சுற்றுலா ஸ்பெஷல்!
ஒகேனக்கல்!தமிழகத்தின் புகழ்பெற்ற ஒகேனக்கல் அருவி, காவிரியின் கிளை நதியிலிருந்து, 20 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. இந்த அருவியை பார்ப்பதும், குளிப்பதும், பரிசல் பயணம் மேற்கொள்வதும் அளவில்லா ஆனந்தத்தை தரும். மலைகள் சூழ்ந்த பிரதேசத்தில், நீரில் மிதந்தபடி பரிசலில் செல்ல இது ஒன்றே சிறந்த இடம் என்பதால், இந்திய அளவில், அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். தர்மபுரி மற்றும் ஒகேனக்கல்லில் தங்கி, பார்த்து வரலாம்.குமரி - குற்றாலம் - திற்பரப்பு அருவி!கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள் ளது திற்பரப்பு அருவி! 'குமரி குற்றாலம்'என்று அழைக்கப்படும் இந்த அருவியின் சிறப்பே, ஆண்டு முழுவதும், தண்ணீர் கொட்டுவது தான். மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகி வரும் கோதையாற்றில், பரந்த பாறை வழியே, ௬௦ அடி உயரத்திலிருந்து, திற்பரப்பு அருவி பாய்கிறது.திற்பரப்பு அருவி ஜங்ஷனில், இறங்கி நடக்கும் போதே, 'ஹோ' என்ற பேரிரைச்சல், நம் காதுகளில் ஒலிக்கத் துவங்கும். அருவியைச் சுற்றிலும், பச்சைப் பசேல் என ரப்பர், தென்னை மரக்காடுகள் தென்படும். அருவியின் முன்புறம், அழகழகான வடிவங்களில் பூங்கா, சிறுவர்கள் விளையாட பல்வேறு விளையாட்டுகள், பாறையின் அனைத்து பகுதிகளிலும் பரந்து விழும் தண்ணீர் என, அருவி, உங்களுக்கு வித்தியாசமான அனுபவங்களை வழங்கும். ஆண்களும், பெண்களும் தனித்தனியே குளிக்கவும், உடை மாற்றவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, எந்த ஒரு அருவியையுமே அதன் மேல்பகுதிக்குச் சென்று, பார்க்க முடியாது. ஆனால், இங்கே, அருவியின் மேல் பகுதிக்கு சென்று பார்ப்பதுடன், அணைக்கட்டில் படகு சவாரி செய்யலாம். திருவாங்கூர் மன்னராட்சி காலத்தில், அருவியின் மேல்பகுதியையும், அருவியையும் ரசிப்பதற்காக கட்டப்பட்ட கல்மண்டபம், இன்றைக்கும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது. அருவியின் அருகில், மகாதேவர் கோவில் உள்ளது.இங்கிருந்து, 13 கி.மீ., தூரத்தில், மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளது. காமராஜர் காலத்தில், தேங்காய்ப்பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம், ஆசியாவிலேயே மிகவும் நீளமானது மற்றும் உயரமானது என்ற சிறப்பை பெற்றது. 16 அடி சுற்றளவில், 29 தூண்களுடன், 1,240 அடி நீளத்தில் கட்டப்பட்ட இந்த தொட்டிப் பாலத்தின் உயரம், 103 அடி. தொட்டிகள் இணைத்து கட்டப்பட்டதால், தொட்டிப் பாலம் என்ற பெயரைப் பெற்றது.தொட்டிப்பாலத்தின் ஒரு பகுதி, நடை பகுதியாகவும், மறுபகுதி, தண்ணீர் செல்லும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தின் இருபுறமும், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தொட்டிப்பாலத்தின் ஒரு பகுதியிலிருந்து, மறுகரைக்கு சென்று, படிக்கட்டுகள் வழியே கீழிறங்கி, தொட்டி பாலத்தின் உயரத்தையும், இயற்கையையும் பார்த்து ரசிக்கலாம்.மேலும், பாலத்தின் நடுப்பகுதியில் நின்று, பாலத்தின் கீழே ஓடும் பரளியாற்றையும், மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை காட்சியையும் ரசிக்கலாம். நாகர்கோவிலிலிருந்து, 48 கி.மீ., தூரத்தில் திற்பரப்பும், அங்கிருந்து, 13 கி.மீ., தூரத்தில் மாத்தூரும் உள்ளது. காலையில் திற்பரப்பு சென்று, மதியத்திற்கு மேல், மாத்தூர் செல்லலாம்.— தேசாந்தரிபத்மனாபபுரம் அரண்மனை!கன்னியாகுமரி செல்பவர்கள், அவசியம் செல்ல வேண்டிய இடம் பத்மனாபபுரம் அரண்மனை. திருவிதாங்கூரை ஆட்சி செய்தவர்களின் பழமை வாய்ந்த அரண்மனை இது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக, கி.பி. 1798 வரை திகழ்ந்தது. 6 ஏக்கர் நிலப்பரப்பில், பிரமாண்டமாக அமைந்துள்ள இந்த அரண்மனையில், போர்த்தளவாடங்கள் உள்ளிட்ட பலவகையான பழங்காலப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ராமஸ்வாமி ஆலயத்தில், இராமாயண இதிகாசத்திலிருந்து பல காட்சிகள், 45 பிரிவுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. நவீன காலத்தில், பார்த்து மகிழக்கூடிய, பழங்கால அரண்மனை இது! நாகர்கோவிலில் தங்கி, வசதிப்படி கார், பஸ்களில் சென்று வரலாம்.