ஞானானந்தம்: உழைப்பின் பலன்!
மலையடிவாரத்தில் சிறிய குடில் அமைத்து வசித்து வந்தார், முனிவர் ஒருவர். தவம், தியானம் செய்து, மீதி நேரம், கூடை முடையும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அந்நாட்டு மன்னர், முனிவரின் குடில் வழியே சென்றார். முனிவர், கூடை முடையும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்ததைப் பார்த்து சிரித்து விட்டார். முனிவரிடம், 'நீங்களோ முற்றும் துறந்த முனிவர். பிறகு ஏன் கூடை முடைந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறீர்கள். சும்மா இருக்க வேண்டியது தானே...' எனக் கேட்டார், மன்னர். 'உங்கள் கேள்விக்கு பிறகு பதில் சொல்கிறேன். முதலில் இந்த ஆசனத்தில் அமருங்கள்...' எனக் கூறி, மன்னருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார். மன்னர், தண்ணீர் குடித்து முடித்தவுடன், 'இந்த நீரை விட சுவையான தேவலோக நீர் வேண்டுமா?' எனக் கேட்டார், முனிவர்; தேவலோக நீர் என்றதும், உடனே கொண்டு வரும்படி கூறினார், மன்னர். 'அந்த நீரை நீங்கள் பருக வேண்டுமானால், 100 முறை கிணற்றிலிருந்து நீர் இறைக்க வேண்டும்...' என்றார், முனிவர். இதைக் கேட்டதும், மன்னருக்கு சற்று அதிர்ச்சி ஏற்பட்டாலும், தேவலோக நீர் மீதான ஆசையால், கிணற்றிலிருந்து, 100 முறை கஷ்டப்பட்டு நீர் இறைத்தார். இறைத்து முடித்தவுடன் மிகவும் களைப்பில் இருந்த, மன்னரிடம், தேவலோக நீரைக் கொடுத்தார், முனிவர். அதை வாங்கிக் குடித்தவுடன், 'ஆகா! அற்புதமான சுவை! இந்த மாதிரியான நீரை என் வாழ்நாளில் குடித்ததே இல்லை. இந்த நீரை நான் தினமும் அருந்த, நீங்கள் தான் உதவ வேண்டும்...' என்றார், மன்னர். 'அப்படியானால் நீங்கள் தினமும், 100 முறை கிணற்றிலிருந்து நீர் இறைக்க வேண்டும்...' என்றார், முனிவர்; புரியாமல் விழித்தார், மன்னர். 'நான் கொடுத்தது தேவலோக நீர் அல்ல. முதலில் உங்களுக்கு கொடுத்த அதே சாதாரண நீர் தான் இதுவும்...' என்றார், முனிவர். 'அப்படியெனில், முதலில் குடித்த நீரை விட, இரண்டாவதாக குடித்த நீர் அவ்வளவு சுவையாக இருந்ததன் காரணம் என்ன?' எனக் கேட்டார், மன்னர். 'நீங்கள் மன்னராக இருந்தாலும், உடல் அளவில் உழைக்காதவர். எனவே, முதலில் நான் கொடுத்த நீர், உங்களுக்கு சாதாரணமாக இருந்தது. பிறகு நீங்கள், 100 முறை தண்ணீர் இறைத்தீர்கள். 'உங்கள் கடும் உழைப்பின் காரணமாக, இரண்டாவதாக நான் கொடுத்த அதே நீர், உங்களுக்கு சுவைமிக்க தேவலோக நீராக இனித்தது. தினமும் இந்த நீர் உங்களுக்கு வேண்டுமானால், நீங்கள் தினமும் கடுமையாக உழைக்க வேண்டும். 'நீங்கள் முதலில் கேட்டீரே, 'ஏன் உழைக்கிறீர்?' என்று. அதற்கான பதில், நன்றாக உழைத்தால் தான் உடல் வலிமையாகும். உடல் வலிமை இருந்தால் தான் தவத்தையும், தியானத்தையும் சரிவர செய்ய இயலும். சும்மா இருந்தால் உடல், நோய்களின் கூடாரமாகி விடும்...' என, விளக்கம் தந்தார், முனிவர். தன்னுடைய தவறுக்கு, முனிவரிடம் மன்னிப்பு கேட்டார், மன்னர். சகல போகப் பொருட்களையும் துறந்து எதையும் விரும்பாமல் இருப்பவன், உடலை பேணுவதற்குரிய செயலை மட்டும் செய்து கொண்டிருந்தாலும் புண்ணியம் கிடைக்காது.அருண் ராமதாசன்