர். அரசு பள்ளிகளுக்கு இதுபோல் புத்தகங்களை வழங்கி, வாசிப்பின் அருமையை குழந்தைகளுக்கு உருவாக்கி தரும், அந்த நல்ல மனிதரை மனதார பாராட்டினேன்.நீங்களும், இதுபோல உங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, நுால் கொடை கொடுத்து உதவுங்களேன்!—ம.ஜெயமேரி, சிவகாசி.