அன்புடன் அந்தரங்கம்!
அன்பு சகோதரிக்கு, நான், 40 வயது பெண். கணவர் வயது: 45. மத்திய அரசு பணியில் உயரதிகாரியாக பணிபுரிகிறார். எங்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இரு பிள்ளைகளும் படித்து, ‘ஸ்டார்ட்–அப்’ நிறுவனம் நடத்தி வருகின்றனர். எனக்கு, கர்ப்பப்பை பிரச்னை இருந்ததால், வீட்டு வேலை செய்வதற்கும், என்னை கவனித்துக்கொள்ளவும், 35–30 வயதுள்ள கணவன்–மனைவியை நியமித்தோம். வீட்டு வேலைகளை பொறுப்பாக கவனித்து கொண்டனர். கணவரும், மகன்களும் ஏதாவது வேண்டுமென்றால், அவர்களிடமே சொல்லி, வேலை வாங்கிக் கொண்டனர். இவர்களும், அவரவருக்கு ஏற்றபடி பொறுப்பாக நடந்து கொண்டனர். நான் மட்டுமே, அவர்களை எதிர்பார்க்காமல், என் வேலைகளை நானே செய்து, குடும்ப நிர்வாகத்தையும் என் கையில் வைத்திருக்கிறேன். நாளடைவில், அந்த இருவரும், தங்களை முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக ஆக்கிக் கொண்டனர். என்னிடம் அன்பொழுக பேசியும், என் கணவரிடம் நெருங்கி பழகவும் ஆரம்பித்து இருக்கிறாள், அந்த பெண். பெண்களிடம் இரக்க குணம் கொண்டவர், என் கணவர். அதை பயன்படுத்தி, என் கணவரை கைக்குள் போட்டு கொண்டாள், அப்பெண். எனக்கு சந்தேகம் வராதபடி, சாமர்த்தியமாக என்னை ஏமாற்றியுள்ளனர். என் கணவர் மீதுள்ள நம்பிக்கையால், நானும் சந்தேகப்படவில்லை. வீட்டுக்கு வந்த உறவினர் சிலர், இதை ஜாடை மாடையாக தெரிவித்தனர். நான், அப்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மகன்கள், பிசினஸில் கவனமாக இருந்து விட்டனர். அலுவலக வேலையை காரணம் காட்டி, வெளியூரில் நடக்கும் விசேஷங்களுக்கும், உறவினர் வீட்டு விழாக்களுக்கும் என்னை தனியாக அனுப்ப ஆரம்பித்தார், என் கணவர். நான் இல்லாத நேரத்தில், அப்பெண்ணுக்கும், என் கணவருக்கும் தகாத உறவு ஏற்பட்டிருக்கிறது. இது, அவள் கணவனுக்கு தெரிந்தும், அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. எனக்கு சந்தேகம் வலுத்து, ஊர்ஜிதப்படுத்தி கொள்ள தொடர்ந்து கண்காணித்து, கணவரிடம் கேட்டபோது, மழுப்பலான பதில் சொன்னார். அந்த பெண்ணையும், அவள் கணவரையும் வேலையிலிருந்து நிறுத்தினேன். உடனே, என் கணவர், என் மீது ஆத்திரமடைந்து, என்னை அசிங்கமாக திட்டி, அப்பெண்ணையும், அவள் கணவரையும் வேறு இடத்தில், வாடகைக்கு வீடு பார்த்து கொடுத்து விட்டார். என் உறவினர்களை வைத்து, என் கணவரிடம் பேசியபோது, ‘தனக்கும், அந்த பெண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை. திடீரென வேலையிலிருந்து நிறுத்தியதால், அவர்கள் எங்கே செல்வர். அதனால்தான், வீடு பார்த்து கொடுத்தேன்; இனி அவர்கள் பாடு...’ என்று கூறிவிட்டார். ஆனாலும், இன்னும் அவளுடன் தொடர்பு வைத்துள்ளார். என் கணவர், அடிக்கடி அப்பெண் வீட்டுக்கு சென்று வருவதாக, வேறொரு பணிப்பெண் என்னிடம் ஆதாரத்துடன் கூறி விட்டாள். கணவரிடம் கேட்டால், என்னையே கேவலமாக பேசுகிறார். தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக, அப்பெண்ணுக்கு அதிக இடம் கொடுத்துவிட்டு, இப்போது, மன நிம்மதியில்லாமல் தவிக்கிறேன். இந்த விஷயம் எதுவும், என் மகன்களுக்கு தெரியாது. இந்த நிலை நீடித்தால், எனக்கு பைத்தியம் பிடித்து விடும். நான், சந்தேகப்பட்டு கேள்வி கேட்கிறேன் என்பதால், என்னுடன் சரியாக பேசாமலும், கடமையே என்று வந்து போய் கொண்டிருக்கிறார், கணவர். கணவரை நல்வழியில் திருப்ப நான் என்ன செய்ய வேண்டும், சகோதரி. –இப்படிக்கு, உங்கள் சகோதரி. அன்பு சகோதரிக்கு, வறுமையின் காரணமாக பணிப்பெண்ணின் கணவரும், தன் மனைவியின் திருட்டு வேலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார். உன் கணவனின் திருவிளையாடல், உன் மகன்களுக்கு தெரியாது என, நீ நினைப்பது மடமை. அப்பாவும் ஆண். மகன்களும், ஆண் வர்க்கம் தான். ஆணாதிக்க அட்டூழியங்களுக்கு மவுன ஆதரவு அளிக்கின்றனர், உன் மகன்கள்...அவ்வளவே! மிடில் கிளாஸ் ஆண்களுக்கு எப்போதுமே இரண்டு என்ற எண்ணின் மீது சபலம் உண்டு. மனைவி ஒன்று, அதிகாரப்பூர்வமற்ற தொடர்பு மற்றொன்று. ஊரெல்லாம் இந்த வகை ஆண்கள் சுற்றி திரிந்தாலும், கூடடைவது வீட்டில் தான். எனக்குத் தெரிந்த ஒரு பெண், நாலடி உயரம்தான் இருப்பாள். கணவன், மலையாள நடிகர், நிவின்பாலி போல அம்சமாக இருப்பான். கணவன் கொஞ்சநாள் நான் இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கப்போறேன், இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் என, உருட்டிக்கொண்டிருந்தான். அதிகாலை 5:00 மணிக்கே எழுந்து, வீட்டுவேலையைப் பார்ப்பாள். அவர்களுக்கு பிறந்த, மூன்று மகன்களை அன்பாய், கவனமாய் பராமரிப்பாள். ஐந்தே ஆண்டில், கணவன், இரு மகன்கள் மற்றும் வீட்டையும் தன் முழுகட்டுபாட்டில் கொண்டுவந்து விட்டாள். கணவனின் இரண்டாம் கல்யாண பேச்சு போயே போச்சு. இனி, நீ செய்ய வேண்டியது என்ன என்று பார்ப்போம்... உறவினர்களை வைத்து, அந்த பணிப்பெண்ணை வாடகை வீட்டிலிருந்து துரத்தியடி. உன் மகன்களுக்கு விஷயம் தெரிந்திருந்தாலும், நீ நேரடியாக விஷயத்தை உருக்கமாக கூறி, உன் கணவனை கண்டிக்கச் சொல். பணிப்பெண் மற்றும் அவளது கணவனின், ‘கிரிமினல்’ பின்னணியை ஆள் வைத்து உளவறி. அப்படி ஒரு, ‘கிரிமினல்’ பின்னணி இருந்தால், அவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடு. பணிப்பெண்ணுடன் உறவைத் தொடர்ந்தால், உங்களிடமிருந்து விவாகரத்து பெற்று, என் மகன்களுடன் தனியே போய் விடுவேன் என, மிரட்டு. வீட்டுக்குள் கணவன் நுழைந்தால், மனஉளைச்சல் கொடு. மனைவி ஒரு புள்ளைபூச்சியல்ல, அவள் ஒரு கருந்தேள் என, உணர்ந்து ஒடுங்குவான் உன் கணவன். உள்ளிருப்பு ஒத்துழையாமை இயக்கம் நடத்து. மனைவி பெரிய அளவில் எதிர்ப்பு காட்டமாட்டாள், நாம் மன்மத லீலையைத் தொடர்வோம் என, மனப்பால் குடித்த கணவனுக்கு, அஹிம்சா முறையில் நரகத்தைக் காட்டு; உன் காலடியில் விழுவான், உன் கணவன். –-என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத். ‘‘தலைவர் வாக்காளர்களை கவரும் வகையில் பிரசாரம் பண்றாரா, எப்படி?’’ ‘‘அவரை ஜெயிக்க வைத்தால், தன் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் ஒரு இடைத்தேர்தல் நடத்தி, வாக்காளர்களுக்கு பணம் கிடைக்கவும் பாடுபடுவாராம்!’’ – அ.கதிர்வேல், திருவாரூர். ‘‘நான், மது அருந்திவிட்டு வீட்டுக்கு போனாலே என் மனைவி என்னை நச்சரிக்க ஆரம்பிச்சுடுவா!’’ ‘‘குடிக்கறதை விடச் சொல்லி சண்டை போடுவாங்களா...’’ ‘‘பக்கத்து வீட்டு பிள்ளைகளுக்கு இங்கிலீஷ் ‘டியூஷன்’ எடுத்து சம்பாதிக்கும்படி நச்சரிப்பா!’’ – ஜி.சுந்தர்ராஜன், திருத்தங்கல். ‘‘மூணு மணி நேரமா ஒரே ‘டாஸ்மாக் பார்’ல திரும்பத் திரும்ப வந்து குடிச்சுக் கிட்டே இருக்கியே... ஏன்?’’ ‘‘வெளியே, ‘நன்றி மீண்டும் வருக’ன்னு எழுதி வெச்சிருக்கே!’’ – எம்.பி.தினேஷ், இடையர்பாளையம். @block_B@தன்னம்பிக்கையே, துன்பத்தால் ஏற்படும் துயரங்களைப் போக்கவல்லது.மூர்@@block_B@@ @block_B@தன்னைத்தானே ஆட்சி செலுத்தாதவனை மற்றவர்கள் ஆட்சி செய்வர்.லாங்பெல்லோ@@block_B@@