கவிதைச்சோலை: வாழ்த்தப்படும் உணர்வுகள்!
செதுக்கப்படும் பாறைகள் தான் கலைவடிவம் பெறுகின்றன... தீட்டப்படும் வைரங்கள் தான் விலைமதிப்பில் கூடுகின்றன! மதிக்கப்படும் சிந்தனைகள் தான் புதுமைகளைப் படைக்கின்றன... துதிக்கப்படும் நற்குணங்கள் தான் மனிதநேயத்தை வளர்க்கின்றன! மட்க வைக்கப்படும் குப்பைகள் தான் பயிர்களுக்கு உரமாகின்றன... பண்படுத்தப்படும் வயல்கள் தான் விளைவிக்க உதவுகின்றன! திட்டமிடப்படும் செயல்கள் தான் வெற்றிகளை குவிக்கின்றன... பாராட்டப்படும் காரியங்கள் தான் முன்னிலையில் நிற்கின்றன! அவிக்கப்படும் அரிசிகள் தான் அன்னமாய் மலர்கின்றன... விதைக்கப்படும் விதைகள் தான் வேர்விட்டு வளர்கின்றன! காக்கப்படும் பழமைகள் தான் பண்பாட்டை உரைக்கின்றன... போற்றப்படும் புரட்சிகள் தான் நல்ல மாற்றம் சமைக்கின்றன! திறக்கப்படும் கதவுகள் தான் வெளியுலகம் காட்டுகின்றன... ஏற்கப்படும் அறிவுரைகள் தான் நற்பெயரை ஈட்டுகின்றன! வணங்கப்படும் எண்ணங்கள் தான் மனிதரை தெய்வமாக்குகின்றன... வாழ்த்தப்படும் உணர்வுகள் தான் அழியாப்புகழைப் பெறுகின்றன! - மு.நந்தனா, பனையபுரம்,விழுப்புரம்.