உள்ளூர் செய்திகள்

ஆணவம் தோற்றது!

என்னால் முடியும் என்று நினைப்பது தன்னம்பிக்கை. என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம். இப்படி தன்னம்பிக்கையையும், ஆணவத்தையும் வேறுபடுத்துவர் பெரியோர். ஒருமுறை, உலக இயக்கமே தங்களால் தான் நடைபெறுகிறது என்ற ஆணவம், தேவர்களிடம் தலை துாக்கியது. இந்நிலையில், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் போர் மூண்டது. கண்ணுக்குப் புலப்படாத பரம் பொருளின் உதவியால் வெற்றி பெற்றனர், தேவர்கள். 'எங்களால் தான், போரில் வெற்றி பெற முடிந்தது...' என, அக்னி தேவனும், வாயுதேவனும் வெற்றி குறித்து செருக்கோடு கூறினர். ஜோதி வடிவமாக வந்து, அக்னியை பார்த்து, 'உன்னால் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார், பரம் பொருள். 'இந்த உலகில் உள்ள எதையுமே எரிக்கும் சக்தி எனக்குள்ளது...' என்றான், அக்னி தேவன். 'இதை எரி...' என்று, அக்னி தேவன் முன், காய்ந்த சிறு சருகை போட்டார், பரம்பொருள். தன்னுடைய முழு ஆற்றலை வெளிப்படுத்தியும், அக்னி தேவனால் அந்த சருகை எரிக்க முடியவில்லை. அப்படியே வாயு தேவனுக்கும் சோதனை வைத்தார். வாயு தேவனோ, தன் முன் வைக்கப்பட்டிருந்த, சிறு துரும்பைக்கூட அசைக்க முடியவில்லை. பின்னர், தங்களின் தோல்வியை ஒப்புக் கொண்டனர், அக்னி மற்றும் வாயு தேவர்கள்.ஆனால், பரம்பொருளின் மாய வடிவத்தை பார்த்திராத தேவர்களின் தலைவன் இந்திரனோ, தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்தான்; அந்த மாயத்தோற்றம், எது என்பதை கண்டறியாமல் விடுவதில்லை என்ற உறுதியோடு இருந்தான். அவனுடைய உறுதியை கண்ணுற்ற உமையம்மை அவன் முன் தோன்றி, அது எங்கும் நிறைந்த பரம்பொருள் என்பதை எடுத்துச் சொன்னாள். 'தேவர் - அசுரர் யுத்தத்தில், நீங்கள் வெல்லத் துணை நின்றது, பரம்பொருளே...' என்று கூறிய பின்னரே, இந்திரனின் ஆணவம் அகன்றது. முதன்முதலில், பரம்பொருளை தரிசிக்கும் பேறு பெற்றவர்கள், இந்திரன், அக்னி மற்றும் வாயு பகவான் ஆகிய மூவரும் தான். அதனால் தான், அகந்தை நிலை நீங்கிய இம்மூவரையும், உயர் நிலையில் வைத்து போற்றுகிறோம். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது, இந்த மூவருக்கும் கூட பொருந்துகிற வாசகம் தான். பி. என். பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !