டைட்டானிக் காதல்... (6)
முன்கதை சுருக்கம்: புவனாவும், கார்த்திகேயனும் எதிர்த்து போராடி, திருமணம் செய்வோம் என, உறுதி எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில், வரும்வெள்ளிக்கிழமை, புவனாவை,பெண் பார்க்க போகலாம் என, மகனிடம், சாம்பசிவம் சொல்ல, அவன் மனது வெள்ளிக்கிழமைக்காக ஏங்க ஆரம்பித்தது -புவனாவிடம் மிக சுலபமாகவும், சந்தோஷமாகவும், உறுதியாகவும் சொல்லிவிட்டு வந்தானே தவிர, கார்த்திகேயனின் மனதில் அமைதி இல்லை. நிம்மதி இல்லை. நினைக்கிற மாதிரி இந்த திருமணம் அவ்வளவு சுலபமாக நடந்து விடாது என்பது தெரிந்தது. நடத்த விட மாட்டார், அப்பா. ஜாதி சங்கத்தின் தலைவர், தன் ஜாதிக்காகவே வாழ்பவர்; பாடு படுபவர். ஊரில் ஒரு பயல் ஜாதி விட்டு திருமணம் பண்ண விட மாட்டார். மரத்தில் கட்டி வைத்து தோலுரிப்பார். அப்படிப்பட்டவரின் மகனே, ஜாதி விட்டு காதலிக்கிறான் என்றால், விட்டு விடுவாரா என்ன... அதுவும் தன் அக்கா மகள் ஜோதியை, அவனுக்கு கட்டி வைக்க திட்டம் போட்டுக் கொண்டிருப்பவர். தானே வலிய சென்று, இதுபற்றி அக்காவிடம் பேசினார்.''ஜோதி தான் என் மருமக. இதுல எந்த மாற்றமும் இல்லை. என் பேச்சுக்கு எதிர் பேச்சு எவன் பேசிவிடப் போறான்?''''எதிர் பேச்சு பேசலேன்றதுக்காக, சம்மதிக்கிறதா அர்த்தம் செய்துக்க முடியாது. உன் மவன் வெள்ளை வெளேர்ன்னு, ராஜா மாதிரி இருக்கான். பெரிய படிப்பு படிச்சிருக்கான். என் மவ ஜோதிக்கு படிப்பு ஏறல; எட்டாவது தாண்டல. அவ்வளவாக உலக வெவரமும் போறாது. இதுல நெருப்பை கழுவின மாதிரி ஒரு நெறம் வேற. எங்கிட்டிருந்து இந்த கருப்பை கொண்டு வந்திச்சுன்னு தெரியல.''''அதனால என்ன... நானும் ஜோதிய மாதிரி, கரி கருப்பு தான். என் பொண்டாட்டி தொட்டா செவந்து போற நெறம். என்னை கட்டிக்கிட்டு அவ சந்தோஷமா வாழலையா... தன்னை மாதிரியே ஒரு புள்ளையை பெத்துக்கலயா?''''உன் பொண்டாட்டி உங்கூட வாழறா... ஆனா, சந்தோஷமாத்தான் வாழறான்னு யாரால சொல்ல முடியும்?''''என்னக்கா இப்படி பேசற?''''இல்லடா தம்பி... உன் பொண்டாட்டி சிரிச்சு, ஒரு நா கூட நா பார்க்கல, அதான் சொன்னேன். அதுவுமில்லாம, ஆம்பள கறுப்பா இருக்கலாம்; எப்படி வேணும்னாலும் இருக்கலாம். சம்பாதிக்கிறவனா மட்டும் இருந்தா போதும்.''அதே பொண்ணுங்கன்னா, செக்கச் செவேல்னு நெறமா இருக்கணும். அழகா இருக்கணும். புத்திசாலியா இருக்கணும். குடும்பத்த நிர்வாகம் பண்ண தெரியணும். இது எதுவும் என் மவளுக்கு தெரியாது. அவகிட்ட இல்லவுமில்ல. எத வச்சு நீ கார்த்திகிட்ட பேசுவ... சொந்தம் என்ற ஒரே காரணத்தை காட்டியா?''''அந்த ஒரு காரணம் போறுங்கா. வேற என்ன வேணும் சொல்லு... அதை விட எது பெரிசு?''''இதை, கார்த்தி ஒத்துக்கணுமே?''''ஒத்துப்பான்கா... ஒத்துக்க வைப்பேன். ஏற்கனவே, மருமகளே மருமகளேன்னு கூப்பிட்டு, பொண்ணு மனசுல ஆசையை துாண்டி விட்டுட்டேன். அது பாவம், கார்த்தி மேல உசுர வச்சுக்கிட்டு கெடக்கு.''''அவனுக்கும் பிடிக்கணுமில்ல?''''பிடிக்காமலா, நாள், கிழமைன்னு புது சேலை எடுத்து தர்றான்.''''ஏன், எனக்கு கூடத்தான் எடுத்து தர்றான்.''''இந்த மாதிரி விதண்டாவாதம் பேசினா, எனக்கு கோவம்தாங்க்கா வரும். ஜோதிக்கு தான் கார்த்தி, கார்த்திக்கு தான் ஜோதி. இதுல எந்த மாற்றமும் கிடையாது. மாறவும் விட மாட்டேன். நான் தீர்மானம் பண்ணினால் பண்ணினது தான்.''இவை யாவும் கார்த்திகேயன் காதுகளையும் எட்டின. ஆனால், அவன் அலட்டிக் கொள்ளவில்லை; பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவும் இல்லை. அவன் அம்மா பூவாயி, ஒருநாள், மெதுவாக அவனிடம் இதுபற்றிய பேச்சை எடுத்தாள்.''கார்த்தி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்ப்பா.''''சொல்லும்மா.''''இப்படி வந்து என் பக்கத்துல உக்காரு.''உட்கார்ந்து, அம்மாவின் கைகளை தன் கைகளில் எடுத்துக்கொண்டான். 'மெத்தென்று பஞ்சு மாதிரி கைகள். ரோஜாப்பூ நிறம். கைகள் மட்டுமின்றி அம்மாவே மென்மையானவள் தான். நிதானமானவள். அதிர்ந்து பேசாதவள்; பேசத் தெரியாதவள். 'இந்த அழகிற்கும், மென்மைக்கும் நேர் எதிரானவர், அப்பா. தொட்டால் ஒட்டிக்கொள்ளுமோ என்கிற மாதிரியான கருப்பு. விடைத்த மூக்கு. எப்போதும் செவ்வரியோடி கடுமையை காட்டும் கண்கள். பேச்சும் தடிமனாகத்தான் வரும். குரலும் பெரிது. முரட்டு சுபாவம்.'இப்படிப்பட்ட அப்பாவிற்கு, இந்த அம்மாவை யார் கட்டி வைத்தனர்... சொந்தமும், உறவும் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக, யாராவது இப்படி செய்வரா... கொஞ்சம் கூட பொருத்தமில்லாமல் கட்டி வைப்பரா... அம்மாவின் சம்மதத்தை யாராவது கேட்டிருப்பரா...'ஆனால், அம்மாவிற்கு இதுபோன்ற ஆதங்கம் இருப்பதாக தெரியவில்லையே. எந்த குறையையும் காட்டிக் கொண்டதில்லையே. நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்பது போலல்லவா நடந்து கொள்கிறாள். இத்தனை பெரிய குடும்பத்தை சமாளிக்கிறாள்.'உண்மையில், அம்மா, நீ யார்... உனக்கென்று ஆசைகள் உண்டா... உண்டு என்றால், அவை எப்படிப்பட்டவை... யாராவது கேட்டிருக்கின்றனரா, யாரிடமாவது சொல்லியிருக்கிறாயா?'''என்ன கார்த்தி யோசனை?''சடாரென்று கலைந்து, நிமிர்ந்தான்.''ஒண்ணுமில்லம்மா... ஏதோ பேசணும்ன்னு தானே கூப்பிட்ட?''''உங்கப்பன் சொல்லிக்கிட்டிருந்ததெல்லாம் காதுல வுழுந்ததில்ல?''''அப்பன் எத்தனையோ சொல்றாரு... அதுல, எத நீ சொல்ற?''''உன் திருமணத்த பத்திய்யா...''''ப்ச்சூ... உடும்மா.''''இப்படி சாதாரணமா எடுத்துக்காதய்யா... உங்கப்பனுக்கு பிடிவாதம் அதிகம். தாம் புடிச்ச முயலுக்கு மூணே காலும்பாரு. நாலாவது காலை ஒடச்சுக் கூட போடுவாரு.''''அந்தப்பனுக்கு மவன்தானேம்மா நானும். எனக்கும் இருக்குமில்ல?''''என்ன ராசா சொல்ற?''''திருமணம், என் சொந்த விஷயம்மா... அப்பஞ் சொல்ற மாதிரியெல்லாம் நடக்க முடியாது.''''அப்படின்னா?''''ஜோதியை போய் எப்படிம்மா கட்டிக்க முடியும்?''''ஏம்ப்பா... அவ நெறம் மட்டுன்னா... உங்கப்பன் கூட கருப்புதா, நா கட்டிக்கல... கட்டிக்கிட்டு சந்தோஷமா இல்ல?''''நீ கட்டிக்கிட்ட... ஆனா, சந்தோஷமாத்தா இருக்கியா?''''உனக்கேன் இந்த சந்தேகம்... எனக்கென்ன குறை... ராசா மாதிரி புள்ள பெத்திருக்கேன்... வீட்டுக்காரரு கெட்டிக்காரரு. வானத்த வில்லா வளைப்பாரு. சூராதி சூரன். வீராதி வீரன். எனக்கென்ன குறை?''அம்மாவை ஆச்சரியமாக பார்த்தான்.''என்னப்பா அப்படி பார்க்குற?''''நீ நெசமாத்தா சொல்றியா?''''எப்போ நான் பொய் சொல்லியிருக்கேன். சரி, நீ ஜோதி விஷயத்துக்கு வா... நேரடியாக கேக்குறேன், அவளை கட்டிக்க ஒனக்கு இஷ்டம்தானே?''''இல்லைம்மா.''''ஜோதி, எனக்கு தங்கச்சி மாதிரி... அப்படி நெனைச்சுதாம்மா நா பழகறேன். என்னிக்காச்சும் அவ மனசுல வேற எண்ணம் ஏற்படும்படி நான் பழகியிருக்கேனான்னு கேளு.''''என்னய்யா, ஒரேயடியா இப்படி சொல்ற?''''ஆமாம்மா... நானும் பொய் சொன்னதில்ல, பேசினதில்ல. ஜோதியை, நான் மனசால கூட நினைச்சதில்ல. என் மனசு பூரா வேற ஒருத்தி இருக்காம்மா.''''வேற ஒருத்தியா,'' என்று பதறினாள்.''ஆமாம்மா... புவனேஸ்வரின்னு பேரு. உன்னை மாதிரி அழகு. உன்னை மாதிரியே லட்சணம். சென்னையில் பார்த்தேம்மா... கோவில் குருக்கள் வீட்டு பொண்ணு.''''ஐயய்யோ... என்னய்யா இது,'' என்று, கைப்பற்றி தனியாக பின்பக்க தோட்டத்திற்கு அழைத்துப் போனாள்.''நடுக் கூடத்துல வச்சு பேசற பேச்சா இது... உங்கப்பங் காதுல வுழுந்தா, உன்னையும், என்னையும் சேர்த்து வச்சு தொலைச்சுப்புடுவாரு.''''ரொம்ப நல்லது. ரெண்டு பேரும் போய் சென்னையில், 'செட்டில்' ஆயிடுவோம். புவனாவை திருமணம் பண்ணி கூட்டிக்கிட்டு வந்திடறேன். மூணு பேரும் ஒண்ணா சந்தோஷமா வாழலாம். அப்பா, இங்க அத்தை கூடவும், ஜோதி கூடவும் நிம்மதியா இருக்கட்டும்.'' வாயடைத்துப் போனாள், பூவாயி. அடிவயிற்றை பயம் கவ்வ, மகனை ஏறிட்டாள்.''என்னால நம்ப முடியல, கார்த்தி. நம்ம மவன், நாம கிழிச்ச கோட்ட தாண்டமாட்டான்னு நம்பிக்கிட்டிருந்தேன்.''''திருமணம், மனசுக்குப் புடிச்சு செய்துக்கணும்மா... கட்டாயத்துக்காகவோ, நிர்ப்பந்தத்துக்காகவோ, வேற வழியில்லேன்னா கட்டிக்க கூடாதும்மா.''''உங்கொப்பாவ நினைச்சா அடிவயிறு கலங்குது. அவருகிட்ட எப்படி சொல்லப் போற?''''நா சொல்லிக்கறேன், கவலைப்படாதே. நீ தெரியாத மாதிரியே இரு. தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத.''''எப்போ சொல்லப் போற?''''சீக்கிரமே சொல்லிடணும்மா... அதுக்கு தான், 'டயம்' பார்த்துக்கிட்டிருக்கேன்.''அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என, பூவாயி அடுக்களையை நோக்கி நடக்க, அவன், அம்மா போவதையே பார்த்துக் கொண்டு நின்றான். முதலில் அப்பாவிடம் பேசுவதற்கு முன், ஜோதியிடம் பேச முடிவு செய்தான்.ஜோதியை அவனுக்கும் பிடிக்கும். கள்ளம் கபடமற்ற பெண். இந்த உலகத்தின் அழுக்குகள் ஒட்டாத பெண். கறுப்பாக இருந்தால் என்ன, மனசு வெள்ளை வெளேர். பத்தரை மாற்றுத் தங்கம். தன் மீது அவள் உயிரையே வைத்திருப்பது அவனுக்கு தெரியும். ஆனால், அதற்காக திருமணம் பண்ணிக்கொள்ள முடியாதே.ஜோதி, தனக்கு தங்கையாக பிறந்திருக்கக் கூடாதா என்று, பல முறை ஏங்கியிருக்கிறான். தங்கையாகவே நினைத்துக் கொண்டும் இருக்கிறான்.இதை, ஜோதியிடம் சொல்ல வேண்டும். சொல்லி, முதலில் அவள் மனதை தெளிவுபடுத்தி விடவேண்டும்.முடிவு செய்தவனாக, அவள் அறையை நோக்கி நடந்தான்.— தொடரும்இந்துமதி