உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —நான், 36 வயது பெண். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். நர்ஸ் பயிற்சி பெற்று, பல சிரமங்களுக்கு இடையில், ஐக்கிய அரபு நாடான குவைத் சென்றேன்.எனக்கு, இரு அண்ணன்கள் உள்ளனர். அப்பா இறந்து விட்டார். அம்மா மட்டும் உண்டு. இரு அண்ணன்களும் விவசாய வேலைக்கு செல்கின்றனர். அம்மா, எங்கள் கிராமத்து பண்ணையாரின் ஆடு, மாடுகளை மேய்த்து வருகிறார். நான் தலையெடுத்த பின் தான், வீட்டினர் மூன்று வேளை வயிறு நிறைய சாப்பிடுகின்றனர். வேலையில் கண்ணும், கருத்துமாக இருந்து, அனாவசிய செலவு செய்யாமல், பணம் அனுப்புவேன். அப்பணத்தில் குடிசை வீட்டை இடித்து, ஓட்டு வீடு கட்டினர், என் அண்ணன்கள். குவைத்தில் நான், வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு அருகில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் ஒருவர், என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார்.என் குடும்ப சூழ்நிலை காரணமாக, முதலில் அதற்கு சம்மதிக்கவில்லை. தினமும் என்னை பின் தொடர்ந்து, 'டார்ச்சர்' செய்ததால், அண்ணன்களிடம் கூறினேன். தமிழகத்தை சேர்ந்த அவரும், என் அண்ணன்களிடம் பேசினார். நான் பணிபுரியும் மருத்துவமனை டாக்டர் ஒருவரிடம் பேசினார். அவர்கள் சிபாரிசின்படி, நானும் சற்று மனம் இறங்கி, அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன். அம்மா மட்டும் அரைமனதுடன் தான் சம்மதித்தார். பணக்கார வீட்டு பிள்ளை, நமக்கு சரிப்படாது எனக் கூறி வந்தார். திருமணம் ஆனதிலிருந்து, கணவரது போக்கு முற்றிலும் மாறிவிட்டது. திருமணமான இந்த ஆறு ஆண்டுகளில், ஒருமுறை கூட என்னுடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளவில்லை. எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுகிறார். மருத்துவமனையில் முதியோர் யாருக்காவது உதவி செய்தால் கூட, அவருடன் இணைத்து என்னை தவறாக பேசி, நோகடிப்பார். ஒரு கட்டத்தில் நான், வேலைக்கு போக தடை விதித்தார். அண்ணன்கள் திருமணம், வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கவே, தொடர்ந்து வேலை செய்து வந்தேன்.அவர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், ஒருமுறை, சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவர் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் கணவர், ஓரின சேர்க்கையாளன் என்பது தான் அது. இவ்விஷயம் கேட்டதிலிருந்து, அவர் ஏன் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார் என்பதற்கு அர்த்தம் தெரிந்தது. மன நிம்மதி இழந்து, விடுமுறை எடுத்து ஊருக்கு வந்து விட்டேன். 'ஏன் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை...' என, உறவினர்கள் கேட்கும் போது, என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அம்மாவிடமும், அண்ணன்களிடமும் ஏதும் கூறவில்லை. மூத்த அண்ணனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. இச்சமயத்தில், என் விஷயத்தை கூறி, அவர்களை சங்கடப்படுத்தக் கூடாது என்பதால், அமைதியாக இருக்கிறேன்.விடுமுறை முடிந்து விட்டதால், வேலைக்கு திரும்ப வர சொல்கின்றனர். ஆனால், திரும்ப கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. வேலையை விட்டுவிடவும் மனமில்லை. நான் என்ன செய்யட்டும் அம்மா.— இப்படிக்கு, உங்கள் மகள். அன்பு மகளுக்கு —ஓரின சேர்க்கையாளரான கணவர், உன்னை துரத்தி துரத்தி வந்து ஏன் காதலித்தார்? விரும்பி திருமணம் செய்து கொண்ட உன்னிடம், ஏன் அவர் ஆறு ஆண்டுகளாக தாம்பத்யம் வைத்துக் கொள்ளவில்லை? நீ வேலைக்கு செல்வதை தடுத்ததில், அவருக்கு என்ன லாபம் கிடைத்து விடப் போகிறது?- இந்த கேள்விகள், என் முன் தொக்கி வந்து நிற்கின்றன.'இந்தியர்களில் யாரும் ஓரின சேர்க்கையாளராக இருப்பது குற்றசெயல் அல்ல...'- என, 2018ல் பிரிவு 377 ஷரத்துகளை நீக்கியது, உச்சநீதிமன்றம்.ஆகவே, உன் கணவர், ஓரின சேர்க்கையாளராக இருப்பது, பொதுவான கண்ணோட்டத்தில் ஒரு குற்றமற்ற செயல். ஆனால், தான் ஓரின சேர்க்கையாளர் என்பதை கணவர் மறைத்து, உன்னை திருமணம் செய்து, ஆறு ஆண்டுகளாக தாம்பத்யத்தில் ஈடுபடாமல் இருப்பது, மாபெரும் குற்றச்செயல்.உன் பொம்மை கணவரை துாக்கி எறிய, பலமான பல காரணங்கள் உள்ளன.அவர் ஒரு ஓரின சேர்க்கையாளர். ஆறு ஆண்டுகளாக உங்களுக்குள் தாம்பத்யம் இல்லை. தாம்பத்யம் இல்லாததால் குழந்தை வாய்ப்பில்லை. வேலைக்கு போவதை தடுக்கிறார்.கணவர் பற்றி முழுவதுமாக, துளியும் மறைக்காமல் அம்மா மற்றும் அண்ணன்களிடம் கூறி விடு. நீ வேலைக்கு செல்வதும், உன் சம்பளத்தில் குடும்பத்தை பராமரிப்பதும், உன் அடிப்படை உரிமை. இயற்கைக்கு முரணான பேர்வழிக்கு உன்னை தடுக்க என்ன உரிமை இருக்கிறது?குவைத் வேலைக்கு திரும்பினாலும், பொம்மை கணவருடன் சேர்ந்து வாழ்வதை தவிர்.உங்கள் இருவருக்கும் குவைத்திலா அல்லது இந்தியாவில் திருமணம் நடந்ததா? இந்தியாவில் திருமணம் நடந்திருந்தால், திருமண சான்றிதழ் வைத்திருக்கிறாயா? குவைத்தில் திருமணம் நடந்திருந்தால், குவைத் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் விவாகரத்து பெறலாம். குவைத் விவாகரத்து சட்டத்தை முழுமையாக கற்றறிந்த வழக்கறிஞரை அணுகு. அவரிடம் நீ, சிவில் ஐடென்டி கார்டையும், பாஸ்போர்ட்டையும், அரபியில் மொழி பெயர்க்கப்பட்ட திருமண சான்றிழையும் ஒப்படைக்க வேண்டும்.குவைத் நீதிமன்றங்களில் குடிமகன் அல்லாதோருக்கும், முஸ்லிம் அல்லாதோருக்கும் முறைப்படி விவாகரத்து கிடைப்பது மிகவும் சிரமம் என்பர். பரஸ்பரம் ஒப்புதல் இல்லாத குவைத்தில் வழங்கப்படும் விவாகரத்து தீர்ப்புகள், இந்திய நீதிமன்றங்களால் சில பல காரணங்களுக்காக மறுதலிக்கப்படலாம்.நீ, இந்தியாவிலேயே விவாகரத்து வழக்கு தொடுத்து, வழக்கு முடியும் வரை இங்கேயே இருப்பது உசிதமானது. பொம்மை கணவர், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். மருத்துவ பரிசோதனை அறிக்கை வைத்து, உனக்கு மிக சீக்கிரம் விவாகரத்து கிடைத்துவிடும்.திருமண வலையை அறுத்து விட்டு, சுதந்திர வானில் பற.— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !