திண்ணை!
ஒருமுறை, ஹோட்டல் ஒன்றுக்கு சென்று சாப்பிட்டார், என்.எஸ்.கிருஷ்ணன். சாப்பிட்டு முடித்ததும், பில் வந்தது. அதைப் பார்த்துவிட்டு, சுவரில் எழுதப்பட்டிருந்த ஒரு வாசகத்தை பார்த்தார். பிறகு எழுந்து சென்று கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளியிடம், பில்லை மட்டும் கொடுத்து, 'பத்து ரூபாய் தாங்க...' என்றார், என்.எஸ்.கிருஷ்ணன்.அதைக்கேட்டு திடுக்கிட்ட முதலாளி, 'என்ன இது. நம் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, நம்மிடமே பணம் கேட்கிறாரே...' என எண்ணி, குழப்பத்தோடு பார்த்தார். 'என்ன விழிக்கிறீங்க. நீங்க தானே, 'கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்'ன்னு சுவரில் எழுதிப் போட்டிருக்கீங்க. அதான் பணம் கேட்டேன்...' என்றார், என்.எஸ்.கே., ஹோட்டல் முதலாளியும், சக ஊழியர்களும் திரும்பி சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை பார்த்தனர். அங்கு, 'பில்லைக் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்!' என்ற வாசகத்தில், 'பில்லை' என்ற சொல் அழிந்திருந்தது. அதைக்கண்டு அவர்கள் சிரிக்க, என்.எஸ்.கே.,வும் சிரித்தபடி, பில் பணத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது, ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார், ஆப்ரகாம் லிங்கன். அப்போது அவரைப் பிடிக்காத ஒருவன், அவரை அவமானப்படுத்த எண்ணினான்.தன் கால்களில் அணிந்திருந்த செருப்பை துாக்கி காட்டி, 'நீர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் என்பதை மறந்துவிடக் கூடாது. இதோ பாரும், இது உன் தந்தை தைத்த செருப்பு தான். இதைத்தான் நான் பயன்படுத்தி வருகிறேன்...' என்றான்.அவனிடம், 'நான் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் என்பதை, ஒருநாளும் மறந்ததில்லை. உம் செருப்பு இவ்வளவு காலம் உழைப்பதிலிருந்தே தெரிகிறது, என் தந்தை எவ்வளவு சிறந்த தொழிலாளி என்பது. 'ஒருவேளை இந்த செருப்பு பழுதடைந்தால், என்னிடம் கொண்டு வாரும். எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும்; நாட்டை ஆளவும் தெரியும்...' என்றார், ஆப்ரகாம் லிங்கன்.அவரை அவமானப்படுத்த நினைத்தவன், அங்கிருந்து நழுவினான்.***** பிரபல ஹிந்தி பாடகி, லதா மங்கேஷ்கர் மீது, நடிகர் சிவாஜி கணேசனுக்கு தனி அன்பும், மரியாதையும் உண்டு. லதாவைத் தன் தங்கை என்றே சொல்வார். ஒரு சமயம், சிவாஜியை பார்க்க அவரது வீட்டுக்கு வந்தார், லதா மங்கேஷ்கர். வீட்டில் ஒரு கூண்டில் சில குயில்களும், மைனா குருவிகளும் அடைத்து வைக்கப் பட்டிருப்பதை பார்த்தார். உடனே, அவர் சிவாஜியிடம், 'அண்ணே, சுதந்திரமாக பறந்து பாடித் திரியும் இந்தப் பறவைகளை ஏன் இப்படி கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறீர்கள்...' எனக் கேட்டார். 'அவற்றை வறுவல் செய்து சாப்பிடுவதற்குத் தான்...' என்றார், சிவாஜி.உடனே, 'பாவம் அண்ணே. எனக்காக இவைகளை விட்டு விடுங்கள். மென்மையான கலைஞரான நீங்கள், இந்தத் தங்கையின் குரலை ரசிப்பது போல், இந்த பறவைகளின் குரலையும் ரசிக்க வேண்டும்...' என்றார். மறுபேச்சு பேசாமல் கூண்டைத் திறந்து, பறவைகளை விடுவித்தார், சிவாஜி. அதன்பின், பறவை மாமிசத்தை அவர் சாப்பிடவே இல்லை.நடுத்தெரு நாராயணன்