உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

புதுவித மோசடி!சமீபத்தில், காவல்துறையில் பணிபுரியும் நண்பர் ஒருவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, அவர் வித்தியாசமான மோசடி ஒன்றை கூறினார்...அடிக்கடி வெளியூர் சென்று வரும் வியாபாரி ஒருவர், வழக்கம் போல் வியாபாரம் காரணமாக வெளியூர் சென்று விட்டு, பஸ்சில் வீடு திரும்பி இருக்கிறார். பேருந்து நிலையத்தில் இறங்கி, 'பார்க்கிங்' பகுதியில் விட்டுச்சென்ற, அவரது இரு சக்கர வாகனத்தை எடுக்க சென்றுள்ளார்.அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞன் ஒருவன், தன் மொபைலில் ஒரு வீடியோவை காட்டியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார், அந்த வியாபாரி.அதில், வியாபாரி பேருந்தில் பயணிக்கும் போது, மொபைலில், ஆபாச வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த காட்சி இருந்துள்ளது. அதே பேருந்தில் பயணித்த அந்த இளைஞன் ரகசியமாக அதை வீடியோ எடுத்துள்ளான்.அந்த வீடியோவை அவரது குடும்பத்தாரிடமோ, சமூக வலைதளங்களிலோ வெளியிடாமல் இருக்க, பணம் கேட்டு மிரட்டியுள்ளான், அந்த இளைஞன்.ஆனால், துணிச்சலாக அவனை பிடித்து, தன் தவறை ஒப்புக்கொண்டு, பேருந்து நிலைய போலீசிடம் ஒப்படைத்துள்ளார், அந்த வியாபாரி.அவர் அப்படி செய்யாமல் போயிருந்தால், அந்த இளைஞனின் தொடர் மிரட்டலுக்கு ஆளாகியிருப்பார் என்றார், காவல்துறை நண்பர்.வாசகர்களே... பொது இடங்களில் எச்சரிக்கையாகவும், நாகரிகமாகவும் நடந்து கொள்வதே சிறந்தது.- மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.ஏமாற்றாதே... ஏமாறாதே!சமீபத்தில், காய்கறி வாங்க கடைக்கு சென்று கொண்டிருந்தேன். வழியில், நீண்ட காலத்திற்கு பின், பெண் உறவினர் ஒருவரை சந்தித்தேன். நலம் விசாரித்தேன். அப்போது, அவர், சாலையின் அருகே இருந்த பள்ளிக்கூடத்தை காட்டி, 'இப்பள்ளியில் தான் நான் கடந்த, 12 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தேன். இது தான் எனக்கு தாய் வீடு. இந்நிலையில் தான், வேலை நிமித்தமாக வெளிநாடு செல்ல பணம் தேவைப்படுவதால், விருப்ப ஓய்வு பெறச்சொல்லி வற்புறுத்தினான், என் ஒரே மகன்.'அவனின் வற்புறுத்தலால், என் வேலையை ராஜினாமா செய்து, அதில் கிடைத்த பணம் முழுவதையும் அவனிடம் கொடுத்தேன். வெளிநாடு சென்றவன், திடீரென ஒருநாள் வீட்டுக்கு வந்து, உன்னையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்றும், வீட்டை விற்று பணத்தை தரும்படி, கூறினான்.'வீட்டை விற்று நான் தந்த பணத்தை வாங்கி கொண்டு, அவன் தன் குடும்பத்துடன் வெளிநாடு சென்று விட்டான். இப்போது வாடகை வீட்டில் வசித்து வருவதோடு, பக்கத்தில் உள்ள வீடுகளில் பாத்திரம் தேய்த்து என் வாழ்க்கையை ஓட்டுகிறேன்.'திரும்ப வந்து உன்னை கூட்டிக்கொண்டு போகிறேன் என்று சொன்னவன் தான்... இன்று வரை வரவில்லை. போனும் செய்வதில்லை. நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்பது காலம் கடந்து தான் எனக்கு புரிந்தது...' என்று மனம் நொந்து என்னிடம் சொல்லி விட்டு, வருத்ததொடு சென்று விட்டார்.அவர் தன் மனச்சுமையை என்னிடம் இறக்கி வைத்துவிட்டு சென்று விட்டார். ஆனால், உறவினரின் மனக்குமுறல், வேதனை, வலி, ஆதங்கம் அனைத்தும் என்னுடனே வந்தது.பிள்ளைகளே... பெற்றோர்களை கைவிடாதீர்கள். அவர்கள் மனம் நொந்தால், நீங்கள் நன்றாக வாழ முடியாது.- செ.சித்தம்மாள், சேலம்.திருட்டு கும்பலின் புதுவித, 'டெக்னிக்!'எங்கள் ஊரில் உள்ள பிரபலமான தங்கும் விடுதியில், மேலாளராக பணிபுரியும் நண்பரை சந்தித்தேன். அப்போது அவருக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.'வரவேற்பறையில் உள்ள புத்தகத்தில், விடுதியில் தங்குபவர் எத்தனை நபர்கள், எத்தனை நாள் தங்கியிருப்பர், அவர்கள் வீட்டு முகவரி மற்றும் அவர்கள் தங்கும் அறை எண், போன்ற விபரங்களை எழுதி வைப்பது வழக்கம். ஒருநாள், அந்த விபரங்களை எழுதி வைத்த புத்தகம் காணாமல் போயிருந்தது.'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, யாரோ ஒரு நபர் விடுதிக்குள் நுழைந்து அதை எடுத்து செல்வது பதிவாகியிருந்தது.'அதை எதற்கு திருடிக்கொண்டு போனான் என்று குழம்பியபடியே, விடுதி உரிமையாளரிடம், திருடுபோன விபரத்தை சொல்லி, புதிய புத்தகம் ஒன்றை வாங்கி வைத்தேன்.'சில நாட்கள் சென்ற பிறகு, எங்கள் விடுதிக்கு போலீஸ் வந்து, அந்த புத்தகம் பற்றி விசாரித்த போதுதான் அது ஏன் காணாமல் போனது என்ற விபரம் தெரிய வந்தது.'குழுவாக இயங்கும் திருட்டு கும்பல் ஒன்று, விடுதிகளில் தங்கும் நபர்களை பற்றிய விபரங்களை எழுதியிருக்கும் நோட்டு புத்தகத்தை திருடி, அதில் குடும்பத்தினரோடு தங்கியுள்ளவர்களின் முகவரியை மட்டும் புத்தகத்திலிருந்து தேடி எடுத்து, திருட்டு கும்பல் குழுவில் உள்ளவனிடம் கொடுத்து அந்த முகவரியில் உள்ள வீட்டில் நகை மற்றும் பணத்தை திருட அனுப்புவது வழக்கமாக இருந்துள்ளது.'அந்த முகவரியில் உள்ள வீட்டில் திருட போனவனை, அங்கிருந்தவர்கள் பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைக்க, போலீஸ் அவனிடம் விசாரித்த போதுதான், இந்த விபரங்கள் தெரியவந்தன.'அதன்பின், விடுதியில் தங்குபவர்கள் விபரங்களை புத்தகத்தில் எழுதாமல், கணினியில் பதிய துவங்கியுள்ளோம்...' என்றார்.வெளியூர் சென்று தங்கி இருப்பவர்களை அறிந்து, திருடர்கள் கைவரிசை காட்டுவதை தவிர்க்க, இனி எல்லா விடுதிகளிலுமே கணினியில் வாடிக்கையாளர்கள் விபரங்களை பதியலாமே!- டி.எல்.குமார், விழுப்புரம்.தாலாட்டு பாடலை இப்படியும் பாடலாமே!சமீபத்தில், என் உறவினரை காண அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர்கள் வீட்டில் இருந்த, இரண்டு வயது குழந்தையை உறங்க வைக்க, மிகவும் புதுமையான முறையை பின்பற்றினர்.பொதுவாக குழந்தைகளை உறங்க வைக்க, 'கண்ணே, மணியே... நீ உறங்கு...' என்றும், 'யார் அடிச்சா, நீ அழுத...' என்று அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் விதத்தில் தாலாட்டு பாடுவதுண்டு.இதற்கு சற்று மாறாக, அந்த வீட்டு பாட்டி பாடிய தாலாட்டு, குழந்தையை குறித்து, நல்ல சொற்கள் கூறி வாழ்த்தி, சிறப்பாக பாடி உறங்க வைத்தார்.அதுபற்றி விசாரித்தபோது, குழந்தை நல மருத்துவர் ஒருவரின் அறிவுரைப்படி செய்ததாக கூறினார்.தாலாட்டுப் பாட்டில் குழந்தையின் பெயரை சொல்லி, 'நீ சிறந்த மனிதன் வாழ்க வளமுடன்... அன்பில் சிறந்தவன், ஆரோக்கியமானவன், பண்பானவன், பொறுமையானவன்...' என, பல நல்ல வார்த்தைகளை பயன்படுத்தி வாழ்த்தி, தினமும் அவன் துாங்கும்போது இவ்வழக்கத்தை பின்பற்றுவதாக கூறினார்.எழும்போது, 'காலை வணக்கம், இன்று இனிய நாள்' என்று வாழ்த்துவதை போல், உறங்கும்போது நாம் கூறும் வார்த்தை, குழந்தையின் ஆழ்மனதில் பதிந்து அவர்களை மேம்படுத்தும் என்ற நேர்மறை சிந்தனை புதுமையாகவும், போற்றத்தக்கதுமாக தோன்றியது.- மு.அபிராமி சூர்யா, உத்தமபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Hanuman
பிப் 15, 2026 15:41

For Sithammal Salem, go to colloctor office, report about happened at you by your son, the collector can take action, arrest his son who living anywhere, in the world, through Indian Embassy, return the money from his son, it is 100 percent possible