ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!
முதியோர் இல்லம் ஒன்றை இலவசமாக நடத்தி வருகிறார், நண்பர் ஒருவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரால், முதியோர் இல்லத்தை, இலவசமாக எப்படி நடத்த முடிகிறது என, திகைத்து, அவரிடம் கேட்டேன்.அவர் வசிக்கும் தெருவில் உள்ளோரும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். தெருவின் இருபுறமும், 30 வீடுகள் உள்ளன. அவரவர் வீட்டிற்கு உணவு சமைக்கும்போது, கூடுதலாக ஒரு நபருக்கான சாப்பாட்டையும் சேர்த்து சமைப்பராம்.உதாரணமாக, ஒரு வீட்டிற்கு, நான்கு இட்லிகள் கூடுதலாக தயார் செய்வர். உணவு மட்டுமின்றி, உடையும் வழங்குகின்றனர். இதற்கு, பணம் பெற்றுக் கொள்வதில்லை.அத்தெருவில், வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகளின் குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது, கீரை, காய்கறி நறுக்கித் தருவது, பூ கட்டுவது, காய்கறி தோட்டம் அமைப்பது போன்ற எளிய வேலைகளை, முழு திருப்தியுடன் செய்கின்றனர், இல்லத்தில் உள்ள முதியோர்.மேலும், கடைசி காலத்தை, தங்கள் உறவுகளுடன் இருப்பது போலவே, மகிழ்வுடன் வாழ்வதாகவும் கூறுகின்றனர். நண்பரின் முயற்சியை பாராட்டினேன்.அத்தெருவாசிகளையும், முதியோரையும் பார்க்கும்போது, 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' என்ற பழமொழியின் அர்த்தத்தை உணர்வுப்பூர்வமாக உணர்ந்தேன்.
கே. கணேஷ், கடலுார்.காரும், கடனும்!
வங்கியில் கடன் கொடுக்கின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக, அலுவலக நண்பன், கடனில் கார் வாங்கினான். சில மாதம், பந்தாவாக ஆபீசுக்கு வந்தவன், சமீப காலமாக, காரை தவிர்த்து, 'கால் டாக்சி'யில் வர ஆரம்பித்தான். 'என்னய்யா ஆச்சு... ஏன் காரை வெச்சுகிட்டு, 'கால் டாக்சி'யில வர்ற...' என்றேன். 'சொந்த கார்ல வர்றதை விட, வாடகை கார்ல வர்றதுதான்பா சிக்கனம்...' என்றான்.காரணம் கேட்டதற்கு, 'ஆமாம்பா... 'கால் டாக்சி'யில, ஆபீசுக்கு வந்து, போக செலவு, 200 ரூபாய் தான். சொந்த கார்னா, டிரைவருக்கு, மாசம், 15 ஆயிரம்; அதுவே, ஒரு நாளைக்கு, 500 ரூபா வருது. தவிர, பெட்ரோல் செலவு, வண்டிக்கு, மாத கடன் தொகை, 'பார்க்' செய்வதற்கு, மாசம், 3,000 ரூபாய், அப்படி இப்படின்னு கணக்குப் பார்த்தா, ஏகப்பட்ட செலவாகுது. அதான், 'கால் டாக்சி'யிலேயே வர ஆரம்பிச்சிட்டேன்...' என்றான்.'அது சரி... காரை எடுக்காமலே வெச்சிருந்தா கெட்டு போயிடுமேப்பா...' என்றேன். 'விற்க ஏற்பாடு செய்துள்ளேன். பணம் வந்ததும், வங்கி கடனை கட்டி, 'ரிலீஸ்' ஆயிருவேன்...' என்றான். 'வட்டிக்கு வாங்கி, அட்டிகை பண்ணு; அட்டிகையை வித்து, வட்டியை கட்டு' என்ற சொலவடை தான் நினைவுக்கு வந்தது.எம். சத்திய நாராயணன்,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை.அனுபவசாலிகளின் அருமை!
அண்மையில் குடும்பத்துடன், சென்னையிலிருந்து, சொந்த ஊருக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். எங்களுடன், வயோதிக தம்பதியர் பயணம் செய்தனர்.கணவருக்கும், மனைவிக்கும், 75, 70 வயது இருக்கலாம். இந்த வயதில், பயணம் மேற்கொண்ட காரணத்தை கேட்டேன்.'பெண் பார்க்கும் பொறுப்பை, எங்களிடம் தந்து, 'நீங்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். உங்களுக்கு, நல்லது, கெட்டது தெரியும். நான் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் முடிவெடுத்தால், அது சரியாக இருக்கும்...' என்று, பேரன் கூறியதால், பெண் பார்க்க சென்னைக்கு வந்தோம்...' என, கூறினர்.பேரனை பற்றி பெருமையுடன் கூறிய தம்பதியை பார்த்து, மனம் நெகிழ்ந்தது.வயதானவர்களை, தேவையற்றவர்களாக கருதி, முதியோர் இல்லங்களில் சேர்க்கும் பலருக்கு இடையில், தன் தாத்தா - பாட்டியை மதித்த அந்த பேரனை, மனதார வாழ்த்தினேன்.குடும்பத்தில் முக்கியமான அங்கத்தினர், முதியோர். அவர்கள் எடுக்கும் முடிவு, நமக்கு நல்லதாகவே அமையும் என்று நினைக்க ஆரம்பித்தால், முதியோர் இல்லங்களே தேவையிருக்காது அல்லவா!
ப. நசீம், கீழக்கரை.வற்புறுத்தலை தவிர்க்கலாமே!
இதய நோயாளியான தந்தைக்கு, ஆறு மாதங்களுக்கு முன், ஒருநாள் இரவு, நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது. அவர் உட்கொண்ட பரோட்டாவின் விளைவு அது என்று, எங்கள் எல்லாருக்குமே தெரிந்திருந்தது.அருகில் உள்ள பெரிய மருத்துவ மனைக்கு, அவரை அழைத்துச் சென்றோம். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள், செரிமானத்துக்கான ஊசி ஒன்றை போட்டனர்; அரை மணி நேரத்தில் அவருக்கு சரியாகி விட்டது.நாங்கள் வீட்டுக்கு செல்ல முற்பட்டபோது, 'இது, சரியாகி விட்டாலும், வேறு ஏதாவது பிரச்னை இருக்கலாம். இதய நோயாளி என்பதால், உயிருக்கு அபாயம் ஏற்படலாம்...' என்றெல்லாம் கூறி, அவரை, ஐ.சி.யு.,வில் அனுமதிக்க வற்புறுத்தினர், அங்கிருந்த மருத்துவர்கள்.'ஒருநாள், ஐ.சி.யு.,வில் தங்குவதற்கு, குறைந்தபட்சம், 5,000 ரூபாயும், பிற மருத்துவ பரிசோதனை செய்வதற்கு, 10 ஆயிரம் ரூபாயும் செலவாகும்...' என, தெரிவித்தனர்.ஈ.சி.ஜி.,யிலும், ரத்த அழுத்தத்திலும், நாடி துடிப்பிலும் எந்த பிரச்னையும் இல்லை என்பது, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதே தெரிய வந்திருந்ததால், நாங்கள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வந்து விட்டோம். மறுநாள், வழக்கமாக, என் தந்தை சிகிச்சை பெறும் மருத்துவரிடம் கேட்க, அவரும், வேறு எந்த பிரச்னையும் இல்லை என, தெரிவித்து விட்டார். அதன்பின், தற்போது ஆறு மாதங்களாக நலமுடன் உள்ளார்.அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும்போது, உயிர் பயத்தை ஏற்படுத்தி, ஐ.சி.யு.,வில், அனுமதிக்க சொல்லும் பழக்கம், சில மருத்துவமனைகளில் இருந்து வருகிறது. மருத்துவ கண்காணிப்பு தேவையில்லாத நோயாளிகளுக்கு, மருத்துவமனைகள் இதுபோன்ற வற்புறுத்தலை தவிர்க்கலாமே.
ஜே. ப்ரியா, சென்னை.