விண்ணையும் தொடுவேன்! (19)
முன்கதைச் சுருக்கம்: நீர்வளூர் கிராமத்தில் நடந்த கலவரத்துக்கு, தன் மாமனார் தான் காரணம் என்றாலும், அதை, தலைமை செயலரிடம் சொல்லாமல், அங்கிருந்து கிளம்பினான், புகழேந்தி.தன் மாமனாரை சந்தித்து, 'நறுக்'கென நாலு கேள்வி கேட்டுவிட்டு ஊர் திரும்ப நினைத்து, மாமனார் வீட்டுக்கு சென்றான். புகழேந்தியை பார்த்ததும், கடுப்பான, அவனது மாமனார், அவனுக்கு எல்லா விஷயமும் தெரிந்துவிட்டது என்று அறிந்ததும், 'இப்பவாவது என்னைப் பற்றி தெரிந்து கொண்டாயே... இனி, என்னிடம் மோதாதே...' என, எகத்தாளமாக கூறியதோடு, அவனை அடிக்கவும் பாய்ந்தார். வெறுப்புடன் அங்கிருந்து கிளம்பி, ஊருக்கு வந்தான், புகழேந்தி. வீட்டிற்குள் நுழைந்ததுமே, சுபாங்கி, 'என் அப்பாவை மிரட்டினீங்களாமே...' என, ஆத்திரத்துடன் கேட்டாள். மேலும், 'சென்னைக்கு போவதாக கூறிவிட்டு, கயல்விழியை பார்த்து பேசிவிட்டு போனீர்களா?' எனக் கேட்டு, அவதுாறாக பேச, அவளை ஓங்கி அறைந்தான், புகழேந்தி.''சின்னப்புள்ள மாதிரி என்ன, சுபா இது? நான் தான் தப்புன்னு சொல்லிட்டேனில்ல? சாரி கேட்டுட்டேனில்ல? கன்னத்துல போட்டுக்கிடட்டுமா? வேணும்ன்னா தோப்புக்கரணம் போடுறேன்.''''என்னைப் போய் அடிச்சுட்டியே! இதுவரை யாரும் என்னை அடிச்சதில்லை. யார் கிட்டயும் அடி வாங்குனதில்லை,'' எனச் சொல்லி, குழந்தை மாதிரி அழுதவளை கண்டு பரிதாபப்பட்டான். ''சாரிடா...'' என, அருகில் இழுத்து அணைத்து, கண்களைத் துடைத்து, தலையை வருடி படுக்க வைத்தான். போர்வை போர்த்தி, விளக்கை அணைத்த பின், தானும் படுத்துக் கொண்டான். என்றுமே இல்லா அளவிற்கு களைப்பாக இருந்தது. நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக வந்து மனதை மிகவும் துன்புறுத்தின.அமைச்சருக்குள் மட்டுமல்ல. இத்தனை நாட்களாக தனக்குள்ளும் ஒரு மிருகம் துாங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த போது, மிகுந்த வேதனை ஏற்பட்டது. சராசரி மனிதனை விட, கீழ் நிலைக்கு போனது வருத்தமளித்தது.எங்கேயாவது தன்னந்தனியாக போய் வாய் விட்டு கதறியழுதால் தேவலாம் என, நினைத்தான். இந்த நிலையில், நாளை கயல்விழியை வேறு வீட்டிற்கு அழைத்து வருவதாக சொல்லி இருக்கிறோம். வெடிக்கப் போவது எரிமலையா, பூகம்பமா தெரியவில்லையே!ஆழமான பெருமூச்சோடு கண்களை மூடித் துாங்க முயன்றான், புகழேந்தி. பழங்களும், பூங்கொத்தும் கொடுத்து, கயல்விழியை வழியனுப்பி வைத்தார், மருத்துவமனை முதன்மை மருத்துவர். அரசு வாகனத்தை உபயோகப்படுத்தாமல், தன் சொந்த வாகனமுமின்றி, வேறு ஒரு வாகனத்தை அமர்த்தி இருந்தான், புகழேந்தி.உதவியாள் முத்துக்கிருஷ்ணனை, தன் பக்கத்தில் உட்காரச் சொன்ன போது, ''சார்,'' என, தயங்கினார், அவர். ''பரவாயில்லை. உட்காருங்கள்,'' என, பின் இருக்கையில், கயல்விழியை அமரச் சொன்னான்.முன்னால் இருந்த சிறிய கண்ணாடி வழியாக, கயல்விழியை பார்த்தான். அவள் மிகவும் இயல்பாக வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தது, நிம்மதியைத் தந்தது. ஆனாலும், சுபாங்கியை நினைத்து சிறிது கவலைப்பட்டான். 'தான் போட்ட கணக்குப்படி இது சாதாரண விஷயமாக பார்க்கப்படுமா அல்லது சுனாமியாக மாறுமா?' ஒன்றும் புரியாமல் வீட்டை அடைந்த போது, நல்ல காலமாக, சுபாங்கி வீட்டில் இல்லை. ஓடி வந்த சமையற்காரப் பெரியவரிடம் விசாரித்தான்.''அம்மா இல்லீங்களா, பெரியவரே?'' ''இல்லீங்கய்யா. அவுங்க அப்பா வந்திருக்காரு. அவுரு கூட போயிருக்காங்க.''''அப்படியா?'' என, கால் வினாடி யோசித்து, பின், ''இவங்க பேரு கயல்விழி. கீழே உள்ள, 'கெஸ்ட் ரூமில்' தங்க வையுங்க. நல்லா கவனிச்சுக்குங்க. நேரம் தவறாமல் சாப்பிட வையுங்க.'' ''சரிங்கய்யா.'' ''எது வேணும்னாலும் தயங்காமல் கேளு, கயல்; இவரு உன் அப்பா மாதிரி.''புன்னகையோடு, கயல்விழி அவருக்கு கைகுவித்ததும், அரண்டு போனார், பெரியவர். இதுவரை யாரும் அவருக்கு வணக்கம் சொன்னதில்லை. அவரையும் மீறி, கயல்விழி மீது ஒரு அன்பு ஏற்பட்டது. ''நல்லாரும்மா,'' என்றார். ''நான் வரேன், கயல். நீ போய் ஓய்வெடு. சீக்கிரம் வரப் பார்க்கிறேன். பயப்படாமல் தைரியமாக இரு, கயல்,'' எனச் சொல்லிவிட்டு கிளம்பினான், புகழேந்தி. இரண்டு நாட்களாக அலுவலகம் பக்கம் வராததால், வேலை அதிகம் இருந்தது. பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றுக் கொள்ளும் நாளாகவும் அமைந்து விட்டதால், நண்பகல் வரை எதை நினைக்கவும் நேரமில்லை.வேலை முடித்து, கடிகாரத்தை ஏறிட்ட போது, மணி 2:00 ஆனது. பசிப்பது போல் இருக்கவே, வீட்டுக்கு போக எழுந்தான். அப்போது தான், கயல்விழி ஞாபகத்திற்கு வந்தாள். 'சாப்பிட்டாளா என்னவோ தெரியவில்லையே... பெரியவரிடம் தான் சொல்லிவிட்டு வந்திருக்கிறோமே... அவர் பார்த்துக் கொள்வார்...' என, நினைத்தவாரே காரில் ஏறிக் கொண்டான், அவன். ''சாப்பிட வரியாம்மா?'' என, பெரியவர் அழைத்தார்.பொழுது போகாமல் ஜன்னல் வழியாக வெளியில் பார்த்துக் கொண்டிருந்த, கயல்விழி பெரியவரை ஏறிட்டாள்.''சார், இன்னும் சாப்பிட வரலையே!''''அவர் எப்போது வருவார், எப்போது சாப்பிடுவார் என்பது அவருக்கே தெரியாதும்மா. கலெக்ட்ரேட்டுக்குள் நுழைந்து விட்டார் என்றால், சாப்பாடு, துாக்கம், வீடு, வாசல் எல்லாம் மறந்து போகும் அவருக்கு.''''இப்படி இருந்தால் உடம்பு என்னத்திற்காகும்?''''அதைப்பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் கவலைப்படவில்லையே...'' என்றார்.''சரி, மேடம் சாப்பிட்டார்களா?''''அவுங்க வந்தால் சாப்பிட்டுக்குவாங்கம்மா. நீங்க வாங்க.''''நீங்களாவது சாப்பீட்டீர்களா, இல்லையா?''''அவங்க சாப்பிடாமல் எப்படிம்மா? நீங்க வாங்க. ஐயா உங்களை கவனிச்சுக்கச் சொல்லியிருக்காரு. நேரத்துக்கு சாப்பாடு போடாட்டி என்னை கோவிச்சுக்குவாரு.''''சரி பெரியவரே,'' என, எழுந்து கொண்டாள், கயல்விழி.மேஜை மீது தட்டு வைத்துப் பரிமாறினார், பெரியவர். இரண்டு பொரியல், கூட்டு, கீரை என, வகை வகையாக தட்டில் வைக்கப்பட்ட உணவை கண்டு திகைத்து போனாள். ''இன்று என்ன பெரியவரே, ஏதாவது விசேஷமா?''''இல்லையே... ஏம்மா கேட்கறீங்க?'' ''இல்லை, இத்தனை வகைகளை பரிமாறி இருக்கிறீர்களே!''''தினமும் செய்யிறது தான். அம்மா இத்தனையும் செய்யச் சொல்வாங்க. ஒண்ணு குறைந்தால் கூட, சத்தம் போடுவாங்க.''''அம்மா சாப்பிடுவாங்களா?''''ஊஹும். அம்மா சாப்பிடுவதெல்லாம் ஜூஸ், சாலட், பழங்கள் மட்டும் தான்.''''ஐயா...''''ஐயாவுக்கு தினமும் கீரை வேணும். கீரையும், ரசமும் தான் அவரு விரும்பி சாப்பிடுறது. என்னைக்காச்சும் சாம்பாரு போட்டுக்குவாரு.'' ''அம்மா, ஐயா ரெண்டு பேரும் சாப்பிடலன்னா, எதுக்காக இத்தனை செய்யணும்? எல்லாம் வீணாய்த்தானே போகும்!''''அதான் சொன்னேனில்ல... ஒண்ணு குறைஞ்சால் கூட அம்மா திட்டுவாங்கன்னு.'''அது சரி. அவங்களுக்கென்ன? அரசு பணம். மக்களின் வரிப்பணம். சொந்தப் பணமாக, உழைத்து சம்பாதித்ததாக இருந்தால் இப்படி வீணாக்குவரா?' என, நினைத்துக் கொண்டாள், கயல்விழி.''நீங்க என்ன நினைக்கறீங்கன்னு புரியுது. இது எதுவும் அரசு பணத்துல வாங்கல. ஐயா, தன் காசு போட்டு வாங்கறாரு. அரசு பணத்தை எண்ணி எண்ணி சிக்கனமா செலவு செய்வாரு. ஒரு பேனா, குண்டூசி, கிளிப்புன்னு எதையும் வீட்டுக்கு கொண்டு வர மாட்டாரு. ரொம்ப வித்தியாசமான மனிதர்மா, உசந்த மனிதர், லட்சியவாதி.'' கயல்விழி மனதில் அருவி பொங்கியது. சிலுசிலுவென்று தென்றல் காற்று வீசியது. கள்ளிச் செடிகளும், கத்தாழைகளும், கருவேல முட்களும் படர்ந்து விரிந்த பெரும் நிலப்பரப்பில், அபூர்வமாக இது போன்ற ரோஜாக்களும், மல்லிகைகளும் மலர்ந்து மணம் வீசத்தான் செய்கின்றன. சாம்பாரை சாதத்தில் ஊற்றி, பிசைந்து ஒரு கை எடுத்து, வாயில் வைக்கப் போன போது, வாசலில் பெருத்த ஹாரன் சத்தத்தோடு, நீண்ட நெடும் கார் வந்து நின்ற சத்தம் கேட்டதும், படபடத்தார், பெரியவர். கையில் வைத்திருந்த கரண்டி, தானாக நழுவி மேஜை மீது விழுந்தது. அவரது பயத்தையும், படபடப்பையும் கண்டவள், வாயருகில் கொண்டு போன கவளத்தை தட்டில் போட்டு, மிரட்சியோடு அவரை ஏறிட்டாள்.''என்னங்க பெரியவரே?'' எனக் கேட்டாள், கயல்விழி.''ஒண்ணுமில்லம்மா. அம்மா வந்துட்டாங்க. நீங்க சாப்பிடுங்கம்மா. நான் இதோ வந்திடறேன்,'' என, வாசலுக்கு ஓடினார். ''சரி, பெரியவரே,'' என, இயல்பாக சாப்பிடத் துவங்கினாள்.சில நொடிகளுக்குள் வரவேற்பறை கடந்து, சாப்பாட்டு அறைக்குள் நுழைந்த சுபாங்கியும், அவளது தந்தையும் மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்ணைக் கண்டதும், ஒரு வினாடி அதிர்ந்து நின்றனர். அந்த முக அழகும், தகதகத்த நிறமும் அவர்களை அசரடித்தன. ''ஏய் யார் நீ?'' என, கட்டை தொண்டையில் அதட்டினார், அமைச்சர். சட்டென்று சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எழுந்து நின்றாள், கயல்விழி.அமைச்சரின் உருவமும், அதிகாரமும், சுபாங்கியின் மிடுக்கும், கோபம் தெறித்த முகமும், அவளை பேச விடவில்லை. உடனே சமையற்காரப் பெரியவரிடம் கடுகடுத்தார், அமைச்சர். ''யாருய்யா, இது?''''ஐயா கூட்டிட்டு வந்தாருங்க.''''புகழேந்தியா?''''ஆமாங்க.''வேகமும், வெறுப்புமாக பார்வை, சமையற்காரப் பெரியவரை விட்டு, அவள் மீது திரும்பியது.''யாருடி நீ?''''கயல்விழி!''''கயல்விழின்னா?'' என்றவர், சட்டென்று ஆத்திரமும், கோபமும் மேலிடக் கேட்டார். ''ஓ, நீதான் அந்த குருவிக்காரப் பொண்ணா?''கயல்விழி பதில் சொல்லவில்லை. பேசாமல் நின்றாள். அதற்கு மேல் தாங்க முடியாதவராக அவளருகில் சென்ற அமைச்சர், ஓங்கி கன்னத்தில் அறைந்தார். ''என்ன தைரியமிருந்தா, நீ வீட்டுக்குள்ள நுழைஞ்சிருப்ப? வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமில்லாம, நாங்க சாப்பிடுற மேஜையில் உட்கார்ந்து சாப்பிடறயா?''எட்டி அவள் தலை முடியை பற்றி, தரதரவென்று இழுத்து வாசலுக்கு போனார். காவலுக்கு இருந்தவர்களும், 'கேம்ப்' அலுவலகத்திற்கு வந்தவர்களும், பணியாட்களும் பார்த்துக் கொண்டிருந்தனர். 'போர்ட்டிகோ' வரை இழுத்து வந்து கீழே தள்ளி, காலால் எட்டி உதைக்கவும், புகழேந்தியின் கார், 'போர்ட்டிகோ'வில் வந்து நிற்கவும், சரியாக இருந்தது. காரை விட்டு இறங்கிய, புகழேந்தி, தரையில் விழுந்து கிடந்த, கயல்விழியையும், பாய்ந்து குதறக் காத்திருக்கும் அமைச்சரையும், பின்னால் நின்ற சுபாங்கியையும் பார்த்த நொடியே நிலைமையை புரிந்து கொண்டான்.சுற்றி நின்ற அத்தனை பணியாளர்களுக்கு எதிரில், மிக கேவலமான முறையில், கயல்விழி அவமானப்படுத்தப்பட்டதில் துடித்துப் போனான்.ஒரு வினாடி தன்னை நிதானப்படுத்தி கொண்டு, கயல்விழியை நெருங்கி, கை பற்றி துாக்கி நிறுத்தினான்.''ஐ யம் ஸாரி. அடிபட்டுடுச்சா, கயல்.'' அமைதியாக இருந்தாள், அவள். ''பெரியவரே, ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வாங்க.'' ''இதோ, சார்,'' என, உள்ளே போக திரும்பியவரை தடுத்து நிறுத்தியது, அமைச்சரின் குரல். ''நில்லுய்யா! இந்த கேடுகெட்ட நாய்க்கெல்லாம் தண்ணி குடுக்கிறது, சாப்பாடு போடுறதெல்லாம் வச்சுக்கிட்ட, முதல்ல உன்னை துாக்கி வெளியே எறிவேன், ஜாக்கிரதை!'' ஸ்தம்பித்து நின்றார், பெரியவர். முதல் முறையாக தன் குரலை உயர்த்தினான், புகழேந்தி.''இது என் வீடு. என் வீட்டுக்குள்ள அத்துமீறி நுழைஞ்ச உங்களைத் தான், முதல்ல துாக்கி எறியணும்.''''ஏய், புகழேந்தி, யாரைப் பார்த்து என்னடா பேசற?''''ஐ ஸே கெட் அவுட். மந்திரியே ஆனாலும், என் வீட்டுக்குள்ள நுழைந்து எனக்கு வேண்டியவர்களை தாக்கும் அதிகாரம், உங்களுக்கு இல்லை.''''வேண்டியவளா? இவளாடா வேண்டியவ? தெரு நாயை விட கேவலமான நாலஞ்சுப் பேரால...''''ஸ்டாப் இட்! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க. நானே உங்களை வெளியேற்ற வேண்டி வரும்...''''என்ன பேசறீங்க? இந்த தரம் கெட்ட நாய்க்காக...''''சுபாங்கி, உன்னால, உன் நாக்கை அடக்க முடியலன்னா, நீயும், உன் அப்பா கூட வெளியே போக வேண்டியது தான்!''''டேய், யாருக்காக யாரை வெளியப் போகச் சொல்ற?''''மிஸ்டர் மினிஸ்டர். கெட் அவுட் ஐ ஸே! இதுக்கு மேல இங்க நின்னீங்க அசிங்கமா அவமானப்படுவீங்க.''''டேய் எங்கப்பாவையாடா அவமானப்படுத்துற?'' என, அவனை அறையக் கை ஓங்கிய, சுபாங்கியின் கையை பற்றி, ஓர் அறை விட்டான். தன் செல்ல மகள் தாக்கப்படுவதை காண சகிக்காத, அமைச்சர், அவன் மீது பாய்ந்தார். தலைமுடியை பற்றி இழுத்து கீழே தள்ள முயன்ற போது, 'கேம்ப் ஆபிஸ்' ஆட்களும், 'ஆடர்லி'களும், பாதுகாவலர்களும் ஓடி வந்தனர்.தடுக்க முயல்வதற்குள் அவரால் கடுமையாக தாக்கப்பட்டான், புகழேந்தி. அவரது வலுவேறிய முரட்டுக் கரங்கள், முகத்தைப் பதம் பார்த்ததில் சில்லு மூக்கு உடைந்து, ரத்தம் கொட்டியது. வாயில் விழுந்த குத்து, உதட்டை பதம் பார்த்தது.மூக்கிலிருந்தும், உதட்டிலிருந்தும் ரத்தம் வழிய நின்றவனை, அமைச்சரின் கரங்களிலிருந்து நாலைந்து பேராக சேர்ந்து பிரித்தெடுத்தனர். ''டேய், விடுங்கடா... இன்னைக்கு அவனா, நானான்னு பார்த்துடறேன். ஒண்ணு அவன் இருக்கணும். இல்லாட்டி நான் இருக்கணும்,'' என, அடிபட்ட சிங்கம் மாதிரி உறுமி உறுமிப் பாய்ந்தார், அமைச்சர். அதற்குள் வெளியிலிருந்து ஓடி வந்த அவரது காரோட்டியும், பாதுகாவலர்களும் அவரை தடுத்து, 'வாங்கய்யா, வாங்கய்யா...' என, அழைத்து செல்ல முயன்றனர். ''உன்னை என்ன செய்றேன் பாருடா,'' என்றவர், மகளின் பக்கம் திரும்பி, ''வாம்மா. ஆரம்பத்திலிருந்தே நான் வேணாம் வேணாம்ன்னு சொன்னனேம்மா. இது சாக்கடைம்மா. இதுக்கு மேலும் இங்க இருக்க உனக்கென்ன தலையெழுத்தாம்மா. வாம்மா போகலாம்.''மகளின் கையை பற்றி இழுத்து வெளியேறினார். சமையற்காரப் பெரியவரும், மற்றவர்களும், தண்ணீரும், பஞ்சும் வைத்து, புகழேந்தியின் முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டிருந்தனர். இவை அனைத்தையும் வெளிறிய முகத்தோடு பார்த்து நின்றிருந்த, கயல்விழியின் நெஞ்சு வலித்தது.'எப்பேர்ப்பட்ட மனிதர் இவர். இவருக்கா இப்படி? அதுவும் தன்னாலா?' என, நினைக்கவும், மளமளவென்று அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. நெஞ்சிலிருந்து புறப்பட்ட விம்மலை, கீழ் உதட்டைக் கடித்து அடக்கிக் கொள்ள முயன்றாள், கயல்விழி.— தொடரும்.இந்துமதி