உள்ளூர் செய்திகள்

இருவர் வெட்டிய இரண்டு!

சீதையைப் பிரிந்த, ராம - லட்சுமணர்கள், அவரைத் தேடியபடி, வனத்தில் வந்து கொண்டிருந்தனர்.அப்போது, ராம - லட்சுமணர்களை வழி மறித்தான், கவந்தன் எனும் அரக்கன். அவனுடைய விசித்திரமான தோற்றம், பார்த்தவர்களையும், கேட்டவர்களையும் நடுங்கச் செய்தது.பெரும் தலை; இரண்டு சூரியர்களைப் போல கொதிப்பை வீசியபடி இருந்தன, கண்கள்; மூச்சு விடும்போது, புகையும், நெருப்பும் வெளிப்படும் மூக்கு; மிகவும் நீளமான இரு கைகள்.இப்படிப்பட்ட பயங்கரமான தோற்றத்துடன் இருந்த அவனின் செயல்பாடுகளும், அவ்வாறே இருந்தன.இரண்டு கைகளையும் வீசி, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக சிக்கியவற்றை எல்லாம் பிடித்து, அப்படியே தன் வயிற்றில் இருக்கும் வாயில் அடைத்துக் கொள்வான், கவந்தன்.அப்படிப்பட்டவன் பார்வையில், ராம - லட்சுமணர்கள் அகப்பட்டால்... கேட்க வேண்டுமா?'லட்சுமணா... இந்தப் பூதத்திற்குப் பலியாவேன் நான்...' என்றார், ஸ்ரீராமர். 'அண்ணா... என்ன இது, மனம் கலங்கலாமா... இப்படிப்பட்ட இடர்களை வென்றவர்களல்லவா வீரர்கள்... இந்தப் பூதத்தின், பிடிக்கும் கைகளையும், விழுங்கும் குகை போன்ற வாயையும் வெட்டி வீழ்த்துவதைப் பாருங்கள்... துன்பத்தை விடுங்கள்...' என்றான், லட்சுமணன்.இதன் பின், ராம - லட்சுமணர்கள் இருவருமாக, கவந்தனின் தோள்களை வெட்டி வீழ்த்தி, காலால் தள்ளி அவனுக்கு முடிவு கட்டினர். தொடர்ந்து அவர்கள் செயல்பட்டு, சீதாதேவியை மீட்டது அனைவருக்கும் தெரிந்த கதை தான்.கவந்தன் கதையை, தற்கால நிகழ்வோடு அப்படியே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.தற்போது நம்மை மிரட்டிக் கொண்டிருக்கும் மிக கொடிய நோய், கவந்தன். அவனைப் போலவே, இந்நோயும் அனைவரையும் பிடித்து, விழுங்கிக் கொண்டுள்ளது.ஸ்ரீராம - லட்சுமணர்கள் இணைந்து, கவந்தனைக் கொன்று, அவனுக்கு முடிவு கட்டினர். அதுபோல, நாமும், நம்மைக் காக்க போராடும் களப்பணியாளர்களுமாக இணைந்து செயல்பட்டால், கண்டிப்பாக இந்தக் கொடிய நோய்க்கு முடிவு கட்டலாம். செயல்படுவோம்; உயர்வோம்!பி. என். பரசுராமன்ஆன்மிக தகவல்கள்!நெற்றியில் இடும் விபூதி, குங்குமம் மற்றும் சந்தனம், உடலிலுள்ள நாடிகளின் கெட்ட நீரை வற்றச் செய்யும்; உடல் நலம் மற்றும் நீண்ட ஆயுள் பெருகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !