இது உங்கள் இடம்!
விழிப்புணர்வை ஏற்படுத்திய பூதக் கண்ணாடி!என் தோழி, தன் கைப்பையில் ஒரு சிறிய பூதக் கண்ணாடி வைத்திருப்பதைப் பார்த்தேன். எதற்கு இதை வைத்திருக்கிறாய் என்று கேட்டேன். அதற்கு அவள், 'சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க போகும் போது, அவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, ஒவ்வாமை எச்சரிக்கைகள், பயன்படுத்தும் முறை போன்ற முக்கிய தகவல்கள் அனைத்தும் மிகச் சிறிய எழுத்துகளில் அச்சிடப்பட்டிருக்கின்றன. அவற்றை படிக்க கடினமாக உள்ளது; படிக்காமல் வாங்குவதும் ஆபத்து என்பதால், இப்போதெல்லாம் பூதக் கண்ணாடியால், தெளிவாகப் படித்து பொருட்களை வாங்குகிறேன். 'மேலும், நாம் வாங்கும் இருமல் மருந்து மற்றும் மாத்திரைகளிலும் காலாவதி தேதி மிக மிக சிறிய எழுத்திலேயே அச்சிடப்பட்டிருக்கின்றன; அதையும் படித்து அறிந்து கொள்ள இந்த பூதக் கண்ணாடியை பயன்படுத்துகிறேன்...' என்றாள். அவள் கூறியது, என்னை சிந்திக்க வைத்தது. நாமும் விளம்பரங்களை பார்த்து பல பொருட்களை வாங்குகிறோம்; ஆனால், அவற்றில் இருக்கும் முக்கிய எச்சரிக்கைகளை படிக்க மறந்து விடுகிறோம். இப்போது, நானும் ஒரு சிறிய பூதக் கண்ணாடி வாங்கி, அதை கடைக்குச் செல்லும் போதெல்லாம் எடுத்துச் சென்று, நான் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் உள்ள தகவல்களை படித்து உறுதிப்படுத்திய பிறகே பொருட்களை வாங்குகிறேன். சிறிய பூதக் கண்ணாடி, பெரிய விழிப்புணர்வை எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. - பே.ராமலட்சுமி ராஜபாளையம்பொதுப் பிரச்னைகளைப் பார்த்தும் கடந்து செல்லாதீர்!எங்கள் தெருவில் வசிக்கும் வயதான பாட்டி, அவருடைய வீட்டிலிருந்து வெளியே வரும்போது, நடைபாதையில் வழுக்கி விழுந்துவிட்டார். விசாரித்த போது, அவர் வீட்டின் முன், மழை நீர் தேங்கி, பாசி படிந்திருந்ததால் வழுக்கிவிட்டிருந்தது தெரியவந்தது. அந்த இடத்தை பயன்படுத்தும் அனைவருக்கும், அங்கு பாசி படிந்திருப்பது தெரிந்திருந்தும், அதை யாரும் சுத்தம் செய்ய முன்வரவில்லை. இதையடுத்து, எங்கள் தெருவில் உள்ள சில இளைஞர்கள் ஒன்றுகூடி, அந்தப் பாசியை அகற்றினர். அத்துடன், வீடுகளின் முன்பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்கள், உடைந்த நடைபாதைகள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், மூடப்படாமல் இருக்கும் கழிவுநீர் கால்வாய்கள், சேதமடைந்த மின்கம்பங்கள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து, அதை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் கொடுத்து புகார் அளித்தனர். அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுத்து, பிரச்னைகளைச் சரி செய்தனர். நம்மை சுற்றியுள்ள பொதுப் பிரச்னைகளை பார்த்தும், 'நமக்கென்ன?' என்று கடந்து செல்லாமல், உரியவர்களிடம் தெரிவிப்பது கூட, ஒருவகையில் சமூகக் கடமை தான். - வெ.பாலமுருகன், திருச்சி.வேலையில்லை என்று கவலைப்படாதீர்!எங்கள் தெருவிலுள்ள நான்கு இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு, வேலையில்லாமல் சிரமப்பட்டனர். அவர்களுக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுக்கலாம் என்ற எண்ணத்தில், 'எனக்கு தெரிந்த கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில், மின் இணைப்பு 'வயரிங்' வேலைக்கு ஆட்கள் தேவை, உங்களை அங்கு சேர்த்து விடுகிறேன், அந்த வேலைக்கு போகிறீர்களா...' என்று கேட்டேன். நான்கு இளைஞர்களும் கூடிப்பேசி, வேலைக்கு போக சம்மதம் தெரிவிக்க, வேலையில் சேர்த்து விட்டேன். அடுத்த நாள், வேலை முடிந்து வந்தவர்களிடம், வேலைக்கு போன அனுபவம் பற்றி கேட்டேன். அதற்கு, 'பட்டப்படிப்பு படித்துவிட்டு அதற்கு ஏற்ற வேலையை செய்யாமல், இந்த வேலையை செய்வதற்கு வருத்தமாக உள்ளது...' என்றனர். அதற்கு, நான், 'இந்த வேலையும் இல்லையென்றால் என்ன செய்வீர்கள். வேறு வேலை கிடைக்கும் வரை, ஒரே ஒரு மாதம் இந்த வேலைக்கு போய் வாருங்கள். அடுத்த மாதம் இதே தேதியில் உங்களை சந்திக்கிறேன். அப்போதும் இந்த வேலை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், வேறு வேலைக்கு முயற்சிக்கலாம்...' என்றேன். சிறிது நேரம் யோசித்து, வேலை எதுவும் இல்லாமல் சும்மா இருப்பதைவிட, இந்த வேலையை செய்வதாக ஒப்புக்கொண்டனர். ஒரு மாதத்திற்குப் பின், அவர்களை சந்தித்தேன், அன்று, தங்கள் முதல் மாத சம்பளத்தை, பெற்றோரிடம் கொடுத்து, அவர்களது பாராட்டை பெற்று மகிழ்ச்சியாக காணப்பட்டனர். தங்களுக்கு இந்த வேலை மிகவும் பிடித்துவிட்டதாகவும் அவர்களுக்கு வேலை கொடுத்த, 'எலக்ட்ரீஷியனிடம்' மின்சார வேலையை நன்கு கற்று, பெரிய அளவில் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தனர். ஊக்கத்துடன் உழைக்கும் அவர்களை, வாழ்த்தினேன். - எம்.ஈஸ்வர், சென்னை.நெகிழ வைத்த நிகழ்வு!என் நண்பரின் தந்தை, அரசு பணியில் இருந்து சமீபத்தில், ஓய்வு பெற்றார். அவரை கவுரவிக்கும் வகையில், அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள், ஒரு திருமண மண்டபத்தில், பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில், நண்பரின் தந்தைக்கு வெள்ளியால் ஆன குத்துவிளக்கும், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும் பரிசளித்தனர்.அவற்றை பெற்றுக்கொண்ட என் நண்பரின் தந்தை, 'எனக்கு நீங்கள் அளித்த பணத்தில், 50 ஆயிரம் ரூபாயை அனாதை இல்லத்திற்கும், மீதமுள்ள பணத்தில், கிராமத்தில் நான் படித்த பள்ளிக்கூடத்தை பராமரிக்கவும், வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவவும் இந்த பணத்தை கொடுக்கப் போகிறேன். இன்று நான் இந்த உயர்ந்த நிலைக்கு வர, நான் படித்த பள்ளி தான் காரணம். அதற்கு நன்றி கடனாக இதை கொடுக்க விரும்புகிறேன். மேலும், நான் பிறந்த கிராமத்தில், 500 மரக்கன்றுகளை நட்டு, 'பசுமை வனம்' ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன்...' என்றார்.இதைக் கேட்டதும் அரங்கில் பலத்த கைத்தட்டல் ஓசை எழுந்தது.பணி ஓய்வின் போது கிடைத்த பணத்தை, தன் ஓய்வு காலத்திற்கு வேண்டும் என, எண்ணாமல் தான் படித்த பள்ளிக்கு உதவிய என் நண்பரின் தந்தையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.டி.சுதாகர், ராமநாதபுரம்.