மாலை நேரம்... வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டு வானாகி நின்றாயே என் சொல்லி வாழ்த்துவனே! நெற்றியில் விபூதிக் கீற்றோடு, பூஜை அறையின் முன் நின்று, திருவாசகம் ஓதிக் கொண்டிருந்த தன் மகனை பெருமையோடு பார்த்தாள், சாரதா. மருத்துவமனையில் நர்சாக பணிபுரிகிறாள். மகன், 11ம் வகுப்பு மாணவன். வயதிற்கு சற்று அதிகமான உயரம், வசீகரமான முகம், அரும்பு மீசை, பிரகாசமான கண்கள், எடுப்பான நாசி, அடர்த்தியான கேசம், எல்லாம் சேர்ந்து அவனைக் கட்டிளம் காளையாக காட்டியது. ''என்னம்மா அப்படி பார்க்குற,'' என்றபடியே, அவளை நோக்கி வந்தான், விவேக். அவன் சிரிக்கும் போது தெரியும் கன்னக்குழி சட்டென்று தன் கணவனை நினைவூட்டியது. ஆனால், அந்த ஞாபகம் சந்தோஷத்திற்கு பதிலாக கலக்கத்தையே உண்டாக்கியது. ''ஒண்ணுமில்லைடா,'' என்றபடியே, சகஜ நிலைக்கு தாவி இரு கைகளாலும், அவன் முகத்தை தடவி, நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள். எத்தனை வேலை இருந்தாலும், காலையும், மாலையும் விளக்கு ஏற்றி, சாமி கும்பிட வேண்டும். நாளில், ஒரு வேளையாவது, இருவரும் சேர்ந்தே சாப்பிட வேண்டும். இந்த இரண்டும் அந்த வீட்டின் எழுதப்படாத சட்டம். நறுக்கிய காய்கறிகளை போட்டு, அவனுக்கு பிடித்த வெஜிடபிள் குருமாவும், சப்பாத்தியும் செய்து முடித்தாள். ''இன்னிக்கு, 'க்ளாஸ்'ல ஒரு விஷயம் நடந்தது, அம்மா,'' சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தான், விவேக்... சாரதா, 'என்ன?' என்பது போல அவனைப் பார்த்தாள். ''என் கூடப் படிக்கிற, ப்ரீத்திக்கு திடீர்ன்னு, 'பீரியட்ஸ்' வந்திடுச்சு. அவ, 'ப்ரிபேர்ட்டா' இல்லாததால, 'ட்ரெஸ்ல' கறையாயிடுச்சு. உடனே, டீச்சர்கிட்ட 'பர்மிஷன்' கேட்டு, 'ரெஸ்ட் ரூம்' போய்ட்டு வந்தா. 'லஞ்ச் டைம்'ல எங்க பக்கத்து 'டேபிள்'ல அவ சாப்பிடும்போது, என் 'ப்ரண்ட்ஸ்' எல்லாம், அவளை கிண்டல் பண்ணாங்க, அம்மா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. நான், அவளுக்கு ஆதரவா பேசினா, 'நீ அவ பாய் ப்ரண்ட்டா'ன்னு என்ன கலாட்டா பண்ணுவாங்க. அதனால, பேசாம இருந்திட்டேன். 'ஸ்கூல்' முடிஞ்சு, வீடு திரும்பற போது, அவளைப் பார்த்து, என் 'ப்ரண்ட்ஸ்' கிண்டல் பண்ணதுக்கு, சாரி கேட்டேன். அவ ஒண்ணுமே சொல்லாம போயிட்டா.'' அவன் பேசுவதை கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்த, சாரதா மெதுவாக, அவன் கையைப் பற்றி, ''குட். நீ சரியா தான் செஞ்சிருக்கே. பெண்களோட இந்த மாதாந்திர சுழற்சி பற்றிய அறிவு, ஆண்களுக்கு தெரிந்திருப்பது ரொம்ப முக்கியம். அப்ப தான் பெண்களோட உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து அவங்களை மரியாதையா நடத்தற பழக்கம் இயல்பா வரும்.'' ''நீ நிறைய முறை சொல்லி இருக்கே அம்மா. எனக்கு ஞாபகம் இருக்கு.'' மென்மையாக புன்னகைத்தபடியே, அவன் பேசிய அழகை ரசித்தாள், சாரதா. ''சரி, எனக்கு, 'டியூட்டி'க்கு நேரம் ஆச்சு, கிளம்பறேன். கதவை பூட்டிக்கோ ஜாக்கிரதையா இரு,'' என்று கைப்பையையும், வண்டி சாவியையும் எடுத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு கிளம்பினாள். 'பா ர்க்கிங்' பகுதிக்கு வந்தவுடனேயே, ''ஹாய் ஆன்ட்டி,'' என்று ஓடி வந்தாள், வசுதா குட்டி. விவேக் படிக்கும் பள்ளியிலேயே, 5ம் வகுப்பில் படிக்கும், சுட்டிப் பெண். அழகாக பின்னப்பட்ட இரட்டைப் பின்னல், அகன்ற பெரிய கண்கள், குண்டு கன்னங்கள், குழந்தைத்தனம் மாறாத முகம். ''ஹாஸ்பிட்டல் கிளம்பிட்டீங்களா? விவேக் அண்ணா என்ன பண்றான்?'' ''ஹாய் கண்ணா. அவன், 'ஹோம் ஒர்க்' பண்றான்.'' ''அப்படியா, நான் முடிச்சிட்டேன்; நான் போய் அண்ணா கூட விளையாடவா?'' ''அவன் பெரிய 'கிளாஸ்' நிறைய படிக்க இருக்கும். நீ சாப்பிட்டு, சீக்கிரம் துாங்கு சரியா?'' சாரதா பதில் சொல்லி கொண்டிருக்கும் போதே, வசுதாவின் அம்மா மைதிலி, அவளைத் தேடி வந்தாள். ''இவ உங்களை பார்த்த உடனே ஓடி வந்துட்டா. வயசு ஆகுதே தவிர, இன்னும் குழந்தைத்தனம் மாறல,'' அவள் பதிலில் இருந்த உள் அர்த்தத்தை புரிந்து கொண்டு, புன்னகைத்தபடியே விடைபெற்றாள், சாரதா. மனிதர்களை போல வாகனங்களுக்கும் நினைவாற்றல் உண்டா என்ன? பழகிய குதிரை போல, வண்டி தன் போக்கில் விரைந்தது. வண்டி முன்நோக்கி செல்ல, மனம் என்ற, 'டைம் மெஷின்' பின்னோக்கி சென்றது. சா ரதா, திருச்சியில் உள்ள அன்னை சாரதா தேவி ஆசிரமத்தில் வளர்ந்த பெண். கல்லுாரி முடித்து, 'நர்ஸிங் ட்ரைனிங்'கும் முடித்த போது தான், ராஜன் வீட்டிலிருந்து, அவளைப் பெண் கேட்டு வந்தனர். மாப்பிள்ளைக்கு டில்லியில் பெரிய வேலை. ராஜா மாதிரி இருக்கான் என்று, அவள் ஒரே சொந்தமான பாட்டி தன் சக்திக்கு மீறி செலவு செய்து திருமணம் செய்து கொடுத்தாள். ஆனால், கல்யாணம் ஆன, சில மாதங்களிலேயே, அவன் முகமூடி கிழிந்து, சுயரூபம் தெரிந்தது. குடிப்பழக்கம், பல பெண்களோடு தொடர்பு என, அவனின் இன்னொரு முகம் வெளிச்சத்திற்கு வந்தது. புது இடம், பழக்கமில்லாத சூழல், திருமண வாழ்க்கையின் சிக்கல்கள் எல்லாம் ஒரு சேர தாக்க, சுதாரித்து ஒரு நிலைக்கு வரும்முன், பாட்டியும் இறந்து, விவேக்கும் பிறந்து விட்டான். வாழ்க்கை, கண்ணைக் கட்டி காட்டில் விட்டதோடு அல்லாமல், கையில் ஒரு குழந்தையையும் கொடுத்தது. நிகழ்காலம் போராட்டமாக, எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தபோது தான், அந்த சம்பவம் நடந்தது. புதிதாக சேர்ந்திருந்த வேலைக்காரியிடம், ராஜன் வழக்கம்போல் தன் கைவரிசையைக் காட்ட, அந்த பெண் அவனை, 'பளார்' என்று அறைந்து, ஹிந்தியில் திட்டிவிட்டு வெளியே நடந்தாள். வெளியே போகும்போது, வாசலில் குழந்தையோடு நின்று இருந்த, சாரதாவை ஒரு ஏளனப் பார்வை பார்த்து விட்டு, விவேக்கை காட்டி ஏதோ சொன்னாள். அவள் சொன்ன வார்த்தைகள் அப்போது புரியவில்லை. ஆனால், அந்த உடல்மொழி நடுக்கத்தை உண்டு பண்ணியது. 'இப்படிப்பட்ட அப்பனுக்கு பிறந்த புள்ள, இது எப்படி இருக்குமோ...' என்று அதன் அர்த்தம் புரிந்தபோது, அவளுள் ஏதோ ஒன்று முழுவதுமாக உடைந்து போனது. வீட்டை விட்டுச் செல்ல முடிவெடுத்தாள். யாரிடமும் ஒரு வார்த்தை சொல்லாமல், மார்க்கெட்டுக்கு போவது போல சின்ன பையோடு, குழந்தையையும் துாக்கிக்கொண்டு, டில்லியிருந்து கிளம்பி நேரே சென்னையிலுள்ள ராமகிருஷ்ண மடம் வந்து சேர்ந்தாள். அங்கு, அன்னையின் சன்னதியில், குழந்தையைப் போட்டு அழுது தீர்த்தபோது, கொஞ்சம் தெளிவு பிறந்தது. இவனை நல்லவனாக, ஒழுக்கமுள்ளவனாக வளர்க்க வேண்டும். அது தான் தன் வாழ்க்கையின் ஒரே லட்சியம் என்று உறுதி எடுத்துக் கொண்டாள். பிறகு, பரமஹம்சரின் கருணையினாலும், ஸ்வாமிஜியின் உதவியாலும் தங்குவதற்கும், வேலைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. 'நர்ஸ் ட்ரைனிங்' படித்தது கை கொடுத்தது. அவளது இயல்பான பொறுமையும், உதவும் குணமும், அவளுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு, ஆசிரமத்தின் சிபாரிசிலேயே இந்த தனியார் மருத்துவமனையில் வேலையும் கிடைத்தது. சிதிலமடைந்திருந்த வாழ்க்கை கட்டடம், சிறிது சிறிதாக சீரடைந்து, புனரமைக்கப்பட்டது. இன்று வரை, தன் மகனை ஒழுக்கமுள்ளவனாக வளர்ப்பதை ஒரு தவம் போல செய்து கொண்டிருக்கிறாள். அவனுக்கு சிறு வயதிலிருந்தே, ராமகிருஷ்ணர், ரமணர் போன்ற மகான்களின் வாழ்க்கை வரலாறு, நீதிக் கதைகள் ஆகியவற்றை தினம் சொல்வாள். அவன் விபரம் தெரிந்து, அப்பாவைப் பற்றி கேட்க ஆரம்பித்த போது, 'அவர் நல்லவர், பக்திமான், காசிக்கு சென்றவர் பிறகு திரும்பவில்லை...' என்று சொல்லி வைத்திருக்கிறாள். பதின்ம பருவம் வந்த பின், சாப்பிடும் போது, அன்றாட நிகழ்வுகளை இருவரும் பகிர்ந்து கொள்வது என்ற பழக்கத்தை பின்பற்ற துவங்கினர். இப்படி, அவளுக்குத் தெரிந்த வழியில் எல்லாம் செய்தாலும், செய்திகளில் பாலியல் துன்புறுத்தல் பற்றி படிக்கும் போது, மனம் பதறும். பல ஆண்டுகளுக்கு முன், டில்லியில் நடந்த சம்பவம் நினைவுக்கு வரும். பின், அந்த நினைவை உதறிவிட்டு, நிகழ்காலத்திற்கு வருவாள். காலம் கசப்பான சம்பவங்களை மறக்கச் செய்கிறது. ஆனால், அன்பென்ற பெருமழை தான் அதற்கு அருமருந்தாக இருக்கிறது. அ ன்று, சாரதாவுக்கு வார விடுமுறை. வீட்டு வேலைகளை முடித்து, விவேக் வருவதற்காக காத்திருந்த போது, அழைப்பு மணி ஒலித்தது. மைதிலியும், வசுதாவும் நின்றிருந்தனர். ''உங்களை தொந்தரவு பண்ணதுக்கு, சாரி. எங்கப்பாவுக்கு திடீர்ன்னு உடம்பு முடியல. அவரை, 'ஹாஸ்பிட்டல்' கூட்டிட்டு போகணும். வசுதாவையும் கூட்டிட்டுப் போனா திரும்பி வரும்போது துாங்கிடுவா. என்னால வண்டி ஓட்ட முடியாது. உங்க வண்டி இருந்ததைப் பார்த்தேன். அதான், நீங்க வீட்ல இருந்தீங்கன்னா, இங்க விட்டுட்டு போலாமான்னு,'' என்று இழுத்தாள். ''தாராளமா, நான் வீட்ல தான் இருப்பேன்.'' ''நீங்க கண்டிப்பா வீட்ல இருப்பீங்க இல்ல. அப்ப ஓ.கே.,'' என்று சொன்ன, மைதிலியின் கவலை, அவளுக்கு புரிந்தது. கொஞ்ச நேரத்தில், விவேக் வந்தான். இருவரும் சேர்ந்து, 'டிவி'யில், கார்ட்டூன் பார்த்தனர். சாரதா எல்லாருக்கும் சேர்த்து இரவு உணவு தயார் செய்தாள். அவர்கள் சாப்பிட உட்கார்ந்தபோது, சாரதாவின் மொபைல் போன் ஒலித்தது. 'ஹாஸ்பிட்டல்' என்று பார்த்தவுடன், எடுத்துப் பேசினாள்... 'ஓ அப்படியா, சரி.' ''என்னாச்சு அம்மா?'' ''ஒரு, 'எமர்ஜென்ஸி கேஸ், டியூட்டி நர்ஸ்' ரெண்டு பேர் லீவு. அதனால, 'சீப்' டாக்டர் என்னை உடனே கிளம்பி வரச் சொல்றார்.'' அம்மா தயங்குவதை பார்த்தான், விவேக். ''அம்மா, நான் வசுதாவை பார்த்துப்பேன். நீ போயிட்டு வா.'' சாரதாவுக்கும் வேறு வழி தெரியவில்லை. ''நான் போயிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுதோ வந்துடறேன், சரியா?'' தன், 'டூ-வீலரை' எடுத்துக்கொண்டு கிளம்பினாள், சாரதா. ஏதோ ஒரு இனம் புரியாத பயம், கலக்கம், அடி வயிற்றைப் பிசைந்தது. 'தான் திரும்பி வருவதற்குள், மைதிலி வந்துவிடுவாளோ? வசுதாவை, விவேக்கோடு விட்டு வந்ததற்காக சண்டை போடுவாளோ? கடவுளே, இது என்ன சோதனை. சே, இன்னிக்குன்னு பார்த்தா, 'எமர்ஜென்ஸி' கேஸ் வரணும்?' நல்ல காலம் வந்த வேலை எதிர்பார்த்ததை விட, சீக்கிரமே முடிய, திரும்பவும் அதே பரபரப்போடு வீடு நோக்கி விரைந்தாள். 'பார்க்கிங்'கில், மைதிலி வண்டி இல்லை. 'கடகட'வென படியேறி, 'காலிங் பெல்'லை அழுத்தினாள். கதவை திறந்தான், விவேக். பின்னாலேயே, வசுதாவும்... அவள் நெற்றியில் குங்குமம், கன்னத்தில் சந்தனம், தலையில் பூ அலங்காரம். ''என்னடா பண்ணிட்டிருந்தீங்க?'' என்று, 'படபட'ப்பு குறையாமல் கேட்டாள். ''இவ என்னோட விளையாடு, கதை சொல்லுன்னு, பிடுங்கிட்டே இருந்தா, அம்மா. நீ, எனக்கு ஒருவாட்டி, ராமகிருஷ்ணர், சாரதா தேவியை, அவர் வழிபடற காளியா நினைச்சு பூஜை பண்ண கதை சொல்லியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. இவளுக்கு அந்த கதை சொன்னேன்... ''நீ, எனக்கு அந்த மாதிரி பண்ணுன்னு அடம் பிடிச்சா. சரின்னு பூஜை அறை முன்னாடி உட்கார வெச்சு, சாமி படத்துக்கு நீ வைக்கிற மாதிரி, இவளுக்கு சந்தனம், குங்குமம், பூ எல்லாம் வெச்சு பூஜை பண்ணேன்,'' என்றான், விவேக். அவனது கள்ளமில்லாத அன்பென்ற பெருமழை, அவள் மனக் காயங்களை ஆற்ற, கண்ணீர் வழிய, இருவரையும் அணைத்துக் கொண்டாள், சாரதா. தீபா மகேஷ் வயது : 51 படிப்பு : பி.காம்., ஏ.சி.எஸ்., ஐ.சி.டபிள்யூ.ஏ., பணி : புதுடில்லியில் உள்ள பன்னாட்டு வங்கியில் சீனியர் மேனேஜர் சொந்த ஊர் : சென்னை. மின்னிதழ்களில், பல சிறுகதைகள் எழுதியுள்ளார். தேசியம், இறை உணர்வு மற்றும் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் கதைகளை எழுத வேண்டும் என்பது, இவரது லட்சியம். கதைக்கரு பிறந்த விதம் : சென்னை தி.நகரிலுள்ள சாரதா வித்யாலயா பள்ளியில் படித்த போது, ராமகிருஷ்ணர், சாரதா தேவி மற்றும் விவேகானந்தரை பற்றி நிறைய அறிந்து கொண்டேன். அதன் விளைவு, பெண்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தக்கூடிய ஆண் மகன்களை வளர்க்கும் பொறுப்பு ஒவ்வொரு தாய்க்கும் உண்டு என்ற ஆழ்ந்த எண்ணமே இக்கதை உருவாக காரணம்.