பேரானந்தம் கிடைக்க வேண்டும் - வைரம் ராஜகோபால்
பாரதப் புண்ணிய பூமியில், பல மகான்கள் அவதாரம் செய்து, மக்கள் மேன்மை அடையவும், நல்வாழ்வு பெறவும், பலவிதமான உபதேசங்கள் செய்துள்ளனர். 'உபதேசம் யாருக்கு வேண்டும்? பணம் தான் முக்கியம்; அது கிடைக்க வழி இருந்தால் சொல்லுங்கள்...' என்று சொல்பவர்களும் உள்ளனர். இவர்கள், அதையே தேடித் தேடி, காலத்தை கழிக்கட்டும்; விட்டு விடுங்கள். பெரியோரது உபதேசங்கள், மக்களின் அறியாமையை, அஞ்ஞானத்தை போக்கி, மெய்ஞானத்தை உண்டாக்கக் கூடியவை. அஞ்ஞானம் என்பது, எது உண்மைப் பொருள் என்று தெரியாமல் திண்டாடுவது. மெய்ஞானம் என்பது, உண்மைப் பொருளை தெரிந்து கொள்வது; அதை அடைய முயற்சி செய்வது.ஒருவர் உபதேசம் செய்கிறார் என்றால், எத்தனை பேர் வந்து கூடுவர், கேட்பர்? புண்ணியம் உள்ளவர்கள் வருவர். சிலர், உபதேசம் பெற்று ஞானவான்களாவர்; மற்றவர்கள் வேடிக்கை பார்த்து விட்டுச் செல்வர். அப்படி அவர்கள் செய்த உபதேசம் தான் என்ன? அதன்படி நடப்பதில் என்ன சிரமம்? 'ஈசனை பஜனை செய். அவர், உனக்கு அறிவைக் கொடுப்பார். பயனில் ஆசை வைக்காமல், உன் கடமையை நீ சரி வர செய்து வா. உன் கர்மாவுக்குத் தக்கபடி, உனக்கு பலன் கிடைக்கும். கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக இருக்கப் பழகு. உனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை மற்றவர் குறைவாக மதித்தாலும், உன் கடமைகளை விட்டு விடாதே! நீ சுதந்திரன்; யாருக்கும் அடிமையில்லை. ஆனந்தம் உன்னுள்ளேயே இருக்கிறது. அதை விருத்தி செய். அதுவே பேரானந்தமாகி விடும்!' — இப்படியெல்லாம் உபதேசம் செய்திருக்கின்றனர்.ஜென்மா கடைந்தேற விரும்புகிறவர்கள், இதைப் பற்றி சிந்திப்பர்; ஈடுபாடு கொள்வர். நல்ல விஷயத்துக்குக் கூட்டம் குறைவாக உள்ளது; காலம் அப்படி மாறி வருகிறது. அப்படி இருந்தும், இன்னும் மகான்களிடம் மரியாதையும், தெய்வ பக்தியும், வழிபாடும் ஒரு பக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதுவே, இன்னும் விருத்தியானால், எவ்வளவு சந்தோஷம்; நலம் ஏற்படும்!***ஆன்மிக வினா-விடைசிவாலயங்களில், நந்திகேஸ்வரர் சுவாமியின் காதில் ஓதும் மந்திரம் எது?'ஓம் ஹர ஓம் ஹர...' என்று சொல்ல வேண்டும்.***