இது உங்கள் இடம்!
மெச்சத்தகுந்த மாமியார்!வசதியான என் உறவினரின் பையன், ஒரு பெண்ணை காதலித்தான். அந்த பெண், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். அதனால், பையனின் உறவினர்கள், 'அந்த பெண்ணை திருமணம் செய்யக் கூடாது...' என்று, கண்டிப்பாக கூறினர்.ஆனால், பையனின் தாய்க்கு, மகனின் விருப்பம் தான் பெரிதாக தெரிந்தது. அதனால், தன்னிடமிருந்த வெள்ளி பாத்திரங்களை மெருகேற்றினாள்; நகைகளில் சிலவற்றை நகை கடையில் கொடுத்து, புதிய நகைகளாக மாற்றி, ஏழை பெண் வீட்டாரிடம் கொடுத்து, அவர்கள் போட்டதாக சொல்லி போடச் சொன்னாள். பெண் வீட்டார் முதலில் தயங்கினாலும், பெண்ணின் நல்வாழ்வுக்காக ஒத்துக் கொண்டனர். திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு, ஒரு குறையும் சொல்ல தோன்றவில்லை. மகனுக்கு, அம்மாவின் அன்பு புரிந்தது; மருமகளுக்கும், தன் மாமியாரின் அன்பும், சாமர்த்தியமும் புரிந்தது. மாமியாரின் காலில் விழுந்து நன்றி கூறினாள், மருமகள்.மருமகளை கட்டி அணைத்து, 'என் மகனின் விருப்பம் தான், எனக்கு முக்கியம். மேலும், எனக்கு பிறகு, நகைகள், பாத்திரங்கள் எல்லாம் உனக்கு சேர வேண்டியவை தானே... ஒரு நல்ல காரணத்திற்காக, அதை முன்பே கொடுத்து விட்டேன்...' என்றார்.எல்லா மாமியாரும் இப்படி நடந்து கொண்டால், மாமியார் - மருமகள் சண்டை எங்கிருந்து வரும்?- மரகதம் ராகவசீமான், ஐதராபாத்.'ஓல்டு இஸ் கோல்டு!'வயிற்றில் பெரிய அறுவை சிகிச்சை முடிந்து, மருத்துவமனையிலிருந்து வந்த, சீனியர் சிட்டிசன் தோழியை பார்க்க, ஆப்பிள், ஆரஞ்சு பழங்களுடன் சென்றேன்.நான் இருக்கும்போதே, தோழியின், 78 வயது சித்தியும் வந்தார். வீட்டில் அரைத்த இட்லி மாவு, ஒரு டப்பா; சிறு சிறு டப்பாக்களில், வறுத்த மணத்தக்காளி, சுண்டைக்காய் வத்தல், நார்த்தங்காய் ஊறுகாய், காரமில்லாத ரசம், பருப்பு துவையல், சுட்ட அப்பளம் என, அவர் எடுத்து வந்த அனைத்து பொருட்களும், என்னை அசர வைத்தது.'நல்ல சாப்பாட்டுக்கு நாக்கு ஏங்கும் என்பதால், வயிற்றில், ஜீரண சக்தியை அதிகரிக்க, மணத்தக்காளி, சுண்டை வத்தல் மிக நல்லது. ஓட்ஸ் கஞ்சி மற்றும் அரிசி கஞ்சிக்கு சுட்ட அப்பளம் சுவை கொடுக்கும். நோயாளி என்பதால், வீட்டில் அரைத்த மாவு கொண்டு வந்தேன்...' என, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க சொல்லி முடித்தார். நானும் முடிவெடுத்து விட்டேன். நோயுற்றவர்களை பார்க்க போகும்போது, வழக்கமான, ஆப்பிள், ஆரஞ்சுகளை விட, உடலுக்கு உகந்த சமையல், பொடி மற்றும் துவையல் என, எடுத்துச் சென்றால், அளவற்ற பலனும் உண்டு. எல்லாரும் இதை பின்பற்றலாமே.'ஓல்டு இஸ் கோல்டு' என்று சொல்வது, சரிதானே!— சீனு சந்திரா, சென்னை.வாழ நினைத்தால் வாழலாம்!என் உறவினர் ஒருவருக்கு, மூன்று பெண்கள்; பிள்ளைகள் கிடையாது. இரண்டு மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார். மூன்றாவது பெண், கல்லுாரி படிப்பை முடித்து, வேலை தேடி வந்த நேரத்தில், அவளின் தந்தை, 'ஹார்ட் அட்டாக்' வந்து இறந்து விட்டார். வேலை தேடிக் கொண்டிருந்த பெண், 'லாப்டாப்'பில், 'இன்டர்நெட் கனெக் ஷன்' கொடுத்து, அவள் வசிக்கும் தெருவில் உள்ள அத்தனை பேருக்கும், ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வது, பெண்களுக்கான துணி தைத்து கொடுப்பது, மாணவர்களுக்கு, 'டியூஷன்' சொல்லி தருவது...இட்லி, தோசை மாவு அரைத்து, பாக்கெட்டுகளில் 500 கிராம், 1 கிலோ அளவில் விற்பது, பொது அறிவு வகுப்பு, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' சொல்லித் தருவது என, எப்போது பார்த்தாலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறாள். இதனால், நல்ல வருமானம் கிடைக்கிறது. தாயை நன்றாக கவனித்து, அந்த ஏரியாவிலேயே எல்லாருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறாள், அப்பெண். வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்! — ஜி. நீலாமணி, சென்னை.