உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம்: பூதமும் கம்பமும்!

ஒரு மனிதர், பூதம் ஒன்றை வரவழைத்து தான் விரும்புவதை எல்லாம் கொடுக்கும்படி கட்டளையிட்டு பெற வேண்டும் என்று விரும்பினார். பூதத்தை வரவழைக்க தேவையான மந்திரங்களைப் படித்து, தினமும் சொல்ல ஆரம்பித்தார். சில மாதங்களில் மந்திரங்களின் சக்தியால், அவரால் பூதத்தைத் தன் முன் வரவழைக்க முடிந்தது. பூதமும், அவருடைய கட்டளைகளுக்கு பணிந்தது. ஆனால், 'நீங்கள் எனக்கு, 24 மணி நேரமும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். எனக்கு வேலை எதுவும் கொடுக்காவிட்டால், நான், உங்களை விழுங்கி விடுவேன்...' என, ஒரு நிபந்தனையை விதித்தது, அந்த பூதம். அந்த மனிதர் ஏற்றுக்கொண்டார். உடனடியாக தனக்கு ஒரு பெரிய மாளிகை கட்டித்தர வேண்டும் என்று கட்டளையிட்டார், அவர். ஆச்சரியப்படும்படியாக, சீக்கிரமே மாளிகை கட்டப்பட்டுவிட்டது. அடுத்ததாக ஒரு நீண்ட சாலை அமைக்க உத்தரவிட்டார். அதுவும் சற்று நேரத்திலேயே முடிந்து விட்டது. அடுத்த நிமிடம் அவர் முன் நின்றது, பூதம். 'இன்னும் வேலை கொடுங்கள்...' என்று கேட்டது. அவருக்கு யோசிக்கக்கூட நேரம் இருக்கவில்லை. ஒரு பெரிய நகரத்தை உருவாக்க உத்தரவிட்டார். அதுவும், 10 நிமிடத்தில் தயாராகிவிட்டது. அந்த மனிதர் குழம்பிப் போனார்; பயம் அடைந்தார். புதிதாக என்ன உத்தரவு கொடுப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. வேலை கொடுக்காவிட்டாலோ, பூதம் அவரைச் சாப்பிட்டு விடும். விரைந்து சென்று, மகான் ஒருவரிடம் யோசனை கேட்டார், அந்த நபர். அந்த மகான், ஒரு மூங்கில் கம்பத்தை பூமியில் பதிக்கும்படி யோசனை சொன்னார். அடுத்த உத்தரவு வரை அந்தக் கம்பத்தில் பூதம் ஏறி இறங்க வேண்டும் என்று கூறச் சொன்னார். அவரும் அப்படியே பூதத்திடம் சொன்னார். அது கட்டளையை நிறைவேற்றித்தானே ஆக வேண்டும். பூதத்திற்கு ஓய்வே கிடைக்கவில்லை. கடைசியாக, அது வெறுத்துப் போய் ஓடி விட்டது. மனிதர்களாகிய நம்முடைய விஷயத்திலேயே இதை ஒப்பிட்டு பாருங்கள். ராம நாமம் தான் கம்பம். அகங்காரம் தான் நம்மை மிரட்டும் பூதம். மீண்டும், மீண்டும் கம்பத்தில் ஏறி இறங்கும்படி அதனிடம் சொல்ல வேண்டும். அது, சீக்கிரமே களைத்துப் போய் ஓடி விடும். அகங்காரத்தை அடக்கத்தான், ராம நாமம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 'நான்' என்ற எண்ணமே ஆணவம்; இது ஆன்மிக வளர்ச்சிக்குத் தடை. இறைவனின் திருவடியை மனதில் நிறுத்தி தியானிப்பது, 'நான்' என்ற எண்ணத்தை நீக்கினால், உண்மையான ஆன்மாவை உணர உதவும். இறை நாமத்தை சொல்லும்போது, பற்று, பயம், கவலையின்றி மனதை இறைவனிடம் வைக்க வேண்டும். இறைவனின் திருநாமங்களை தொடர்ந்து உச்சரிப்பது, மனம் அலைபாயாமல் இருக்க உதவுகிறது. இது, மனதை ஒருமுகப்படுத்தி, அகங்காரத்தைக் குறைக்கும். கலியுகத்தில் நம்மைக் கடைத்தேற்றும் ஒரே வழி, இறைவனின் நாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பதுதான். அருண் ராமதாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !