உள்ளூர் செய்திகள்

கருடனின் கருணை!

ஒருமுறை, சிவபெருமானை பார்ப்பதற்காக, கயிலாயம் வந்தார், மகா விஷ்ணு. கயிலாயத்தின் நுழைவாயிலில், தன்னுடைய வாகனமான, கருடனை இருக்க சொல்லிவிட்டு, தாம் மட்டும் சிவபெருமான் இருக்கும் இடத்துக்கு சென்றார்.அந்த இயற்கை சூழலையும், அழகாக அமைந்திருந்த நுழைவாயிலின் வளைவையும், ரசித்து கொண்டிருந்தார், கருடாழ்வார். வாயிலின் வளைவின் மீது அமர்ந்திருந்த அழகிய சின்னஞ்சிறு பறவையை பார்த்தார். 'இத்தனை அழகான பறவையா! பிரமாண்டமான இமயமலையை படைத்தவர் தானே இதையும் படைத்திருக்க வேண்டும்...' என்று நினைத்து, அதன் அழகில் லயித்திருந்திருந்தார். அப்போது, சிவபெருமானை தரிசிப்பதற்காக வந்தார், எமதர்மன். வளைவின் வழியே செல்லும் போது, அந்த அழகிய பறவையை கூர்ந்து பார்த்தார், எமதர்மன். கருடனுக்கு இதைக் கண்டதும் கவலை உண்டானது. எமதர்மன் பார்வையில் பட்ட இந்த அழகிய பறவைக்கு இறுதி காலம் வந்துவிட்டதோ... அவர் திரும்பி வருகிறபோது, இந்த பறவையின் உயிரை கவர்ந்து போய் விடுவாரோ என நினைத்து, அதை காப்பாற்ற எண்ணினார். அதனால், அச்சிறு பறவையை துாக்கிக் கொண்டு போய், தண்டகாரண்ய காட்டுக்குள், அருவியின் அருகேயிருந்த அடர்ந்த மரத்தின் மேல் பத்திரமாக விட்டு வந்தார். நொடிப் பொழுதில் இது நடந்தது. திரும்பி வந்த, எமதர்மன், பறவை அமர்ந்திருந்த வளைவை பார்த்தார். அது அங்கே இல்லை.அவரை வணங்கி, 'என்ன பார்க்கிறீர்கள்?' என்றார், கருடன். 'ஒரு பறவை இருந்தது. அதன் ஆயுள் முடிந்து விட்டது. தண்டகாரண்ய காட்டுக்குள்ளே, அருவிக்கரை மரத்திலுள்ள மலைப்பாம்புக்கு இரையாக வேண்டிய நேரம் இது. எப்படி அங்கே போக போகிறது என்று பார்த்தேன்...' என்றார், எமதர்மன். இந்த விதியின் விளையாட்டில், கருடன் தன்னையும் அறியாமல் பங்கு கொண்டதை எமதர்மன் அறிந்திருக்க மாட்டாரா என்ன! அதிர்ந்து போனார், கருடன். 'பகவானே, நான் உன்னுடைய வாகனமாக இருக்கும் பேறு மட்டும் போதும். மற்ற பிரச்னைகளில் தலையிடுகிற தேவையற்ற மனநிலை எனக்கு வேண்டவே வேண்டாம்...' என்று கண்ணீரோடு, மகா விஷ்ணுவை சரணடைந்தார், கருடாழ்வார். பி. என். பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !