உள்ளூர் செய்திகள்

செல்லாக்காசு!

அவசர அவசரமாக, பாலுவுக்கு போன் செய்து வரச்சொல்லி, பைக்கை எடுத்து, அப்பாவைத் தேடி புறப்பட்டான், பழனி.'விடிஞ்சா தங்கச்சி சீதாவுக்கு கல்யாணம். சொந்தக்காராங்க எல்லாம் வீட்டுல வந்து குவிஞ்சு கிடக்குறாங்க. இந்த நேரத்தில் அப்பாவை காணோம்ன்னு சொன்னால், தங்கச்சி கல்யாணத்தில் ஏதாவது சிக்கல் வந்துவிடுமே...' என, அஞ்சினான், பழனி. அவன் அப்பா தினமும் போகும் டாஸ்மாக், பூங்கா, சீட்டு ஆடும் கிளப் என, அனைத்து இடங்களிலும் தேடினர். ''எதுக்கு பழனி, உங்க அப்பாவ தேடிக்கிட்டு இப்புடி அலையணும்? பேசாம வீட்டுக்கு போயிடுவோம். நாளைக்கு தங்கச்சி கல்யாணம் முடியட்டும். அப்புறமா ஆள் இல்லைங்கிற விஷயத்தை சொல்லலாம்,'' என்றான், பாலு. ''இல்லடா, சடங்கு செய்வதற்கு அப்பா வந்து முன்னாடி நிக்கணும்ன்னு, சொல்வாங்க. அந்த நேரத்தில் என்னடா செய்றது? சமாளிக்க முடியாதுடா! அபசகுனமா நினைப்பாங்க.''தங்கச்சி நல்லா படிச்சிருக்கு, நல்ல வேலையில இருக்குங்குற ஒரே காரணத்துக்காக தான், மாப்பிள்ளை வீட்டுல அவங்க காதலை ஏற்று, கல்யாணத்துக்கும் ஒத்துக்கிட்டு இருக்காங்க. முதல்ல இந்த ஆளை கண்டுபிடிப்போம். நல்ல படியா கல்யாணம் முடியட்டும்,'' என்றபடி, மூத்த அக்காவுக்கு போன் செய்தான்.''வந்தவங்க எல்லாம் சாப்பிட்டாங்களா? சாப்பாடு பத்தலன்னா சொல்லு. நான் ஏற்பாடு பண்றேன். யாருக்கு என்ன வேணும்ன்னு கவனி. அப்பறம் அப்பா அங்க இருக்காரா?'' என, மெல்ல விசாரித்தான். ''அதெல்லாம் எல்லாரும் கொட்டிகிட்டாங்க. அப்பா எங்க போனாருன்னு தெரியலடா. அப்பறம் நான் உன்கிட்ட பேச நினைச்சுகிட்டு இருந்தேன். என்னடா நினைச்சுகிட்டு இருக்க? நாங்க படிக்கலைன்னாலும் என் புருஷன், லாரி டிரைவர்னாலும், என்னைய ராணி மாதிரி தான் வச்சிருக்காரு. ''எங்களுக்கெல்லாம் என்னமோ, ரெண்டு பவுனு போட்டு தான் கல்யாணம் பண்ணி கொடுத்த. இப்ப என்னமோ உன் தங்கச்சிக்கு, ஏழு பவுன் போடற. சீர்வரிசை அது இதுன்னு செய்ற. என்னடா நினைச்சுகிட்டு இருக்க?'' என கத்தினாள், மூத்த அக்கா.அவள் கோபப்பட்டு குதிப்பதற்கும், பதில் ஏதும் சொல்ல முடியாமல், ''சரி நான் வீட்டுக்கு வந்து பேசுறேன்,'' என்றபடி போனை, 'கட்' செய்தான், பழனி. இரவு, 9:30 மணியை தாண்டியது. இரண்டாவது அக்கா போன் செய்து, ''இதோ பாரு, நீ ஏதோ தங்கச்சிக்கு, ஏழு பவுனுக்கு செயின் செஞ்சிருக்கியா? சீர்வரிசை வேற அதிகமா பண்ணுற, அதுவும் மூத்த அக்கா புருஷனுக்கு லாரி வாங்க பணமெல்லாம் கொடுத்த, எனக்கும், என் புருஷனுக்கு நீ அந்த அளவுக்கு செய்யல.''நானும், உனக்கு ஒரு அக்கா தான்; அத மறந்துடாத. அதனால, என் புருஷன் கல்யாணத்துக்கு வரமாட்டேன்னு சொல்றாரு. நான் கூட பொறந்த பாவத்துக்கு தலைய காட்டிட்டு போகலான்னு கல்யாணத்துக்கு வந்தேன்,'' என்றபடி அவளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்.கோபம் தலைக்கேறிய நிலையிலும், பொறுமையாக, ''நான் வீட்டுக்கு வரேன். பேசிக்கலாம்,'' என்றான், பழனி.மதியமும் சாப்பிடவில்லை. தண்ணீர் தாகம் எடுக்க, வழியில் ஒரு கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி, இரண்டு பேரும் குடித்தனர்.அடுத்தடுத்து, தாய் மாமன் அழகம்பெருமாள், கடைசி அக்கா என தொடர்ந்து போன் வர, நொந்து போனான்.''என்னடா இது கொடுமையா இருக்கு. காலையிலிருந்து அப்பனை காணோம். அதை பத்தி யாரும் கேக்கலை. நீ சாப்பிட்டியா, இல்லையான்னு கேட்க கூட ஆள் இல்லை. மூணு அக்கா, ஒரு தங்கச்சி இருந்தும், நீ என்ன ஆனன்னு கூட கேட்க ஆள் இல்லாம இருக்கியே!''உனக்கும், 34 வயசு தாண்டிருச்சு. இன்னும் உனக்கு கல்யாணம் பேச, ஆள் இல்ல. உன் குடும்பத்துக்கு நீ எவ்வளவு செஞ்சாலும் உன்னைய குத்தம் சொல்ல ஆள் தயாரா இருக்காங்களே,'' என்றான், பாலு.அப்பா அண்ணாமலை. ராஜ வம்சம். ஆனால், குடி, சூதாட்டம் என்று செலவு செய்வார். பழனிக்கு அஞ்சு வயது இருக்கும் போது அப்பாவுடன் கூட பிறந்தவர்கள், சொத்தை பிரித்து வாங்கி கொண்டனர்.இவருக்கு கிடைத்த சொத்தை காப்பாற்றாமல் கொஞ்சம், கொஞ்சமாக இருக்கும் பணத்தை குடித்து தீர்த்தார். பழனிக்கு, 13 வயதாகும் போது அம்மாவும் இறந்து போனாள். சொத்து மற்றும் வீடும் இல்லாமல் போக, வாடகை வீட்டுக்கு குடிவந்தனர்.'வந்தா ராஜாவா தான் இருப்பேன். வாழ்ந்தா ராஜாவா தான் வாழ்வேன்'னு, அண்ணாமலை சரிவர எந்த வேலைக்கும் போகாமல், முழுநேர அரசியல்வாதியாக இருந்தார்.மூணு அக்காள் மற்றும் ஒரு தங்கையை காப்பாற்ற, படிப்பை பாதியிலேயே நிறுத்தி, வேலைக்கு போக ஆரம்பித்தான், பழனி. கடன் வாங்கி சிரமப்பட்டு, முதல் ரெண்டு அக்கா திருமணத்தை நடத்தி வைத்தான். சிறு வயதிலேயே, சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போனதால், வீட்டில் அனைவரிடமும் மிகவும் கோபப்படுவான், பழனி. சிடுசிடுன்னே இருப்பான். அதுவும் அப்பாவிடம் பேச கூட மாட்டான்.தன், 20வது வயதில், அபுதாபிக்கு வேலைக்கு போனான், பழனி. மூன்றாண்டு கஷ்டப்பட்டு பணம் சேர்த்து, சொந்தமாக வீடு கட்டி முடித்தான். கடனையும் அடைத்து, கடைசி அக்காவுக்கும் திருமணம் செய்து வைத்தான்.'வேலை வாங்கித் தரேன்னு, உன் அப்பா பணத்தை ஏமாத்தி வாங்கிட்டார்'ன்னு, வீட்டுக்கு வந்து பல பேர் சண்டை போட்டனர். அந்த கடனை அடைக்க, திரும்ப, ஆறாண்டு, துபாயில் வேலை பார்த்து, அக்காக்களுக்கும் பண உதவி செய்து, அப்பா கடனையும் அடைத்து முடித்தான்.அதற்குள், பழனியின் வயது, 30ஐ தாண்டியது. சொந்தபந்தங்களை பொறுத்தவரை, பழனி உழைப்பாளி, நல்லவன், எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன் என்பது தெரியும். ஒரு கட்டத்தில் அக்காக்களுக்குள்ளேயே, 'எனக்கு சீர் அதிகமாக வந்துச்சா, உனக்கு சீர் அதிகமா வந்துச்சா?' என்ற போட்டியில், பழனி மற்றும் அவன் வாழ்க்கையை பற்றி, சுத்தமாக மறந்து போயினர். அண்ணாமலை பற்றி சொல்லவே வேண்டாம். 'நாங்க எல்லாம் ராஜ வம்சம். ஆனா, இவனுக்கு தான், ராஜா அமைப்பு இல்ல. அதான், கல்யாணம் அமையலன்னு...' நக்கலாக, கூறியதைக் கேட்டு, கோபத்தில் அப்பா என்று கூட பார்க்காமல் கன்னத்தில் அறைந்தான்.'என்னுடைய, 13 வயசுல, என் தோள்ல பாரத்தை ஏற்றி விட்டுட்ட. சின்ன வயசிலிருந்து எதுவுமே அனுபவிக்காம நான் சுத்திகிட்டு இருக்கேன். இப்பவும் வெள்ளை சட்டையை போட்டு, வெட்டியா பேசிக்கிட்டு இருக்க...' என, வேதனையில் மேலும் ஒரு அறை விட்டான். அப்போது எங்கோ சென்றவர் தான், இப்போது தேடிக் கொண்டிருக்கிறான்.எங்கும் தேடி கிடைக்காமல், வீடு திரும்பினர்.அக்காக்களும், அவர்களது கணவர்களும், தாய்மாமன் அழகம்பெருமாள் என, அனைவரும், பழனிக்காக காத்திருந்தனர். வீட்டிற்குள் நுழைந்ததும், அக்காக்கள் ஒவ்வொருவராக வழக்கம் போல ஆரம்பித்தனர். எதற்கும் பதில் சொல்லாமல், அங்கே இருந்த பிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டு அமைதியாக அமர்ந்தான், பழனி. தங்கை சீதாவிடம், தண்ணீர் கொடுக்குமாறு சமிக்கை செய்தான். அவளும் உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். ஒரு சொம்பு தண்ணீரை முழுவதும் குடித்தபடி அமர்ந்திருக்க, பின்னால் வந்த, பாலு அமைதியாக பக்கத்தில் அமர்ந்தான்.''தாய்மாமன்னு ஒரு மரியாதை இருக்கா? எத்தனை தடவ போன் பண்றேன். எடுக்கிறியா?'' என்றார், அழகம்பெருமாள். ''சரி சொல்லுங்க. எதுக்கு போன் பண்ணீங்க?''''ரயில்வே ட்ராக்ல ஒருத்தன் அடிபட்டு, செத்து போய் கிடந்தான்டா. பார்க்க உங்க அப்பன மாதிரியே இருந்துச்சு. அதுக்காக தான்டா உனக்கு நான் மாத்தி மாத்தி கூப்பிட்டேன்.''இன்னைக்கி காத்தால நீ வேற உங்க அப்பாவ அடிச்சுப்புட்ட, அதுல ஏதும் ரோஷம் வந்து தற்கொலை பண்ணிட்டானா? இப்ப எங்க உங்கப்பன்?'' என, கேட்க, பாலுவுக்கும், பழனிக்கும் அதிர்ச்சியானது.எதாவது சமாளிப்போம் என மனதில் நினைத்தவாறு, ''இல்லயில்ல குடிச்சிட்டு பூங்காவுல கிடந்தார். நான் கூட இப்ப பார்த்தேன்,'' என்றான், பாலு. ''அவன் ஒரு குடிகாரன். மகளோட கல்யாணத்துக்கு கூட இப்படியா குடிப்பான். போதை தலைக்கேறி நாளைக்கு வராம போக போறான்,'' என்றார், அழகம்பெருமாள். ''வரலேன்னா என்னா, கல்யாண சாங்கியம் பண்ண, இவுங்க பெரியப்பாவை நிக்க வைக்கலாம்,'' என்றான், பாலு. பெரியப்பாவும் அங்கு நடப்பதை மவுனமாக கவனித்து, ''செய்யுற செய்முறை எல்லாம் செஞ்சு கிழிச்சுட்டீங்க. ராஜா வம்சத்து வீட்டு கல்யாணம் மாதிரியா நடக்குது. ஏதோ இல்லாதபட்டவங்க வீட்டு கல்யாணம் மாதிரி...'' என, சலித்தப்படி, ''சரி, வந்து நின்னு தொலைக்கிறேன்,'' என்றார். சற்று நேரத்தில் தள்ளாடியபடி, வீட்டிற்கு வந்தார், அண்ணாமலை. கையில் இறுக பிடித்தபடி ஒரு மூட்டை. ஆச்சரியமாக அனைவரும் பார்க்க, பிரித்துக் காட்டினார். ஐந்து லட்சத்துக்கும் அதிகமாக பணம் இருந்தது. பழனியிடம், ''என்னை செல்லாக்காசுன்னா சொன்ன? டேய், ராஜாடா. அண்ணாமலை, ராஜாடா. கிளப்புல போயி வெறியோட, சீட்டு ஆடுனேன். இன்னைக்கு நான்தான்டா ராஜா, இன்னைக்கி மட்டுமில்ல இனி எப்பவும், நான் தான்டா ராஜா,'' என, பெருமிதமாக பேசினார். ''மாப்பிள்ளை எப்பவும் கிங் தான்,'' என, அழகம் மாமாவும் சேர்ந்து கொண்டார். மகள்களும் அருகில் வந்து, 'என்னப்பா இதெல்லாம்...' என பரிந்து பேசினர்.''அப்பா கிளப்ல ஜெயிச்சு இருக்கேன்மா, எல்லாம் உங்களுக்குத் தான்,'' என்றார், அண்ணாமலை. ''அப்பா, இந்த பணத்தை வட்டிக்கு விட்டு, வட்டி காச வச்சு, ஜம்முன்னு இருங்க,'' என்றாள், மூத்த மகள்.''ஆமா, அந்த நாய், எனக்கு ஒண்ணும் கஞ்சி ஊத்த வேண்டாம். அப்பனையே அடிக்கிறான். இவன் எல்லாம் விளங்குவானா?'' என, பழனியை காட்டி காட்டி பேசினார். ''விடுங்கப்பா. நீங்க பேசாம என்கூட வந்துருங்கப்பா. நான் உங்களை பார்த்துக்கிறேன்,'' என்றாள், மூத்த மகள்.மற்ற அக்காக்களும் சேர்ந்து அப்பாவுக்காக பரிந்து பேசி, 'இந்தா சாப்புடுங்கப்பா...' என, தட்டில் சாப்பாடு வைத்து நீட்டினர். தங்கை சீதா மட்டும் அமைதியாக இருந்தாள். ''கல்யாணம் முடியட்டும்பா, சீதாவுக்கு செஞ்ச மாதிரி எங்களுக்கும் பண்ணா, நாங்க இங்க வருவோம். இல்லைன்னா நாங்க யாரும் இவன் மூஞ்சியிலேயே முழிக்க கூடாதுன்னு இருக்கோம்,'' என்றாள், மூத்த மகள்.அப்பாவிற்கு பணிவிடைகள் பலமாக இருந்தது. 20 ஆண்டுகள், தான் பட்ட கஷ்டம், அக்காக்களுக்காக தான் இழந்த சந்தோஷம், உழைத்த உழைப்பை மறந்து, ஓரம் கட்டப்படுவதை நினைத்து, பழனியின் கண்கள் சிவந்து, கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது. 'அடே மாப்பிள்ளை அழாதடா. மாமா உனக்கும் ஏதாவது காசு கொடுப்பார்டா...' என, அக்காவின் கணவர்கள் நக்கலாக பேசினர்.யாரும் இல்லாத தவிப்பு, சோகம் தாங்க முடியாமல், அம்மா இறந்த போது கூட அழாமல் இருந்த பழனி, இப்போது, மனம் வெம்பி கதறி அழத் துவங்கினான். 'எதுக்கு இப்புடி, 'சீன்' போடுறான்...' என்றனர், அக்காக்கள்.''அவன் திருட்டுபய, அழுதா மட்டும் இவன்கிட்ட பணத்தை கொடுப்பேன்னு நினைக்கிறானா? பெத்த கடனுக்காக ஆயிரத்த அவன் மூஞ்சியில எறிஞ்சிட்டு போறேன்,'' என்றார், அண்ணாமலை. 'நான் காசுக்காகவா அழறேன். 20 வருஷம் குடும்பத்துக்காக உழைச்ச உழைப்பை கூடப் பொறந்தவங்க அசிங்கப்படுத்துறீங்களே...' என நினைத்தபடி, கண்ணீர் விடும், பழனிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என தெரியாமல், முதுகில் தட்டி கொடுத்து நின்றான், பாலு. ஆனாலும், பழனியின் அழுகை ஓயவில்லை. கதற ஆரம்பித்தான். ''யோ மாப்பிள்ளை எதுக்கு அழற? யாருக்காக அழற?'' என, அழகு மாமாவும் கேட்டார். ''மத்தவங்களுக்காக வந்த கண்ணீருக்கு மதிப்பில்லை. இப்ப தனக்காக தானே அழுகிறான். அழட்டும் மாமா விடுங்க,'' என, கண்ணீர் விட்டான், பாலு. - கார்த்திக் கிருபாகரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !