உள்ளூர் செய்திகள்

மாற்றி மாற்றி!

பால்கனியில் அமர்ந்து காபி குடித்தான், வான்முகில். வயது 32. பளபளப்பு மங்கிய சொற்ப தலைமுடி. ஜெய்சங்கர் கண்கள். மருத்துவ சொற்களை உச்சரிக்கும் உதடுகள். முதுகலை பட்டப்படிப்பு முடித்து, சிறப்பு இதய மருத்துவராக பணிபுரிகிறான். மனைவியும், ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர். தந்தை நட்சத்திரன் மற்றும் தாய் கவிதாவுடனும் ஒரே வீட்டில் குடியிருந்தான், வான்முகில். தந்தையைக் கண்டால், வான்முகிலுக்கு அறவே பிடிக்காது. அம்மாவையும், மனைவியையும் அதிகம் நேசிப்பான். தந்தையை நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்ப்பங்களை தவிர்ப்பான், வான்முகில். அபூர்வமாக சந்தித்தால், எதிரியை பார்ப்பது போல் பார்ப்பான். அவர், 'டைனிங் டேபிளில்' சாப்பிட்டுக் கொண்டிருந்தால், இவன் சேர்ந்து சாப்பிட மாட்டான். அவர் ஏதாவது அறிவுரை கூறினால், அந்த அறிவுரையை விரும்பி தவிர்ப்பான். வான்முகிலுக்கு, தான் இதய மருத்துவர் என்ற அகந்தை உண்டு. நட்சத்திரனுக்கு, தான் ஒரு இதய மருத்துவரின் தந்தை என்ற கர்வம் உண்டு. மா டி பால்கனிக்கு கீழே தந்தை நட்சத்திரனும், வான்முகிலின் மகன் ஆர்வாவும் விளையாடிக் கொண்டிருந்தனர். தான் பால்கனியில் அமர்ந்திருப்பது தந்தையின் பார்வையில் படாது என்ற தைரியத்தில், தாத்தாவும், பேரனும் விளையாடுவதை வேவு பார்த்தான், வான்முகில். ''டேய் தாத்தா!'' ''என்னங்க முதலாளி?'' ''சதா தொப்பையோடயே திரியுறியே... குறைக்கக்கூடாதா?'' ''குறைக்க முயற்சி பண்றேன்... நடக்கல சாமி.'' ''தீனியைக் குறை, தீனியைக் குறை.'' ''சரிங்க, டாக்டர்!'' ''ஊர்ல எல்லாரும் உன்னை கவிஞன்னு சொல்றாங்களே... உண்மையா?'' ''ஆமாங்க. ஏதோ எழுதுவேன்!'' ''எங்கே ஏதாவது ஒரு கவிதை சொல்லு கிழவா.'' இலையுதிர் கால மரம் பொந்தில் கிழட்டுக்கிளி துளிர்த்த ஒற்றை இலை சாமரம் வீசியது வானவில் வசந்தம்! ''நல்லாவே இல்லை, பெருசு!'' ''மகிழ்ச்சி, கோமகனே!'' ''நீ, எது பேசினாலும் பாதி எனக்கு புரிய மாட்டேங்குது.'' சிரித்தார், நட்சத்திரன். ''ஏ ரயில்வே போர்ட்டர்!'' ''சொல்லுங்க பயணியே!'' ''என்னை உப்புமூட்டைத் துாக்கிக் கொண்டு, '10 ரவுண்ட்' சுத்தி வா, பார்ப்போம்.'' ''சுத்திருவோம்.'' தாத்தாவின் முதுகில் தொற்றிக்கொண்டான், ஆர்வா. ''இப்ப, 'ஏரோபிளேன்ல' போறோம். 'சீட் பெல்ட்'டை போட்டுக்க.'' ''போட்டுட்டேன்.'' ''கிளம்பலாமா...'' ''ஓ!'' ஐந்து ரவுண்டு அடித்து முடித்ததும் கால்கள் ஓய்ந்து குப்புற சரிந்தார், நட்சத்திரன். சிதறினான், ஆர்வா. ''வான்முகில், வான்முகில் என்னப்பா ஆச்சு?'' ''லுாசு தாத்தா. உனக்கு இதே வேலையா போச்சு. எப்பப்பாரு என் பெயரை, வான்முகில் வான்முகில்ன்னு சொல்ற... என் பேரு, ஆர்வா.'' ''எங்கயும் அடிகிடி படலையே, வான்முகில்!'' ''டேய் தாத்தா... 'டோன்ட் கால் மீ' வான்முகில். 'ஐ அம்' ஆர்வா.'' ''உன் பேரைத் தப்பா சொல்லிட்டேன், இல்ல, வான்முகில் சாரிப்பா.'' ''அதே, 'மிஸ்டேக்'கை திரும்பத்திரும்ப பண்றியே, நட்சத்திரா.'' ''இந்த கிழவன் அப்படித்தான், வான்முகில்.'' எழுந்து நின்று இருகைகளை இடுப்பில் வைத்தபடி, தாத்தாவை முறைத்தான், ஆர்வா. ''கீழ விழுந்த உனக்கு மண்டைகிண்டைல அடிகிடி பட்டிருச்சாடா?'' ''நோ ப்ராப்ளம், வான்முகில்!'' தாத்தாவை உலுக்கினான், ஆர்வா. ''நல்லா யோசிச்சு சொல்லு. நான் ஆர்வாவா, இல்ல வான்முகிலா?'' தலையை, 20 தடவைகளுக்கு மேல் உலுக்கிக் கொண்டார், நட்சத்திரன். விரலை சுத்தியலாக்கி நெற்றிப்பொட்டில் மரங்கொத்தி போல், 'டொக் டொக்'கினார். வாய்க்குள் பல பெயர்களை உச்சரித்துப் பார்த்தார். பல பெயர்களை, பல, 'மாடுலேஷன்'களில் உச்சரித்த, நட்சத்திரன் இறுதியாக அறிவித்தார். ''ஜஸ்ட் டங்க் சிலிப் ஆகிருச்சு, வான்முகில்.'' தலையில் அடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினான், ஆர்வா. நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த, வான்முகிலுக்கு எரிச்சல் மூண்டது. இரண்டாவது படுக்கையறைக்குள் துவைத்த துணிகளை அடுக்கிக்கொண்டிருந்த அம்மாவை, மொபைல் போனில் அழைத்தான். ''அம்மா கொஞ்சம் பால்கனிக்கு வா.'' வந்து நின்றாள், அம்மா. ''என்ன தம்பி கூப்பிட்ட?'' ''உன் புருஷன் திருந்தவே மாட்டாரா?'' ''அவர் என்னடா தப்பு செஞ்சார், திருந்த.'' ''அவருக்கு, 'டிமென்ஸியா' 'அல்ஜைமர்' அல்லது 'பார்கின்ஸன்' நோய் வந்திருச்சா?'' ''ஏன் அப்படி சொல்ற?'' ''இல்ல, உன் மகன் பேரு, வான்முகில். உன் பேரன் பேரு, ஆர்வா. உன் பேரனை கூப்பிடுறப்ப எல்லாம், என் பெயரைச் சொல்லி கூப்பிடுறார். இதென்ன பெயர் குழப்பம்? ஏதாவது, டிராமா ஆடுகிறாரா, உன் புருஷன்?'' முப்பது நொடிகள் கண்கள் மூடி யோசித்தாள், அம்மா. பின் சொன்னார்... ''அவர் டிராமா ஆடவும் இல்லை. அவருக்கு எந்த மறதி நோயும் இல்லை!'' ''பின்ன?'' ''உனக்கு திருமணமாகி, ஏழு வருஷமாச்சு. உன்னோட, 25 வயசு வரைக்கும், நீ, உன் தந்தையின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த. பள்ளிக்கூடத்துக்கும், டியூஷனுக்கும் போய்ட்டு வரும் நீ, அவரை அப்பான்னு கட்டிக்கப்போவ. 'மண்ணுல உருண்டு புரண்டுட்டு வந்திருக்கான். கை, கால் சுத்தப்படுத்தி, உன் தோழி வீட்டுக்கு அவனை அழைச்சிட்டுப்போ. இப்ப ம ணி சாயந்தரம் ஆறாகுது. இரவு 9:00 மணிக்கு நீங்க ரெண்டு பேரும் வீடு திரும்பினா போதும். மூணு மணிநேர தனிமையில, சில அற்புதமான கவிதைகளை எழுதி விடுவேன்...' என்பார். ''அவருக்கு, மகன் எப்பவும் சுத்தமா இருக்கணும். எப்பவுமே அவன் அறிவை பெருக்கிக்கிட்டே இருக்கணும். கொஞ்சினால், செல்லம் கொடுத்தால் மகன் கெட்டுப் போய் விடுவான் , என்று நினைத்து, உனக்கும், தனக்கும் ஒரு இடைவெளியை, 'மெயின்டைன்' பண்ணுவார், உன் அப்பா. உன்னை டாக்டருக்கு படிக்க வைக்கணும்ங்கறது அவரோட கனவு. அந்த கனவுக்காக அந்த, மனுஷன், தன்னையும் துன்புறுத்திக்கிட்டு, உன்னையும் துன்புறுத்திக்கிட்டு இருந்தார். ''நீ, பதினாறு வயதில் பைக்கை ஓட்டிய போது உன்னை துரத்தி துரத்தி அடித்தார். காரணம் சட்டத்தின் மீது பயம்; உன் பாதுகாப்பின் மீதும் பயம். அவருடைய அன்புக்கும், புத்திர பாசத்துக்கும் தபால்காரியாக நான் செயல்பட்டேன். உன் தந்தையின் ஆழ்மனதில் உனக்கு உரிய பாசத்தை கொட்டாமல், அநீதி இழைத்து விட்டதாக குற்ற உணர்ச்சி கொண்டார். இந்த, ஐந்து ஆண்டுகளாக உன் மீது பொழிய வேண்டிய அன்பை, உன் மகன் மீது பொழிந்து, விட்டுப்போன கணக்கை சரி செய்கிறார், உன் அப்பா. பெயர் மாற்றி அவர் கூப்பிடுவது, ஓர் அனிச்சை செயல். பேரனை, மகனின் பெயரால் அழைத்து, அழைத்து தன்னுடைய கண்டிப்புகளுக்கு பிராயசித்தம் தேடிக் கொள்கிறது, உன் அப்பாவின் ஆழ்மனம். நீ, உன்னுடைய மகனை, உன் அப்பாவோட கண்டிப்பு, 'ஸ்டைலில்'தான் வளர்க்கிறாய். நாளை, உன் மகனுக்கு, குழந்தை பிறக்கும் போது, உன் பேரனை, உன் மகனின் பெயரால், நீ அழைத்தாலும் அழைப்பாய்.'' மன இறுக்கம் கழன்றது. அப்பாவின் மீதிருந்த மிதமிஞ்சிய வெறுப்பு காணாமல் போனது. நெகிழ்ச்சியுடன் மகனை அழைத்து, வாரி அணைத்துக் கொண்டான், வான்முகில். ''என்னப்பா கன்னுக்குட்டி... தாத்தா கூட விளையாடிட்டு வர்றீயா, நட்சத்திரன்?'' என்று வினவினான். நட்சத்திரன்-, வான்முகில்-, ஆர்வா ஆகிய மூன்று தலைமுறை ஆண்களுக்குள், 'டன்' கணக்கில் பாசம் கரைபுரண்டோடி பெயர்கள் சாரைப்பாம்புகளாய் பிணைந்தன. ஏ.வகிதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R K Raman
ஜூன் 21, 2026 13:59

சுத்த அறுவை - பக்கம் வேஸ்ட்


Guruprasad Babu
ஜூன் 21, 2026 12:32

வெரி..வெரி இன்டெரெஸ்ட்டிங் ஸ்டோரி வித் லொஜிக்கல் திங்கிங்.