இது உங்கள் இடம்!
உணவு வகைகள் வீணாகாமல் தடுக்க...சமீபத்தில், ஒரு திருமண வரவேற்பில் கலந்து கொண்டேன். அங்கு, சாப்பாடு பரிமாறப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், சாப்பிட அமர்ந்த ஒவ்வொருவருக்கும், தரமான குடிநீர் பாட்டிலோடு, 'டின்னர் மெனு கார்டு'ம் வழங்கப்பட்டது. அதில், அன்று பரிமாறப்பட உள்ள உணவு வகைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.அதை படித்த பின், அவரவருக்கு தேவையானதை மட்டும் பெற்று, விருப்பமில்லாததை தவிர்த்தனர். அதனால், யாராலும், எந்த பதார்த்தமும் வீணாக்கப்படவில்லை; உணவு வகைகள் குப்பைத் தொட்டிக்கு செல்வது தவிர்க்கப்பட்டது.இதுபோல், நறுக்கிய பழ வகைகள், ஐஸ்கிரீம் கவுன்டரிலும் அதன் விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததால், அவரவருக்கு தேவையானதை மட்டும் வாங்கி சாப்பிட்டனர். எதுவும் வீணடிக்கப்படவில்லை. எதையும் வீணாக்காமல், புத்திசாலித்தனமாக செயல்படுத்திய திருமண வீட்டாரை பாராட்ட வேண்டும். இந்த எளிய நடைமுறையை, அனைவரும் பின்பற்றினால், பதார்த்தங்கள் வீணாவதை தடுக்கலாம்; மீந்ததை பிறருக்கு கொடுத்தும் உதவலாமே!எஸ்.சந்திரஸ்ரீநிவாசன், காஞ்சிபுரம்.குடும்பம் ஒரு விருட்சம்!தோழியை பார்க்க, அவள் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவளது மகன், ஆங்கில போதனா முறையுள்ள பள்ளியில் படித்து வருகிறான். அவனுக்காக, 'புராஜக்ட்' தயாரித்துக் கொண்டிருந்தாள், தோழி. அது, வித்தியாசமாக இருக்கவே, அதுபற்றி, அவளிடம் கேட்டேன்.தோழியின் மகன் படிக்கும் பள்ளியில் உள்ள மாணவர்களிடம், ஓர் அட்டையில், மரம் ஒன்றை வரைந்து, அதில், தாய் - தந்தை வழி, தாத்தா - பாட்டி மற்றும், முப்பாட்டன் - முப்பாட்டிகள் ஆகியோரின் மூன்று தலைமுறை பெயர்களை, உயர உயரமான கிளைகளாகவும், அப்பா - அம்மாவின் குடும்ப உறுப்பினர்கள், உடன் பிறந்தோரின் பெயர்களை பக்க கிளைகளாகவும், அழகாக வரைந்து காட்டும்படியாக கூறியுள்ளனர், என்றாள்.கண்டதே காட்சி, மொபைல் போனே உலகம், 'டிவி' பாத்திரங்களே உறவு என்று, இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குழந்தைகள், தங்களின் மூதாதையர் மற்றும் உற்றார், உறவினரை அறிந்து, ஆல மரம் போல் குடும்ப உறவு நிலைத்திருக்க, வழி செய்த, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியரை பாராட்டினேன்!இம்முறையை மற்ற பள்ளிகளும் பின்பற்றலாமே!என்.குர்ஷித், நெல்லை.'மாமனாரின் கிப்ட்!'என் அலுவலக தோழிக்கு, சமீபத்தில் திருமணம் நடந்தது. அவள் பெற்றோர், போதுமான அளவு நகை மற்றும் சீர் வரிசைகளையும் செய்து தான், திருமணம் செய்து கொடுத்தனர். ஆனாலும், மாப்பிள்ளைக்கு, 'டூ வீலர்' வேண்டுமென்று, சம்பந்தி வீட்டார் அடம் பிடித்துள்ளனர்.வேறு வழியில்லாமல், புது வண்டியை வாங்கிக் கொடுத்த அவள் அப்பா, வண்டியின் நம்பர் பிளேட்டுக்கு மேல், 'மாமனாரின் கிப்ட்' என்று, கொட்டை எழுத்தில் எழுதிக் கொடுத்தார். 'பெற்றோர் வாங்கிக் கொடுக்கும் வண்டியில் மட்டும், 'அம்மா கிப்ட் - அப்பா கிப்ட்' என்றெல்லாம் எழுதுகின்றனரே... அதே போல், மாமனார் வாங்கிக் கொடுக்கும் வண்டியில், 'மாமனார் கிப்ட்' என்று எழுதி கொடுப்பதில் என்ன தவறு?' என்று கேட்டிருக்கிறார்.சம்பந்தி வீட்டாரால் பதில் பேச முடியவில்லை.திருமணம் முடிந்து, ஒரு மாதமாகியும், அவள் கணவர் அலுவலகத்துக்கு, புது வண்டியில் போகாமல், பழைய வண்டியில் தான் போகிறாராம். மற்றவர்கள் முன், இந்த வண்டியை பெண்ணின் பெற்றோர் தான் வாங்கிக் கொடுத்தனர் என்று சொல்ல கூச்சப்படுவோர், திருமணத்தின்போது மட்டும் அது வேண்டும், இது வேண்டும் என்று ஏன் நிபந்தனை விதிக்க வேண்டும்.இனிமேல், 'டூ வீலர் வேண்டும், கார் வேண்டும் என்றெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் கேட்டால், 'மாமனாரின் கிப்ட்' என்று, அதில் எழுதி தான் கொடுப்போம்...' என்று, என் தோழியின் அப்பாவை போல் சொல்லிப் பாருங்களேன்... அதன்பின், அது குறித்து வாயே திறக்க மாட்டார்கள்.எஸ்.ரீனு, சென்னை.