இது உங்கள் இடம்!
அதிகமான முன் எச்சரிக்கையும் ஆபத்து தான்!தற்போது, பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் பற்றிய செய்திகள், நாம் அனைவரும் அறிந்ததே. இந்த செய்திகள் எல்லாம், என் தோழியின் மனதில், விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. தன், ஏழு வயது மகளை, உறவினரிடமோ, நண்பர்களிடமோ பழக விடுவதில்லை. அன்பாக, யார் வந்து துாக்கினாலும், 'குழந்தையை தொடாதீர்...' என்று, முகத்தில் அறைந்தாற் போல் சொல்லி விடுகிறாள். இதனால், அவள் சித்தப்பா, அண்ணன் மற்றும் கணவரின் நண்பர் என, அனைவருமே மனம் வருந்தி, அவளின் வீட்டிற்கு செல்வதே இல்லை. மேலும், குழந்தையை, தந்தை அருகில் அமரவோ, உறங்கவோ அனுமதிப்பதில்லை. தந்தை எது கேட்டாலும், எட்ட நின்றே பதிலளிக்கும்படி, பழக்கப்படுத்தி உள்ளாள்.பள்ளியில், நண்பர்களிடமும் பேசுவதில்லை. யார் அறிவுரை சொல்லியும் பயனில்லை. மிரட்டி மிரட்டி, தற்போது, யார் எது கேட்டாலும், பதில் சொல்ல பயப்படுகிறாள், மகள். குழந்தையின் நலன் கருதி, தன்னிடம் அவளை ஒப்படைக்கும்படி மனு போட்டுள்ளார், அவள் கணவர். எதுவும் தீராததால், விவாகரத்து பெற, நீதிமன்றத்தை நாடியுள்ளார்.தாய்மார்களே... 'குட் டச், பேட் டச்' சொல்லிக் கொடுங்கள்... தன்னிடம் தவறாக நடப்பவர்களிடம் மட்டும் கடுமையாக எதிர்ப்பை காட்டச் சொல்லுங்கள்...குழந்தைகளை உஷாராக வளர்ப்பதாக கூறி, பயம் காட்டி, வெளியே எங்கும் அனுப்பாமல், யாருடனும் பழக விடாமல், வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்காதீர்.பிரச்னை வந்தால், தைரியமாக எதிர்கொள்ள கற்றுக் கொடுங்கள்... தேவையில்லாத செய்திகளை மனதில் போட்டு, நீங்களும் குழம்பி, உங்கள் வாழ்க்கையையும், நல்ல உறவுகளையும், நட்புகளையும் கெடுத்துக் கொள்ளாதீர்!—வான்மதி, சென்னை.உபயோகமான பரிசு!சென்ற ஆண்டு நவராத்திரியின் போது, குளிர் சாதன பெட்டியில், காய்கறி, பழங்களை போட்டு வைக்க, வலை துணியால் செய்யப்பட்ட சில பைகளை கொடுத்தாள், தோழி. அத்துடன், 'நீ எப்போது காய், பழம் வாங்க சென்றாலும், இந்த பைகளை மறக்காமல் எடுத்துச் செல். கடையில் இருக்கும், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, இதில் தான் வாங்கிச் செல்ல வேண்டும்...' என்றும் சொன்னாள்.நானும், அவள் சொன்னதை கடைப்பிடித்து, கடைக்கு போகும்போது, மறக்காமல் அவள் கொடுத்த வலை துணி பையில் காய், பழம் வாங்கி வருகிறேன். பிளாஸ்டிக்கை ஒழிக்க, அரசு அறிவுறுத்தும் வேளையில், என் பங்காக, இம்முறை நவராத்திரி பரிசாக, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, வலை துணி பைகளை, தோழிகளுக்கு கொடுக்க இருக்கிறேன். பிளாஸ்டிக்கை தவிக்க, நம்மால் முடிந்த சிறு முயற்சிகளை செய்யலாமே. அதேபோல், ஜாக்கெட் துணியை பரிசாக கொடுக்கும் போது, அதன் அளவு, நிறம், துணியின் தரம் ஆகியவை ஏற்றதாக இல்லாமல் போகிறது. இதனால், அவை மற்றவர்களுக்கு தாம்பூலத்தில் பரிசாக அளித்து, கடைசியில், நமக்கே வந்து சேரும். எனவே, அதையும் தவிர்க்கலாம். அதற்கு பதிலாக, அழகான துணி பைகளை வாங்கி அல்லது தைக்க தெரிந்தால், நம் கற்பனை திறனை உபயோகித்து, விதவிதமான வடிவங்களில் பைகளை தைத்து கொடுக்கலாம்; மிக உபயோகமாக இருக்கும்.- ந. விசாலாட்சி, மும்பை.சமத்துவ திருமணம்!சென்ற வாரம், சென்னையில் இருக்கும் நண்பரின் மகனது திருமணத்திற்கு சென்றிருந்தேன். மணமகனும் - மணமகளும், சென்னையில் ஒரே இடத்தில், வழக்கறிஞராக வேலை செய்கின்றனர். மணமகன், இந்து; மணமகள், முஸ்லிம். இருவரும் காதலிப்பது, இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இரு தரப்பு உறவினர்களுடன் கலந்து பேசி, சமாதானத்திற்கு பின், திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர். திருமணத்தில், மணமகளின் உறவினர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணியாமல், சாதாரண உடையில் வந்தனர். அனைத்து சடங்குகளும், இந்து மத கலாசாரப்படி நடைபெற்றது. திருமணம் முடிந்து, அரங்கத்தில், இரு வீட்டாரை சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும், ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடனும், ஆனந்தமாகவும் பேசிக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில், இந்து மதத்தை சேர்ந்த சிறுவர்கள் சிலர், முஸ்லிம் சிறுவர் - சிறுமியருக்கு, கைகளில், 'ரக் ஷா பந்தன்' கயிறு கட்டினர். சிறுவர்கள், ஜாதி, மதம் பாராமல், சகோதர - சகோதரிகள் என்ற உணர்வுடன் செயல்பட்டதை பார்த்தவர்கள், ஆனந்தமும், ஆச்சரியமும் அடைந்தனர். 'இது, சாதாரண திருமணம் அல்ல... இரு வேறு சமூகம் இணைந்து நடத்திய, சமத்துவ திருமணம்...' என்று சொல்லி, அனைவரும், மணமக்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்தி சென்றனர். — என். செல்வராஜ், வந்தவாசி.