உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பேராசை வேண்டாம், பெற்றோரே...சில ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய, நண்பர் மகளின் திருமணம், தற்போது, முறியும் நிலையில் உள்ளதை கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன். அதற்கான காரணங்களை அலசி ஆராய்ந்தபோது, கிடைத்த தகவல்களின் சாராம்சம் இது: மாற்றுத் திறனாளியான மகளை, அம்மாதிரி குறைபாடுகள் இல்லாத ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கும் அவாவில், பெண்ணின் படிப்பையும், மற்ற திறமைகளையும் பல மடங்கு மிகைப்படுத்தி காட்டியுள்ளனர், பெற்றோர். மேலும், அவள் கை நிறைய சம்பாதிப்பதாகவும், தவறான தகவல்களை அளித்துள்ளனர்.பெண்ணின் உடல் குறைக்கு ஈடாக, பொருள் கிடைக்கும் என்ற பேராசையில், பிள்ளை வீட்டாரும், முழுவதும் விசாரிக்காமல், திருமணத்திற்கு சம்மதித்து உள்ளனர். ஆனால், பெண்ணை பற்றிய மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள், திருமணத்திற்கு பின் தெரிந்தபோது, விரிசல் அதிகமாகி, தற்போது, கட்டாய பிரிவு வரை நீண்டு விட்டது.ஒரு மாற்றுத் திறனாளியை ஏற்று, அந்த பெண்ணை கடைசி வரை கண்கலங்காமல் காப்பாற்றும் பரந்த மனபக்குவம், மணமகனுக்கு உள்ளதா என்பதை ஆராயாமல் செயல்பட்ட பெண்ணின் பெற்றோரை குறை சொல்வதா...பொருள் வரவிற்காக மட்டும், குறைகளை ஏற்கும் தியாகி போல் நடித்து, அது இல்லையென்றவுடன், நாடி வந்தவளை நிராகரிக்கும் பிள்ளை வீட்டாரின் குறுகிய மனப்பான்மையை சாடுவதா... ஆனால், இரண்டு பக்கமும் பேராசை என்ற அரக்கன் புகுந்து விளையாடி இருப்பது, உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது.மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர், தங்கள் மகள் அல்லது மகனுக்கு, திருமணம் நிச்சயிப்பதற்கு முன், பேராசைகளை பின்னுக்கு தள்ளி, அவர்களின், பாதுகாப்பான வாழ்க்கைக்காக அலசி ஆராய்ந்து, பொருத்தமான ஜோடியை தேர்ந்தெடுப்பது நன்மையை தரும்.- எஸ்.ராமன், சென்னை.புதுமையான வழி!வழக்கமாக அலுவலகம் முடிந்து, வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள, 'டாஸ்மாக்' கடையில், சில நாட்களாக, அந்த பெண்ணை பார்ப்பேன். சற்று பதட்டமாக, ஒரு பாட்டிலை வாங்கி, தலை குனிந்தபடி, அந்த கூட்டத்திலிருந்து விலகி செல்வாள்.தனக்கா அல்லது வேறு யாருக்காவதா... கணவன் அல்லது தந்தைக்கு என்றால், ஒரு பெண்ணை இதற்கு அனுப்புவது நியாயமா என்று நினைத்துக் கொள்வேன்.சில தினங்களுக்கு பின், மனம் பொறுக்காமல் அவளிடமே, 'ஏம்மா... உங்களுக்கு ஒரு மாதிரி இல்லையா...' என்று, கேட்டே விட்டேன். அவள், சுற்றும் முற்றும் பார்த்து, 'ஐயா... எனக்கும் அவமானமா தான் இருக்கு... இது, என் வீட்டுக்காரருக்கு தான்... இப்படி நான் வாங்கலேன்னா, அவரு, இங்க வந்து மொத்த காசையும் குடிச்சே அழிச்சிடுவாரு...'மேலும், போற வழியில, இதுல பாதிய கொட்டிட்டு, கொஞ்சம் சர்பத்தை கலந்திடுவேன்... இது மாதிரி, கொஞ்சம் கொஞ்சமா, அவரோட குடி பழக்கத்தை நிறுத்தலாம்ன்னு நம்பிக்கை இருக்குங்க...' என்றாள்.அவளது முயற்சி வெற்றி பெற, கடவுளை பிரார்த்தித்தேன். வேறு வழி?அரசு, எப்போது 'டாஸ்மார்க்'குக்கு மூடு விழா நடத்தும்! யாருக்கு தெரியும்?- டி.சக்கரபாணி, சென்னை.அபராதமும், 'லைசென்ஸ்' ரத்தும்!நண்பர் ஒருவர், போக்குவரத்து விதியை மீறி, வாகனம் ஓட்டியதால், போக்குவரத்து அதிகாரியிடம் அபராதம் செலுத்தியுள்ளார். அப்போது, அதிகாரி, தன் கையில் வைத்திருந்த, 'மினி கம்ப்யூட்டரில்' நண்பரின் பெயர், 'டிரைவிங் லைசென்சை' பதிவு செய்த பின், அதிலிருந்து அபராத தொகைக்கான ரசீது கொடுக்கப்பட்டது.அந்த அதிகாரி, 'மிஸ்டர்... நீங்க ஏற்கனவே விதிமீறலில் அபராதம் கட்டியிருக்கீங்க... இப்போ அபராதம் கட்டுனது, இரண்டாவது முறை. இன்னொரு முறை அபராதம் கட்டினால், உங்கள் ஓட்டுனர் உரிமம், ரத்தாகி விடும்...' எனக் கூறியுள்ளார்.இதுகுறித்து, நண்பர், ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்று விசாரித்தபோது, 'மூன்றாவது முறை, போக்குவரத்து விதிமீறி, அபராதம் செலுத்துவோரின் ஓட்டுனர் உரிமம், தாமாகவே ரத்தாகி விடும். அதன் பிறகு, ஆறு மாதம் கழித்து, புதிதாக, 'லைசென்ஸ்' கேட்டு விண்ணப்பிக்கலாம். அதுவரை, வாகனம் ஓட்ட முடியாது...' என, அறிவுறுத்தியுள்ளனர்.வாசகர்களே... போக்குவரத்து விதிமுறைகளை கவனமாக கடைபிடியுங்கள். விதிமீறுவோருக்கு ஏற்படும் அவஸ்தையை பார்த்தீர்களா!டி.ஜெய்சிங், கோயம்புத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !