உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (18)

வளர்ப்பு மகன் திருமணத்தில் வருத்தப்பட்ட சிவாஜி!மு ன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன், சுதாகரன், சிவாஜியின் பேத்தி, சத்தியலட்சுமி திருமணத்துக்கு கட்டாயம் வர வேண்டும் என, என்னை அழைத்திருந்தார், சிவாஜி. அந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காகவே, அமெரிக்காவிலிருந்து சென்னை வந்தேன். சிவாஜியின் குடும்ப நண்பரும், இந்த தொடரின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட சிங்கப்பூர் துரையுடன், திருமணத்துக்கு சென்றேன். பிரமாண்ட திருமணம். பிரமாண்ட கூட்டம். உள்ளே நுழைவதற்கே சிரமப்பட வேண்டியிருந்தது. சிரமப்பட்டு உள்ளே சென்றால், எங்களால் மணமேடையை நெருங்க முடியவில்லை. கூட்டம் நிரம்பி வழிந்தது. மணமக்களுக்கு சற்றுதள்ளி அமர்ந்திருந்த, சிவாஜியின் அருகில் கூட செல்ல முடியாத சூழ்நிலை. அந்த கூட்டத்திலும் சிவாஜியின் கண்கள், எங்களை கவனித்து விட்டன. அவர் பார்த்து விட்டார் என, நாங்களும் புரிந்து கொண்டோம். அவ்வளவு தான். எங்களால் அதற்கு மேல் நகர முடியவில்லை. பெரிய ஏமாற்றம். ஆனாலும், சூழலைப் புரிந்து வீடு திரும்பி விட்டோம். அன்று மாலை எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், அடுத்தநாள் காலை, நாங்கள் எதிர்பார்க்காத ஒரு இன்ப அதிர்ச்சி எங்களுக்கு காத்திருந்தது. மறுநாள் காலை, 8:30 மணி இருக்கும். எங்கள் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தால், சிவாஜி நிற்கிறார். மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி! நாங்கள் ஆச்சர்ய அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தோம். பேசுவதற்கு கூட முடியவில்லை. 'வாங்க, வாங்க...' என, வரவேற்றோம். உள்ளே வந்து ஹாலில் அமர்ந்தார். 'சொல்லி இருந்தா நானே உங்க வீட்டுக்கு வந்து பார்த்திருப்பேனே... எதற்காக சிரமப்பட்டு இத்தனை துாரம் வந்தீங்க?' என, பதற்றத்துடன் கேட்டேன், நான். 'என்னை நீங்க மன்னிக்கணும்...' என, ஆரம்பித்தார்... 'நேத்து என் பேத்தி கல்யாணத்துல உங்களை சரியா கவனிக்க முடியல. நான் தான் நீங்க கண்டிப்பா வரணும்ன்னு அழைச்சேன். நான் சொன்னதை மதிச்சு நீங்களும், அமெரிக்காவுலருந்து வந்தீங்க. ஆனா, என்னால உங்களை வரவேற்று உபசரிக்க முடியல. நீங்க என்னை மன்னிக்கணும்...' என, ரொம்ப உருக்கமாக சொன்னார், சிவாஜி; என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார். 'அப்படியெல்லாம் எதுவுமில்லை. பிரமாண்டமான கல்யாணம், ஆயிரக்கணக்கில் விருந்தினர்கள். உங்களால என்ன செய்ய முடியும்? நேத்து நாங்களே நேர்ல பார்த்தோமே. நாங்க எதுவும் தப்பா எடுத்துக்கல. நீங்க இப்படி மனசு வருத்தப்படறது தான் எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. தயவு செய்து இப்படிலாம் பேசாதீங்க...' என்றேன். 'என்ன இருந்தாலும், நீங்க என்னோட விருந்தாளி. உங்களை உபசரிக்க முடியாம போயிடுச்சேன்னு, எனக்கு ரொம்ப வருத்தம்...' என, மீண்டும் சொன்னார். அவர் ஆழ்மனதிலிருந்து வந்த வார்த்தைகள், என்னை நெகிழச் செய்தது. எனக்கு ஒரு போன் செய்து, 'கல்யாணத்தில் உங்கள சரியாக கவனிக்க முடியவில்லை, தவறாக எடுத்துக்காதீங்க...' என, சொல்லி இருந்தால் கூட, அதையே ஒரு பெரிய விஷயமாக நினைத்து வியந்திருப்பேன். ஆனால், சிவாஜி அதற்கும் ஒருபடி மேலே போய், மறுநாள் காலையிலேயே என் வீடு தேடி வந்து, 'மன்னித்து விடுங்கள்' என, பெரிய வார்த்தையெல்லாம் சொன்னது, என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை. சிவாஜி, எத்தனை அற்புதமான மனிதர் என, எனக்கு புரிந்தது; உங்களுக்கும் புரிந்திருக்கும். என்னை மட்டுமில்லை. திருமணத்துக்கு வந்திருந்த தன்னுடைய உறவினர்கள் பலரையும் அவரால் தனிப்பட்ட முறையில் உபசரிக்க முடியாமல் போய்விட்டது என்பதையும், வருத்தத்துடன் சொன்னார். க மலா அம்மா ஒருமுறை, என்னிடம் சொன்ன விஷயம் இது: மாமாவுக்கு (சிவாஜிக்கு) பிள்ளைகள் மீது ரொம்ப பாசம் என்றாலும், மூத்தமகள் சாந்தி என்றாலே அவருக்கு ரொம்ப ஸ்பெஷல் தான். எதை எடுத்தாலும் அவருக்கு சாந்தி தான். வீட்டில் எந்த ஒரு விஷயம் என்றாலும், 'சாந்திக்கு சொல்லிட்டியா? சாந்திக்கு குடுத்திட்டியா?' என, தவறாமல் கேட்பார். அதேபோல, சாந்தி என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வார். எனக்கே மாமாவிடம் ஏதாவது வேண்டும் என்றால், சாந்தி மூலம் தான் கேட்பேன். சாந்தி சொன்னால், உடனே சம்மதம் சொல்லி விடுவார் மாமா என, அப்பா - மகள் பிணைப்பு குறித்து, கமலா அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். சிவாஜிக்கு தன்னுடைய பிள்ளைகள் ராம்குமார், பிரபுவை போலவே, தன் தம்பி சண்முகத்தின் மகன், கிரி மீதும் பாசம் அதிகம். ஒருமுறை சிவாஜி, அமெரிக்காவுக்கு வந்த போது கிரியும், அவரது மனைவியும், சிவாஜி தம்பதியுடன் வந்திருந்தனர். அக்கறையோடு, சிவாஜியை கவனித்துக் கொண்டனர். ராம்குமாருக்கு கே.எப்.சி., சிக்கன் என்றால், ரொம்பப் பிடிக்கும் என்பதை அறிந்து, அவருக்காக, கே.எப்.சி.,யில் இருந்து சிக்கன், 'ஆர்டர்' செய்தோம். அப்போது, சிவாஜி, 'கே.எப்.சி., சிக்கன்னா ராம்குமார் ரொம்ப பிரியமா சாப்பிடுவான். கொஞ்சம் கூடவே, 'ஆர்டர்' பண்ணுங்க...' என்றார். மகன் மீது அவர் கொண்டிருந்த பாசம், சிக்கனில் வெளிப்பட்டது. அ மெரிக்காவில் சிவாஜிக்கு பிடிக்காத விஷயம், 'ஷாப்பிங்' போவது. அதில், துளிகூட ஆர்வம் கிடையாது. ஆனால், அவருடன் வரும், கமலா அம்மாவுக்கு மற்றவர்களுக்கும், 'ஷாப்பிங்' போவதில் ஆர்வம் அதிகம். பெரிதாய் பொருட்கள் வாங்காவிட்டாலும், கடைகளை சுற்றிப் பார்ப்பது அவர்களுக்கு பிடித்த விஷயம். ஆனால், 'கண்டிப்பாக நோ ஷாப்பிங்...' என, உத்தரவு போட்டு விடுவார், சிவாஜி. அதற்கு முக்கியமான காரணம், எப்போதும் கமலா அம்மா, தன் அருகிலேயே இருக்க வேண்டும் என, நினைப்பார், சிவாஜி. ஆனால், கமலா அம்மாவுக்கு ஒரு தடவையாவது, 'ஷாப்பிங்' போய் விட்டு வந்து விட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவரும், என் தங்கை கிருஷ்ணாவும், இது பற்றிப் பேசி, 'ஷாப்பிங்' போக ஒரு திட்டம் போட்டனர். காலை, சிவாஜி எழுந்து, குளித்து தயாராகி, காலை சிற்றுண்டி சாப்பிடுவதற்காக சாப்பாட்டு அறைக்கு வருவதற்கு முன்பாகவே, 'ஷாப்பிங்' போய் விட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்துவிட வேண்டும் என்பது, அவர்களுடைய திட்டம். வழக்கமான, 'ஷாப்பிங் மால்'கள், கடைகள் எல்லாம் காலையில் திறப்பதற்கு நேரமாகும் என்பதால், 24 மணி நேரமும் திறந்திருக்கும், 'ஷாப்பிங் மாலு'க்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படியே அதிகாலையிலேயே எழுந்து குளித்து தயாராகி, கமலா அம்மாவும், கிருஷ்ணாவும், 'ஷாப்பிங்' செய்யப் புறப்பட்டனர். ஜாலியாக, 'ஷாப்பிங்'கை முடித்து விட்டு, வீடு திரும்பினர். வாங்கிய ஐட்டங்கள் கொண்ட பெரிய பைகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தால், ஒரு வேளை சிவாஜியின் கண்களில் பட்டுவிட்டால் பிரச்னையாகி விடுமே என, பெரிய பைகளை எல்லாம் காரிலேயே வைத்து விட்டு, ஒன்றிரண்டு சிறிய பைகளோடு வீட்டுக்குள்ளே வந்தனர். ஆனாலும், சிவாஜியிடம் மாட்டிக் கொண்டனர். எப்படி? அடுத்த வாரம் பார்ப்போம். — தொடரும். எஸ். சந்திரமவுலி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !