உள்ளூர் செய்திகள்

திருமூர்த்தி மலை அணை!

பட்ஜெட்டுக்குள், ஒரு பிரமாண்ட டூர் போக வேண்டுமெனில், திருமூர்த்தி மலைக்கு செல்லலாம். கோவை - திண்டுக்கல்லுக்கு இடையே உள்ள உடுமலைபேட்டையில், நீர் வீழ்ச்சியும், அமைதி பொங்கும் மலைப்பகுதியும், நம்மை பரவசப்படுத்துகிறது.உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து, 19 கி.மீ., தூரம் தொலைவிலுள்ள திருமூர்த்தி அணைக்கு பயணமாகும் போது, வழி நெடுக்கிலும், வானளாவ உயர்ந்திருக்கும் மரங்கள், நம்மை வரவேற்கும். மரத்திற்கு மரம், தாவி விளையாடும் குரங்கு கூட்டம், கையசைத்தால் திருப்பி, கையசைக்கும்.திருமூர்த்தி மலைக்கு செல்வதற்கு முன்பாக, முதல் பேருந்து நிறுத்தத்திலேயே இறங்கி, அணைக்கட்டுப் பகுதியை, சுற்றிப் பார்க்கலாம். அங்கிருந்து பொடி நடையாக நடந்தால், மீன் பூங்கா, படகு இல்லம் பகுதியில், மலையை தொட்டு வரும் நீரில், குடும்பத்துடன் படகு சவாரி செய்யலாம்.படகுப் பயணம் சென்று விட்டு வந்தால், மீன் பிரியர்களுக்கென்று, அணையிலிருந்து மீன்களை பிடித்து, வறுத்துத் தருகின்றனர். அதை, ஒரு பிடி பிடித்து விட்டு, சிறுவர் பூங்கா மற்றும் நீச்சல் குளத்தையும் சுற்றிப் பார்க்கலாம். நடக்க முடியாதவர்கள், பேருந்தில் ஏறி, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வரலாம்.அதன்பின், மலைப்பாதையில் அருவிக்குச் செல்லும் வழியில் நடந்தால், வரிசையாய் நிற்கும் மரங்கள் ஒவ்வொன்றிலும், அதனதன் தாவரவியல் பெயர்களையும், அவற்றைப் பற்றிய குறிப்புகளையும் எழுதி வைத்திருக்கின்றனர். இதைப் பார்த்துக் கொண்டே செல்லும் போது, வழியில் இருக்கும் அருவிகளில் கால் நனைக்கலாம். வழிநெடுகிலும், நம் சுவாசத்துடன் கலந்து விடும் மூலிகைக் காற்றை உள்ளிழுத்துக் கொண்டே சிறிது தூரம் நடந்தால், பஞ்சலிங்க அருவிக்குச் சென்று விடலாம். இந்த அருவியின் விசேஷமே, இங்கு காட்டாறும், தேனாறும் கலந்து வருவது தான். இங்கு கிடைக்கும் நீர், கற்கண்டு போல, சுவையாக இருக்கும். இங்கு ஜாலியாக ஒரு குளியல் போட்டு, வீடு திரும்பலாம். உடுமலையிலிருந்து திருமூர்த்தி மலைக்கு, ஏராளமான பேருந்துகள் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !