உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

கேட்டாளே ஒரு கேள்வி!தங்கை மகளை, பெண் பார்க்க, மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். அவர்களுக்கு, பெண்ணை பிடித்து விட்டது.'வரதட்சணையாக, 25 சவரன் நகை, கட்டில், மெத்தை, பாத்திரங்கள் மற்றும் பைக் போதும்; இதுக்கு மேல செய்யுறது உங்க விருப்பம்.'அப்புறம், வெளிநாட்டுல வேலை செய்யும் எங்க பையன், அப்பப்ப இந்தியாவுக்கு வந்து போவான். இதுவரைக்கும் நாங்க தான், விமான டிக்கெட் எடுத்தோம். கல்யாணத்திற்கு பிறகு, நீங்க தான் எடுக்க வேண்டும்...' என்று சொன்னதும், அதிர்ந்தோம்.'சீர், செனத்தி கேட்டீங்க... ஓ.கே., விமான டிக்கெட் எல்லாம் ரொம்ப ஓவர். இது, சரியா வராது...' என, சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த, தங்கை மகள், மாப்பிள்ளையின் அம்மாவிடம், 'ஒண்ணும் பிரச்னையில்லை. நீங்க கேட்ட வரதட்சணையோடு, விமான டிக்கெட்டையும் நாங்களே எடுக்கறோம். ஆனா, ஒவ்வொரு முறை, உங்க பையன், வெளிநாட்டிலிருந்து வரும்போது, 'லக்கேஜ்' உடன் எங்க வீட்டுக்கு தான் நேரா வரணும்.'அதே மாதிரி, திரும்ப பயணம் கிளம்பும்போது, எங்க வீட்டிலிருந்து தான், விமான நிலையம் போகணும்... இந்த நிபந்தனைக்கு நீங்க ஒத்து வந்தா, விமான டிக்கெட்டை நாங்க எடுக்கறோம். இல்லைன்னா, இந்த கல்யாணமே வேண்டாம்...' என்று, அவள் துணிச்சலோடு பேசியதும், மாப்பிள்ளை வீட்டார் அரண்டு போயினர்.'கல்யாணத்துக்கு முன்னமே, இந்த பொண்ணு எவ்வளவு திமிரா பேசுறா பாரு...' என்றார், மாப்பிள்ளையின் அம்மா.'இது, திமிரு இல்ல... எங்களோட உரிமை. ஏன்னா, டிக்கெட் நாங்கதானே எடுக்கறோம். கல்யாணத்துக்கு முன், இவ்வளவு எதிர்பார்க்குற நீங்க, பிறகு என்னவெல்லாம் எதிர்பார்ப்பீங்கன்னு தெரியல. எனக்கு, விருப்பம் இல்ல. நீங்க கிளம்பலாம்...' என்றாள்.'பெண் என்றால் இப்படித்தான் தன்னம்பிக்கையோடு இருக்கணும். எல்லாவற்றிற்கும் வளைந்து போகக் கூடாது...' என்று, தங்கை மகளை, பாராட்டினேன்.என்ன வாசகர்களே... அவள் எடுத்த முடிவும், கேட்ட கேள்வியும் சரிதானே?- வே. விநாயகமூர்த்தி, சென்னை.அனைவரும் கட்டாயம் இதை பின்பற்றுங்கள்!சமீபத்தில், இரு சக்கர வாகனத்திற்கு, பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தேன். எனக்கு முன், வண்டிக்கு காற்று பிடித்துக்கொண்டிருந்த இளம்பெண், நெஞ்சை பிடித்தபடி, அங்கேயே மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.வண்டியின் முன்புறம் இரண்டு வயது பெண் குழந்தை. குழந்தையின் கழுத்திலும், பெண்ணின் கழுத்திலும் தங்க நகைகள் இருந்தன. யாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. சிலர், ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். அந்த பெண்ணின் பையில் இருந்த மொபைல்போனை எடுத்து பார்த்தால், 'லாக்' செய்யப்பட்டு இருந்தது. அவசர அழைப்பில் எந்த தொலைபேசி எண்ணும் இல்லை. அதனால், அவள் வீட்டிற்கு எப்படி தகவல் சொல்வது என்றும் தெரியவில்லை. தனியாக, சிறிய பெண் குழந்தையை மட்டும் ஆம்புலன்சில் அனுப்ப மனம் வரவில்லை. அந்தப் பெண்ணுடன் துணைக்கு சென்றேன். பிறகு, வண்டி நம்பரை வைத்து, வீட்டு முகவரியை கண்டுபிடித்து, அவள் வீட்டினரை வரவைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. மொபைல்போனில், 'லாக்' செய்பவர்கள், 'எமெர்ஜென்சி காலில்' அவசர தேவைக்கு, வீட்டில் உள்ளவர்களின் கைபேசி எண்ணை சேமித்து வையுங்கள். இல்லையெனில், ஒரு துண்டு சீட்டில் எழுதி, அலைபேசி கவரின் பின்னால் போட்டு வைக்கலாம். எப்போது, என்ன நடக்கும் என்று, யாராலும் கணிக்க முடியாது. ஆபத்து காலத்தில் மற்றவர்கள் நமக்கு உதவி புரிய, இவை பேருதவியாக அமையும். ஜி.எஸ். கல்பனா, சென்னை.இது புது, 'டெக்னிக்!'சமீபத்தில், 90 வயது உறவினருடன், 'பென்ஷன்' தொடர்பான பிரச்னைகளை சரி செய்ய, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருவூல அலுவலகத்திற்கு சென்று, அலுவலக மேலாளரை சந்திக்க காத்திருந்தோம். நெற்றி நிறைய திருநீருடன், எல்லாரிடமும் பணிவாக பேசியதை பார்த்தேன்.எங்கள் முறை வந்தபோது, என்னிடமும், உறவினரிடமும் மிக மரியாதையுடனும், பணிவாகவும் பேசியதும், இந்தியாவில் தான் இருக்கிறோமா என, வியப்பு ஏற்பட்டது.என் உறவினரிடம், அவரது உடல் நிலை, குடும்ப நிலை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குறித்து, அக்கறையாக விசாரித்தார். அதன்பின், உறவினரின் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்திட்டு கொடுத்தார்.நாங்கள் கிளம்ப முயன்ற போது, 'வந்தது தான் வந்தீங்க, டீ செலவுக்கு, 500 ரூபாய் கொடுத்துட்டு போங்க...' என்றார்.என்னடா இது, ஒரே நொடியில் இப்படி சரிந்து விட்டாரே என, நொந்து, அவர் கேட்ட பணத்தை கொடுத்து, கிளம்பினோம்.வாசலில் இருந்த பியூன், 'அவர், அன்பாக பேசியதில் மயங்கி விட்டீர்களா... அதுதான், அவர், 'டெக்னிக்!' குடும்ப உறுப்பினர்களை பற்றி விசாரித்ததே, தனக்கு வில்லங்கமாக யாராவது உங்கள் வீட்டிலிருந்து வந்துவிட கூடாது என்பதற்காக தான்.'உறவுகள் யாராவது, காவல்துறையிலோ அல்லது லஞ்ச ஒழிப்பு துறையிலோ இருப்பதாக சொல்லியிருந்தால், உங்களின் மனு, இந்த ஜென்மத்தில் கையெழுத்தாகி இருக்காது...' என்றான்.'இதுவும் ஒரு புது டெக்னிக் தான்...' என நொந்தவாறே, வெளியே வந்தோம்.இவர்களை, யார் திருத்துவது?- கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !