போனால் போகட்டும் விடு!
முள் மேல் அமர்ந்திருப்பது போல் இருந்தது, லட்சுமிக்கு. 'கிளம்பும் நேரத்தில் ஏன் தான் இப்படி, 'மீட்டிங்' வைச்சு கழுத்தறுக்கறாங்கன்னு தெரியலையே... கடவுளே, இது முடிஞ்சதும், நடந்து, காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் போய் பஸ்சை பிடிச்சு, வடவள்ளி போறதுக்குள்ள வீட்டில் என்ன கந்தரகோலம் ஆகுமோ சாமி...' அவள் முகத்தில் கவலை ரேகைகள் ஓடின.அதை கண்டு, 'நான் இருக்கேன் கவலைப்படாதே...' என, பக்கத்தில் அமர்ந்திருந்த, கீர்த்தனா, லட்சுமியின் கைகளை ஆதரவாக பிடித்து அழுத்தினாள்.அக்கவுன்ட்ஸ் ஆபீஸர் சொல்வது எதுவும், லட்சுமிக்கு காதில் விழவில்லை; புரியவும் இல்லை. 'மீட்டிங்' முடிந்ததற்கு அடையாளமாக அனைவரும் எழ, பரபரவென தன் கைப்பையை எடுத்து நடந்தாள், லட்சுமி. கீர்த்தனாவும், அவளுக்கு இணையாக ஓடி வந்தாள்.''லட்சுமி, ஏன் இப்படி கவலைப்பட்டு ஓடற. குழந்தையை பார்த்துக்க, மாமியார் வீட்டில் இருக்காங்கல்ல. 'டூ வீலரில்' உன்னை சாயிபாபா காலனியில் விடறேன். அங்கிருந்து, நீ பஸ்சில் போயிடு,'' என்றாள், கீர்த்தனா. ''இது, வேற விவகாரம் கீர்த்தி. மாமியாரோ, குழந்தையோ பிரச்னை இல்லை. என் புருஷன் தான்,'' என்றவள், மேல கூற தயங்கி, நிறுத்தினாள். ''சரிம்மா கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது. வா, வண்டியில் ஏறு,'' என்று கூறி, ஸ்கூட்டியை இயக்கினாள், கீர்த்தனா. கோவையின் கடுமையான மாலை நேர போக்குவரத்து நெரிசலில் லாவகமாக, 'டூ வீலரை' ஓட்டினாள், கீர்த்தனா. லட்சுமியும், கீர்த்தனாவும் பள்ளிப் பருவத்திலிருந்தே தோழிகள். இருவருக்கும் ஒரே அரசு அலுவலகத்தில் வேலை கிடைக்க, அந்த தோழமை இன்னும் நெருக்கமாகியது. சாயிபாபா காலனி புளிய மரத்து ஸ்டாப்பில், லட்சுமியை, 70ம் நம்பர் பஸ்சில் ஏற்றி, ''பார்த்து போடி,'' என்று கூறி, தன் வீட்டுக்கு பறந்தாள், கீர்த்தனா. பஸ்சில் கூட்டம் நெரித்தது. லட்சுமிக்கு மனமும், உடலும் பறந்தது.'பெண்களின் சிரமத்தை சிறிதும் மதிக்க தெரியாதவருடன் வாழ்வது ஒரு வாழ்க்கையா...' மனம் வேதனைப்பட்டது. ஒரு வழியாக, ஸ்ரீ ஆனந்தாஸ் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ஓட்டமும், நடையுமாக, வீட்டுக்கு விரைந்தாள். இரவு மணி, 7:15 - வீட்டினுள் நுழைந்தவளை, ''என்ன, மகாராணிக்கு வீட்டுக்கு வர வழி இப்பதான் தெரிஞ்சுதாக்கும். இன்னைக்கும், கிளம்புற நேரத்துல, 'மீட்டிங்' வைச்சுட்டாங்களாக்கும்,'' என்று கேலியாக கேட்டான், முகுந்தன்.''நீங்க, கேலியா கேட்டாலும் அதுதாங்க உண்மை,'' என்று பதிலளித்தபடி, குளியலறைக்குச் சென்று கை, கால், முகம் கழுவி வெளியே வந்தாள், லட்சுமி.''ஓ... அப்போ, உன்னை அலுங்கமா குலுங்காம, வீட்டில் கொண்டு வந்து விட்டது யாரு... மேனேஜரா, அக்கவுன்டட்டா?'' என்று, வார்த்தைகளால் கொத்தினான். பதிலேதும் கூறாமல் சமையலறைக்கு செல்ல இருந்தவளை தடுத்து, ''என்ன திமிரா, பதிலே சொல்லாம போற,'' என்றான், கடு கடு முகத்துடன். ''ஆமாம்டா, அவ எது சொன்னாலும் நீ நம்ப போறதில்லை. அவள் ஏன் சக்தியை வீணாக்கணும்,'' என்றார், பேத்தியை இடுப்பில் வைத்திருந்த, முகுந்தனின் அம்மா. ''எல்லாம் நீ கொடுக்கிற இடம்மா. அதான் இவ இப்படி இருக்குறா,'' என்றான்.''அத்தை, நீங்க எதுவும் பேச வேண்டாம். இந்தாங்க, இதுல பஸ் டிக்கெட், போன் இருக்குது. 'சாயிபாபா காலனி வரைக்கும், 'டிராப்' செய்தா போதுமா'ன்னு, கீர்த்தனா கேட்டாள். நான் டிபன் வேலையை பார்க்கிறேன்,'' என்று கூறி, அவன் கைகளில் தன் கைப்பையை திணித்து, சமையல் அறையில் நுழைந்தாள். துரத்தி துரத்தி காதலித்த காதலன், மணமாகி கணவன் ஆனதும், இப்படி மாறி விட்டானே! திருமணமான புதிதில், இவள் கைப்பை மற்றும் போனை, 'செக்' செய்து, 'இது யாரோட, 'மெசேஜ்!' நீ ஏன் அவனோட பேசற...' என்று, கேட்டான்.தன் மேல் உள்ள ஆசையும், பாசமும் அப்படி செய்யத் துாண்டியது போலும் என நினைத்தாள். இதுவே வாடிக்கையானதும் கவலைப்பட்டாள், லட்சுமி. கோபத்துடன், 'பொம்பளைங்க சம்பாதிச்சு கொண்டு வர, காசு மட்டும் வேணும். ஆனா, அவள் கஷ்டத்தை புரிஞ்சுக்காம, வார்த்தைகளால் மனசை ரணமாக்கிறவன் என்ன ஆம்பள... தங்க ஊசின்னு கண்ணைக் குத்திக்க முடியுமா... மகனாயிருந்தா என்ன, இவனுகளையெல்லாம்...' என்றார், முகுந்தனின் அம்மா. லட்சுமியை சந்தேகப்பட்டு, 'யாரை மயக்க இப்படி டிரஸ் பண்ணற. நீ, அழகாயிருக்கேன்னு உனக்கு திமிரு அதான் இப்படி மினுக்கிட்டு திரியற...' என்று, வாய்க்கு வந்தபடி பேசினான்.'இப்படியே பேசிட்டு இருந்தேன்னு வைச்சுக்கோ, என் மருமகளிடம், உன்னை விவாகரத்து செய்ய சொல்லிடுவேன்டா...' என்றதும், வாயை மூடிக் கொள்வான், முகுந்தன். அன்று ஆபீசில், 'ஆடிட்டிங்' என்பதால் சற்று சீக்கிரம் ஆபீசுக்கு கிளம்பிய, லட்சுமி, கருநீல ஷிபான் சாரியும், பார்டருக்கு, 'மேட்ச்'சாக பிங்க் கலர் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். அதைப் பார்த்த முகுந்தனின் முகம் கோபத்தில் கனன்றது.மகனின் முகத்தைப் பார்த்த அவன் அம்மா, ''டேய், அவளுக்கு ஆபீசில், 'ஆடிட்டிங்!' அவளை எரிச்சல் படுத்தாம, நீ போய் உன் வேலையை பாரு,'' என, விரட்டினார். எதுவும் பேசாமல் பைக்கை எடுத்து, வெளியே கிளம்பினான், முகுந்தன். வீட்டில் எல்லா வேலைகளையும் பார்த்து முடித்தவள், தன் குழந்தையை கொஞ்சி விட்டு, மாமியாரிடம் சொல்லி, ஆபீசுக்கு கிளம்பினாள்.வேகமாக நடந்து வந்து பஸ் பிடித்தவள், 'எட்டு மணிக்கே இவ்வளவு கூட்டமா இருக்கே. கூடிய சீக்கிரம் வண்டி ஒண்ணு வாங்கிட வேண்டியது தான்...' என, நினைத்துக் கொண்டாள், லட்சுமி. பஸ், ஒரு வளைவில் திரும்பிய போது, லட்சுமியின் அருகில் நின்றிருந்தவன், சாய்ந்து, அவள் இடுப்பைத் தடவி, லேசாக கிள்ளினான். லட்சுமிக்கு வந்த ஆத்திரத்தில், 'நான் நெருப்புடா நாயே...' என, கத்திக் கொண்டே, செருப்பை கழற்றி அவன் முதுகில் இரண்டு போடு போட்டாள்.அதற்குள் பஸ்சில் இருந்தவர்கள், 'என்னம்மா என்ன ஆச்சு...' என்றபடி வந்து சூழ்ந்து அவனுக்கு தரும அடி கொடுத்தனர். பஸ்சில் சற்று தள்ளி அமர்ந்திருந்த லேடி, எஸ்.ஐ., லட்சுமிக்கு தெரிந்தவர். ''என்ன மேடம், 'ஈவ் டீசிங்'கா?'' என கேட்டபடி, எழுந்து வந்தார். கோபத்துடன், ''பொம்பளைங்கன்னா அவ்வளவு இளக்காரம். மேல கை வைக்கிற இவனுகளை எல்லாம் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் இரண்டு நாள் வைச்சுருந்து கக்கூஸ் கழுவ விடுங்க, மேடம். அப்பதான் இவனுக்கெல்லாம் அறிவு வரும்,'' என்றாள், லட்சுமி. அவனை கெட்டியாக பிடித்த எஸ்.ஐ., பஸ்சிலிருந்து இறங்குவதற்கு முன் லட்சுமியிடம், ''ஸ்டேஷனுக்கு வந்து, ஒரு புகார் கொடுங்க மேடம்,'' என்றார். ''மேடம், எனக்கு ஆபீசில், 'ஆடிட்டிங்!' அதனால், மதியம் வரேன். ப்ளீஸ்...'' என்றாள், லட்சுமி. ஆபீசுக்கு வந்த லட்சுமி, வேலையில் மூழ்கினாள். மதியம் லட்சுமிக்கு போன் செய்தார், எஸ்.ஐ., ''மேடம், அவன், உங்களை நல்லா தெரியும்ன்னு சொல்றான். எனக்கு ஒரே குழப்பமாய் இருக்கு. நீங்க புகார் கொடுக்காமல், என்னால எதுவும் செய்ய முடியாது. கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வாங்க,'' என்று கூறி, போனை வைத்தார். எந்தவொரு குழப்பமும் இல்லாமல் ஸ்டேஷனுக்கு வந்தாள், லட்சுமி. ''மேடம், இவன் உங்களை, அவன் மனைவின்னு சொல்றான்,'' என்றார், எஸ்.ஐ.,திகைத்தது போல் முகத்தை வைத்துக் கொண்டு, ''அய்யோ, அவர் பஸ்சுலயே வர மாட்டாரே,'' என்றாள், லட்சுமி.அங்கு, போலீசாரிடம் அடி வாங்கி, தொங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த முகுந்தனைப் பார்த்து, ''என்னங்க நீங்களா?'' என்று, அதிர்ந்தாள்.பின், எஸ்.ஐ.,யிடம், ''மேடம், இவர், என் கணவர் தான். காலையில் நான் ஆபீஸ் போற பதற்றத்தில் இருந்ததால யாரு என்னன்னு பார்க்கல. மேல கை வைச்சதும் டப்புன்னு அடிச்சுட்டேன். ஏங்க, நீங்களாவது ஒரு குரல் கொடுத்துருக்கலாமே,'' என்றாள்.''பாவம், அவரை நாங்களும் இரண்டு தட்டு தட்டி விட்டோம். சரி, வீட்டுக்கு கூட்டிட்டு போய் ஒத்தடம் கொடுங்க மேடம்,'' என்றார், எஸ்.ஐ., ''நீ, ஆபீஸ் போம்மா. உனக்கு, 'ஆடிட்டிங்'ன்னு சொன்னேல்ல, நான் வீட்டுக்கு போயிக்கிறேன்,'' என்ற, முகுந்தன் முகத்தில், தன் பழைய காதலனைப் பார்த்தாள், லட்சுமி.''சரிங்க...'' என்ற லட்சுமி, ஆட்டோ பிடித்து, முகுந்தனை ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். ஆபீசுக்கு வந்த லட்சுமி, தன் மாமியாருக்கு போன் செய்தாள்.''அத்தை, அவர் தான் என் பக்கத்தில் வந்து நிற்கிறார்னு தெரிஞ்சுது. ஆனா, என் நேர்மையை சோதிக்கற மாதிரி அவர் செய்யவும், என்னால தாங்க முடியலை. அதான் அவரை அடிச்சுட்டேன். அடி வாங்கவும் வைச்சுட்டேன்,'' என்றாள், கலங்கிய குரலில்.''அவனுக்கு இந்த, 'ஷாக் ட்ரீட்மென்ட்' தேவை தான், லட்சுமி. நீ கவலைப்படாத, நான் பார்த்துக்கிறேன். போகட்டும் விடு,'' என்றார், லட்சுமியின் மாமியார். ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த முகுந்தனோ, 'லட்சுமி, தெரிஞ்சு அடிச்சாளோ தெரியாம அடிச்சாளோ... ஆனால், அவள் உண்மையாத்தான் இருக்கா. மாற வேண்டியது நான் தான். எனக்கு இந்த அடி தேவை தான்...' என்று, சொல்லிக் கொண்டான், திருந்திய மனதுடன். பவானி உமாசங்கர்