இளைஞர்களே இது உங்களுக்காக!
டிச.,16 - மார்கழி பிறப்புபக்தி என்றால், அது அறுபது வயதுக்கு மேல் வரக்கூடியது என்ற தவறான எண்ணம், நம் மக்களிடையே இருக்கிறது. 'வயசான காலத்திலே, ஙொய்...ஙொய்... என நச்சரிக்காமல், காசி, ராமேஸ்வரம்ன்னு போய் தொலைய வேண்டியது தானே...' என, நம்மூர் இளசுகள், பெரியவர்களைக் கேட்பது வழக்கம். இந்த வார்த்தைகள், பக்தி என்றால், முதுமையில் செய்ய வேண்டியது என்ற அர்த்தத்தை ஏற்படுத்தி விடுகிறது.உண்மையில், பக்தி என்பது இளமையிலே பின்பற்றக் கூடியது என்கிறாள் திருப்பாவை தந்த ஆண்டாள். வயதுக்கு மீறி சேஷ்டை செய்யும் குழந்தைகளை, பிஞ்சிலே பழுத்தவர்கள் என்று சொல்வோம். வரவர முனிகள் என்பவர், ஆண்டாளை, 'பிஞ்சிலே பழுத்தாளை...' என்று பாடுகிறார். காரணம், ரொம்ப சின்ன வயதிலேயே பகவானை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதால்!'சரி... சின்ன வயதில் பகவானையே நினைத்துக் கொண்டிருந்தால், என்னுடைய கடமைகளை செய்ய வேண்டாமா...' என, கேட்கலாம். 'உன் கடமைகள், அதிகாலை, 4:00 மணிக்கே தொடங்க வேண்டும்' என்பது ஆண்டாளின் பதில். அதனால் தான், மார்கழி மாத அதிகாலை பனியிலும், 'குள்ளக்குளிர குடைந்து நீராடு...' என்கிறாள். குளிர்கிறதே, வெயிலடிக்கிறதே, மழை பெய்கிறதே என்ற எண்ணமெல்லாம் இளைஞர்களிடம் வரக் கூடாது. அதிகாலையில் எழும் வழக்கத்தை மேற்கொண்டால், இது, முதுமை வரை கைகொடுக்கும். வெற்றியாளர்கள் அனைவரும், அதிகாலையில் எழுபவர்களே! திருமாலுக்கு இரு துணைவியர். ஒருத்தி, லட்சுமி; அவரது மார்பிலேயே இருப்பவள். இன்னொருத்தி, பூமா தேவி. இவளை, அசுரன் ஒருவன் கடத்திச் சென்றான். வராக (பன்றி) அவதாரம் எடுத்த திருமால், அவளை மீட்டு வந்தார். அப்போது, பூமாதேவி அழுதாள்.'உன்னைக் காப்பாற்றிய பிறகும் ஏன் அழுகிறாய்...' என்று கேட்டார் திருமால்.'வராகமூர்த்தியே... என்னைக் காப்பாற்றியது போல், என்னில் வாழும் உயிர்களையும் நீங்கள் காப்பாற்ற வேண்டும். அதற்காகவே நான் அழுகிறேன்...' என்றாள். தான் மட்டும் வாழாமல், பிறர் வாழ்வுக்காகவும் பாடுபட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கமும், கருணையும் கொண்டவள் பூமாதேவி. அதற்காகவே, அப்படி கேட்டாள்.'பூமா... உன் மக்கள் என்னை அடைய மூன்று எளிய வழிகளைச் சொல்கிறேன். என் திருநாமத்தை வாய் விட்டு உரக்கச் சொல்வதுடன், என் திருவடியில் பூத்தூவி வழிபட வேண்டும். ஒவ்வொரு வரும், தன் செயல்களின் பயனை எனக்கே அர்ப்பணித்து விட வேண்டும். அதாவது, ஆத்ம சமர்ப்பணமாக தன்னையே எனக்கு தந்து விட வேண்டும். அவ்வாறு செய்பவர்கள் பூமியில் நன்றாக வாழ்ந்து, மோட்சம் பெறுவர்...' என்றார்.பூமா தேவியே, ஆண்டாளாகப் பிறந்து, திருப்பாவை என்னும் முப்பது பாசுரங்களைப் பாடினாள். அந்தப் பாடல்களில், திருமாலின் பெயர்கள் அதிகமாக வந்தன. பத்து பாடல்களில் அவரை வழிபடும் முறைகளை எடுத்துச் சொன்னவள், அடுத்து வரும் பாடல்களில், தன்னையே அவருக்கு ஆத்ம சமர்ப்பணமாக அர்ப்பணிக்கும் வகையில் பாடி, அவரோடு கலந்தாள்.இளம் தலை முறையினர், அதிகாலையிலேயே தங்கள் பணியைத்தொடங்க வேண்டும் என்பதை, மார்கழியில் ஆண்டாள், தோழிகளை எழுப்பியதன் மூலம் அறிந்து கொள்கிறோம். பனியோ, மழையோ, வெயிலோ... எத்தகைய இயற்கை மாற்றங்களுக்கு மத்தியிலும், பணிகளைச் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த மார்கழி முதல், அதிகாலையில் எழும் பழக்கத்தை மேற்கொள்வோம்.தி.செல்லப்பா