உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு - நான், 26 வயது பெண். பி.டெக்., படித்துள்ளேன். எனக்கு திருமணமான மூன்றாவது மாதம், என் கணவர் விபத்து ஒன்றில் இறந்து விட்டார். எனக்கு, குழந்தை இல்லை. என் மாமனார் - மாமியார் என்னை, தன் மகள் போல் பார்த்துக் கொள்கின்றனர். ஒரே மகனை இழந்து தவிக்கும் அவர்களை பாதுகாக்கும் கடமை எனக்கு இருப்பதால், என் பெற்றோர் அழைத்த போதும், நான் பிறந்த வீட்டுக்கு செல்லவில்லை. என்னை, மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்துகின்றனர், என் மாமனாரும், மாமியாரும். பெற்றோரும் அதையே கூறுகின்றனர். கொஞ்ச காலம் ஆகட்டும். பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளேன். ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்துள்ளேன். மேற்படிப்பு படித்து, வெளிநாடு செல்லவும் விரும்புகிறேன். என் கணவரின் மறைவுக்கு பின், நாங்கள் வேறு வீட்டுக்கு சென்று விட்டோம். எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும், 30 வயதுள்ள, வங்கியில் பணிபுரியும் ஒருவர், என்னைப் பற்றி அறிந்து, என்னை திருமணம் செய்து கொள்வதாக, என் மாமனாரிடம் கூறியுள்ளார். அவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டாராம். என் அத்தை மகன், வயது 29. விவசாயம் செய்கிறான். அவன், 'சிறு வயது முதலே உன்னை காதலிக்கிறேன். நானே, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்...' என்கிறான். இதில், என் அப்பாவுக்கு விருப்பமில்லை. முதலாவது காரணம், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை, இரண்டாவது, கிராமத்து வாழ்க்கை, எனக்கு ஒத்து வராது. எவ்வளவு வசதி இருந்தாலும், சுய காலில் நிற்க வேண்டும். அது, அங்கு கிடைக்காது, என்கிறார், அப்பா. நான், கல்லுாரியில் படிக்கும் போது, சீனியர் மாணவன் ஒருவன், என்னை தீவிரமாக காதலித்தான். அவன் வேறு மதத்தை சார்ந்தவன், பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என, அவன் காதலை ஏற்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பின், அவன், என் இன்னொரு நண்பன் மூலம் விஷயம் கேள்விப்பட்டு, 'நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன். எனக்கும் இன்னும் திருமணமாகவில்லை. உன்னை ராணி போல் வைத்துக் கொள்கிறேன்...' என்று, போன் செய்தான். எனக்கு ஏக குழப்பமாக இருக்கிறது. மூன்று மாதம் மட்டுமே என் கணவருடன் வாழ்ந்தாலும், 30 ஆண்டுகள் வாழ்ந்த திருப்தி எனக்குள்ளது. அவரை மறந்து, வேறொருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா என்று தோன்றுகிறது. நீங்கள் தான் எனக்கு நல்ல யோசனை கூற வேண்டும், அம்மா. - இப்படிக்கு, உங்கள் மகள். அன்பு மகளுக்கு - நுாறு நிறுத்தங்கள் கொண்ட, கால ரயிலில் நீயும், உன் கணவரும் ஏறினீர்கள். இரண்டாவது நிறுத்தத்திலேயே உன் கணவர் இறங்கிப்போய் விட்டார். மீதி நிறுத்தங்களை தன்னந்தனியாக பயணித்து இலக்கை அடைந்து விடுவாயா? 'அடைவேன்...' என்கிற இந்த பொய் திருப்தி, பாசாங்கு தனமானது. உன் மனதையும், உடலையும் ஏமாற்றிக் கொள்கிறாய். இன்னும், ஒன்றிரண்டு ஆண்டுகள் போனால், இறந்து போன உன் கணவரின் முகம் மறந்து விடும். இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பின்னும், உன் மாமனார் - மாமியாரை நீ பாதுகாக்கலாமே? உன்னை யார் தடுப்பது? மறுமணம் என்பது கணவனை இழந்த அல்லது விவாகரத்தான பெண்களின் அடிப்படை உரிமை. திருமணமான, மூன்றே மாதங்களில் மனைவியை இழந்த ஆண், மறுமணம் செய்து கொள்கிறான். அதே உரிமை கணவனை இழந்த மனைவிக்கும் உண்டு தானே! இயல்பாய் இரு. ஆமை போல சடங்கு, சம்பிரதாய தடைக்கட்டுக்குள் தலையை இழுத்துக் கொள்ளாதே. உன்னுடைய திருமணம் காதல் திருமணம் அல்ல. இறந்து போனவர் வழியாக உனக்கு குழந்தைகள் இல்லை. கட்டாயம் மறுமணம் செய்து கொள். ஆனால், தகுதியானவரை மணந்து கொள். வரன் விஷயத்தில் உனக்கு, மூன்று தெரிவுகள் உள்ளன... * ஒருவர், வங்கியில் பணிபுரியும், 30 வயது விதவன். குழந்தை பற்றி குறிப்பிடப்படவில்லை. குழந்தை இல்லை என்றே நம்புகிறேன் * இரண்டாமவர், ஒருதலை காதல் புரித்த, 29 வயது கிராமத்து விவசாயி. திருமணமாகாதவர், அத்தை மகனும் கூட * மூன்றாமவர், அயல் மதத்தைச் சேர்ந்த திருமணமாகாத, சீனியர் மாணவர். மூன்று தெரிவுகளில், இரண்டாமவரே என்னை ஈர்க்கிறார். கிராமத்து வாழ்க்கையை இளப்பமாக உன் அப்பா கருதுவது மடமை. கிராமத்திலிருந்து எத்தனையோ பேர் முன்னுக்கு வந்துள்ளனர். இவன், உன்னை சிறுவயதிலிருந்தே பார்த்து வந்திருக்கிறான். உன் நேர்மறை, எதிர்மறை விஷயங்கள் அவனுக்கு அத்துப்படி. அத்தனைக்கும் மேலாக அவன் உன்னை ஒரு தலையாய் காதலித்திருக்கிறான். இந்த ஒருதலைக்காதல் காட்டாற்றில் இருந்து ஒரு மெஹாவாட் காதல் மின்சாரம் எடுக்கலாம். அடுத்து, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உன் அத்தை மகனுடன், மொபைல் போனில் பேசு. ஒரு கோவிலுக்கு வரவழைத்து அவனின் முழு மன ஓட்டத்தை அவதானி. உன்னுடைய மேற்படிப்புக்கும், பன்னாட்டு நிறுவன வேலைக்கும் இந்த விவசாயி அத்தை மகன் ஒத்துப் போவானா? என்று அறிந்துகொள். தன்னுடைய விவசாயப் பணியை யாரிடமாவது ஒப்படைத்து விட்டு, உனக்கு உறுதுணையாக கைகோர்ப்பானா என்று தெளிவு பெறு. என்னுடைய சிபாரிசை மீறி, நீ யாரை திருமணம் செய்து கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சி தான், வாழ்த்துகள்! -- என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !