அந்துமணி பா.கே.ப.,
இந்த வாரம் குட்டி குட்டி தகவல்கள் மட்டுமே... அடிக்கடி ஊரடங்கு சட்டம் என்ற வார்த்தை பிரயோகம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைக் குறிக்கும், 'கர்ப்யூ' என்ற சொல் எப்படி வந்தது தெரியுமா? 'கவர் தி பயர்' என்பதையே, 'கர்ப்யூ' என்கின்றனர். ஐரோப்பிய வீடுகளில் குளிருக்கு இதமூட்ட, எப்போதும் நெருப்பு மூட்டப்பட்ட அடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். இரவு படுக்கப் போகும் போது, அந்த நெருப்பை அணைத்துவிட்டு போக வேண்டும் என்பதை குறிப்பிட, 'கர்ப்யூ' என்று அக்காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தனர். நெருப்பால் வரும் விபத்துகளை தவிர்ப்பதே ஆரம்பத்தில் இச்சொல்லின் அர்த்தமாக இருந்தது. ஒரு காலத்தில் இடது என்றலே, சற்று அச்சத்துடன் அதை ஒரு தீய சக்தியாக பார்த்தனர். இடது கைக்காரர்களை சாத்தான் இயக்குவதாக, ஒரு நம்பிக்கை இருந்தது. இந்த அபத்தமான கருத்து, பிற்பாடு அகன்று விட்டது.இடது சாரி என்றால், வலது சாரியை விட தீவிரமான கருத்து கொண்டவர்கள் என்ற அர்த்தம் வந்தது. பிரெஞ்சு நேஷனல் அசெம்ப்ளி - நாடாளுமன்றம், கடந்த, 1789ல் கூடிய போது, தீவிரமான கருத்து கொண்டவர்களை தன் இடது புறத்தில் உட்காரச் சொன்னார், சபாநாயகர். அதிலிருந்து அவர்களுக்கு இடதுசாரிகள் என்று பெயர் சூட்டப்பட்டது. ஏழாம் எண்ணை எழுதும்போது, இடையில் ஒரு குறுக்கு கோடு போட்டு எழுதும் பழக்கம், சிலருக்கு உண்டு. வேகமாக எழுதும் போது, ஏழு ஒன்று போலத் தெரிந்துவிடும் என்பதற்காக, இடையில் ஒரு கோடு போட்டு எழுதப்படுவதாக சொல்லப்பட்டாலும், இதற்கான மூல காரணம் வேறு. பிரான்ஸ் நாட்டினருக்கு, 7 துரதிருஷ்ட எண். ஆகவே, அதை எழுதிவிட்டு, பிறகு அது இல்லை என்பது போல நடுவில் அடித்து விடுவர். ****நொறுக்குத் தீனி பொட்டலங்கள் வாங்கும்போது, அதில் காற்று நிரப்பி இருப்பதை உணர முடியும். சரியாக பாதுகாக்கப்படாத அல்லது திறந்த கொள்கலன்களில் உள்ள உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற, எண்ணெயால் பொரிக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள், நாளடைவில் கெட்டுப் போய், அதன் சுவை மற்றும் மணம் மாறி விடக்கூடும். இதற்கு காரணம், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருட்கள், காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வேதி வினை புரிந்து ஆக்ஸிஜனேற்றம் அடைந்து, கெடுகின்றன.இவ்வாறு தீனிகள் கெட்டுப் போகாமல் இருக்க, அவை அடைக்கப்பட்ட பொட்டலங்களில் நைட்ரஜன் வாயுவை நிரப்புகின்றன, தயாரிப்பு நிறுவனங்கள். இதனால், பொட்டலத்தில் உள்ள தீனிகள், ஆக்சிஜனுடன் வினை புரிவது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் உணவுப் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கெடாமல், சுவை, மணம் மாறாமல் அப்படியே இருக்கின்றன. **** நம்பர் என்ற ஆங்கில சொல்லின் ஸ்பெல்லிங்கில், 'O' என்ற எழுத்தே இல்லை. பிறகு ஏன், 'No.' என்று எழுதுகிறோம். நியூமரோ - Numero என்ற லத்தீன் வார்த்தையின் சுருக்கம் தான், 'No.' என்பது. நம்பர் என்பதற்கு இத்தாலிய, ஸ்பானிஷ் மொழிகளிலும், நியூமரோ என்பதே வார்த்தை. நியூமரோ யுனோ - Numero uno என்றால், 'நம்பர் ஒன்' என்று அர்த்தம். ****பதினைந்து நிமிடம் மனம்விட்டு சிரித்தால், அது நீங்கள், இரண்டு மணிநேரம் துாங்கியதால் கிடைக்கும் பலனுக்கு சமம்.****பிரமாண்ட தோற்றமளிக்கும் கங்காருவுக்கு புதிதாக பிறந்த குட்டி, ஒரு ஸ்பூனில் வைக்கும் அளவுக்கு மிக சிறியதாக இருக்கும். சின்ன ஜெல்லி மிட்டாய் அளவுக்கு, 2 கிராம் எடை இருந்தாலே அதிகம். ****உலகின் மிகப்பெரிய பாம்பான அனகோண்டாவுக்கு விஷம் இல்லை. ஆனால், தன் இரையை பிடித்தவுடன் அதை நெரித்தே கொன்று விடக் கூடியது. நம் காடுகளில் இருக்கும் மலைப்பாம்புகளின் பங்காளி தான், அனகோண்டா.தன்னுடைய இரையை சுற்றி இறுக்கி, மூச்சு திணறவைத்து கொல்லும், மலைப்பாம்புகள். அதுபோலதான், தன் இரையின் எலும்புகளை நொறுக்கி விடும், அனகோண்டா. இது, ஒருவரை இறுக்கும் போது, ஒரு பஸ் நம் மீது ஏறி இறங்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்குமாம். அமேசான் காடுகளில் வாழும் இவற்றை, சில ஆதிவாசிகள் தெய்வமாக வழிபடுகின்றனர். ஒரு உண்மை தெரியுமா? 'ஆளைக் கொன்றான் பாம்பு' என்ற தமிழ் வார்த்தை தான் மருவி, ஆனைக்கொன்றான் ஆகி, இப்போது, அனகோண்டா என, ஆகிவிட்டது என்கின்றனர். ****நாம் வாங்கும் க்ரீம், டூத் பேஸ்ட் போன்றவற்றின் டியூபின் கீழ்ப்பகுதியில் விதவிதமான கலர்களில் ஒரு சின்ன சதுரம் இருக்கும். அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? பச்சை சதுரம் - முழுக்க இயற்கைப் பொருட்களால் ஆனது. நீல சதுரம் - இயற்கைப் பொருட்களும், மருந்துப் பொருட்களும் கலந்தது. சிவப்பு சதுரம் - இயற்கை பொருட்களும், ரசாயனமும் கலந்தது. கறுப்பு சதுரம் - முழுக்க முழுக்க ரசாயன பொருள் சேர்ந்தது.*****சிங்கத்தின் கர்ஜனையை, 8 கி.மீ., துாரத்திற்கு கேட்க முடியும். கழுகின் ஆயுட்காலம், 100 ஆண்டுகள்.சில கடல் ஆமைகளின் வயது: 400 ஆண்டுகள்.கடல் பிராணிகளில், டால்பினுக்கு மட்டுமே மனிதர்களுக்கு தீங்கிழைக்காத குணம் உண்டு. மேலும், மனிதர்களுக்கு நன்மையும் செய்யும்.உலகிலேயே மீன் இனத்தில் பெரியது, திமிங்கலம். இதன் உடலில், 7,500 லிட்டர் ரத்தம் உள்ளது. பிரசவ காலத்தில், இதன் உடலில் தினசரி, மூன்று டன் பால் சுரக்கும்.*****டில்லி செங்கோட்டைக்கு, கி.பி., 1639ல் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டி முடிப்பதற்கு, ஒன்பது ஆண்டுகள், மூன்று மாதங்கள் பிடித்தன. செலவான மொத்த தொகை, ஒன்பது கோடி ரூபாய். கட்டடக் கலை வல்லுனரான, முக்கா ராமத்கான் என்பவர் பொறுப்பேற்று, இதை கட்டி முடித்தார். இதன் சுற்றளவு, 1.5 மைல். வடக்கிலிருந்து தெற்கு வரை, இதன் நீளம் 3,200 அடி. இதன் அகலம், கிழக்கிலிருந்து மேற்கு, 1,800 அடியாகும்.****