இது உங்கள் இடம்!
மூளையே மூலதனம்!மேஸ்திரி வேலை செய்து வந்த நண்பர் ஒருவர், விபத்தில் காலமாகி விட்டார். இரட்டை ஆண் பிள்ளைகள், 5ம் வகுப்பு படிக்கின்றனர். சொல்லிக் கொள்ளும்படி எந்த சேமிப்பும் இல்லை. சாப்பாட்டிற்கு, சிலர் கொடுத்து உதவினோம்.கொடுக்கத்தான் ஆட்கள் இருக்கின்றனரே என்று வீட்டில் முடங்கவில்லை, நண்பரின் மனைவி.சுண்ணாம்பு அடிக்க, எலக்ட்ரிகல் வேலை, வீடு சுத்தம் செய்ய ஆட்களை அனுப்புவது, வாடகைக்கு வீடு பார்த்து கொடுப்பது என, சிறு சிறு வேலைகளை செய்து, அவர்களிடம் சேவை கட்டணம் வசூலித்து, சுய வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டார்.வேலை முடியும் வரை, அங்கேயே இருந்து, சரியாக பணி செய்கின்றனரா என்று மேற்பார்வையிடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டார். 'வீட்டில் வேலை செய்கின்றனர்... பிள்ளைகள் தனியே இருக்கின்றனர்... அவர்கள் வேலை முடியும் வரை இருக்க முடியுமா...' என்று, வேலைக்கு செல்லும் பெற்றோர் கேட்கும் அளவுக்கு பல குடும்பத்தினரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி விட்டார். தற்போது, பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில், அங்கேயே ஒரு வீட்டில் தங்கி, மேற்பார்வை பார்த்துக் கொள்ள சொல்லி, இவரை அணுகியுள்ளார், ஒருவர்.கணவர் இறந்து விட்டார், வேலையில்லை, நல்ல வருமானம் இல்லை என்று தவறான பாதையை தேர்ந்தெடுப்போருக்கு மத்தியில், தன் மூளையை மட்டும் மூலதனமாக வைத்து முன்னேறிய இந்த பெண்மணியின் வாழ்க்கை, ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறேன்.- எஸ். கல்பனா, சென்னை.நடத்துனரின் நல்ல மனசு!சமீபத்தில் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். நான் பயணித்த பேருந்து, அவ்வூர் பேருந்து நிலையத்தில் நின்றது. பாட்டி ஒருவர், அப்பேருந்து செல்லும் ஊரின் பெயர்களை கூவி, காத்திருக்கும் பயணிகளை அழைத்தார்.பேருந்து புறப்பட்டதும், நடத்துனரிடம், 10 ரூபாயை பெற்று, அடுத்து வந்த பேருந்துக்கு, பயணிகளை அழைக்கச் சென்றார். என்னை, டூ - வீலரில் வீட்டுக்கு அழைத்துப் போக வந்திருந்த உறவினரிடம் இதுபற்றி விசாரித்தேன்.'ஆரம்பத்துல, அந்த பாட்டி, இந்த பஸ் ஸ்டாண்டுல பிச்சை எடுத்துகிட்டிருந்தாங்க. ஒரு கண்டக்டர் தான், அவங்க மேல பரிதாபப்பட்டு, தன் சக கண்டக்டர்களிடம் கூறி, இப்படி சொல்ல ஏற்பாடு செய்து கொடுத்தார்.'பிச்சையெடுக்கிறப்ப ரொம்ப அவமானப்பட்ட பாட்டி, இப்போ கவுரவமா, தினமும், 300 ரூபாய் வரை சம்பாதிக்கிறாங்க...' என்றார். உழைப்பதற்கு வழிகாட்ட உதவுவோர் இருந்தால், பெரும்பான்மையோர் பிச்சையெடுக்க விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மை.உழைத்து வாழும் அந்த பாட்டியையும், அதற்கு உதவிய நல்ல மனசு கொண்ட நடத்துனரையும், மனதார வாழ்த்தினேன்!- எஸ். அலமேலு, கள்ளக்குறிச்சி. 'வாட்ஸ் - ஆப்' குழுவால் உதவும், மருத்துவர்!சமீபத்தில், நண்பனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல், தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளதை அறிந்து, அவரை பார்க்க சென்றேன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நண்பன், தனியார் நிறுவனத்தில், குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகிறான். தந்தை, கூலி வேலை செய்பவர்.ஆனால், அவன் தாயாரை சேர்த்திருந்த மருத்துவமனையில் ஏகப்பட்ட செலவாகும் சூழலில், அதை எவ்வாறு சமாளிப்பான் என்ற குழப்பம் ஏற்பட்டது. வாங்கிச் சென்ற பழங்கள் மற்றும் ஹார்லிக்ஸை அவன் தாயாரிடம் தந்து, அவரை நலம் விசாரித்து, என் குழப்பத்தை நண்பனிடம் தெரிவித்தேன்.'தாயாரைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர், எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அவர், தன்னுடன் பணிபுரியும் சக மருத்துவர்களை ஒன்றிணைத்து, 'வாட்ஸ் -- ஆப்' குழு ஒன்றை வைத்திருக்கிறார்.'அதன் மூலம், அவரவர் ஊரைச் சேர்ந்த ஏழை நோயாளிகளுக்கு, அனைவருமே சேர்ந்து பண உதவி செய்து, தரமான சிகிச்சையையும், மருந்து மாத்திரைகளையும், இலவசமாகவே வழங்கி வருகின்றனர். அப்படித்தான் என் தாயாருக்கும் அவர்கள் உதவுகின்றனர்...' என்றான்.தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தாலும், மனிதநேயம் மற்றும் மனிதாபிமானத்துடன், தங்கள் ஊரைச் சேர்ந்த சிலருக்காவது, சேவை மனப்பான்மையோடு சிகிச்சை அளித்து வரும் அந்த மருத்துவர்களை, மனதார வாழ்த்தினேன்!- எஸ்.விஜயன், கடலுார்.